அரசியல்

அரசியல்

உள்ளூர் அரசியலவாதியான குமாரலிங்கத்தின் வீட்டில் அன்று அவர் மனைவி மகள்கள், அவர்களின் குடும்பம் அனைவரும் ரிஷிகேசம் செல்வதற்காக கிளம்பி விட்டனர். இங்கிருந்து டெல்லி வரை இரயிலில் போய் அங்கு இருந்து வண்டி ஏற்பாடு செய்து கொள்வதாக ஏற்பாடு. இவரும் கிளம்பி இருப்பார். மூன்று நாட்களில் அவர் கட்சி சார்பில் ஒரு மாநாடு நடக்கப்போகிறது. அதற்காக அவர் கட்டாயம் இருக்க வேண்டிய சூழ்நிலை. அத்னால் அவர் குடும்பத்தை தடை சொல்லமல் போகச்சொல்லி விட்டார்.
இரயிலில் ஏற்றி அனுப்பிய பின் வீட்டிற்கு வராமல் மாநாடு நடக்கும் இடத்திற்கு கிளம்பி விட்டார். அவருடன் கட்சி தொண்டர்களும் வந்தனர். மாநாட்டு ஏற்பாடுகளை கவனித்து விட்டு இரவு வீட்டுக்கு செல்லும்போது நெடு நேரமாகி விட்டது. களைப்ப்புடன் படுக்கப்போகலாம் என நினைக்கும் போது செல் போன் அடித்தது. எரிச்சலுடன் யார் என பார்க்க அவர் மனைவியின் நம்பர் தெரிய எரிச்சல் காணாமல் போய் என்னம்மா? இந்நேரத்துக்கு போன் பண்ணியிருக்க? பதட்டத்துடன் விசாரித்தார். பயபடறதுக்கு ஒண்ணுமில்லை ட்ரெயின்ல போயிட்டிருக்கோம், நாளைக்கு இராத்திரிக்கு டெல்லி போய் சேர்ந்துடுவோம்னு நினைக்கிறேன். ஆனா மழை வேற இங்க பேஞ்சுகிட்டே இருக்கு, நீங்க இந்நேரம் வரைக்கும் தூங்காம என்ன பண்ணிகிட்டிருக்கீங்க? தூங்க போனவனை எழுப்பியதே நீதான் என்று மனதுக்குள் நினைத்தாரே தவிர வெளியில் சொல்லாமல் கட்சி வேலை இருந்துச்சு, இப்பத்தான் வந்தேன் என்றார். கட்சி கட்சின்னு தூக்கத்தை கெடுக்காம சீக்கிரமாய் போய் படுங்க, அவரை விரட்டி விட்டு இவரின் பதிலை எதிர்பார்க்காமலே செல்போனை அனைத்தாள் அவர் மனைவி.
இன்னும் ஒரு நாள் பாக்கி உள்ள நிலையில் மாநாட்டு வேலைக்காக சூறாவளியாய் தொண்டர்களை விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தார் குமாரலிங்கம். திடீரென்று அவரது செல் போனில் அழைப்பு வந்தது. எடுத்து பார்த்தவர் கட்சித்தலைமை என்றிருந்தவுடன் சொல்லுங்கய்யா, என்று அவர்கள் எதிரில் இருப்பது போல் உடலை குறுக்கி கொண்டு செல் போனை பய பக்தியாய் காதில் வைத்து கேட்டார்.
நாளைக் காலையில் கட்சித் தலைமைக்கு வாய்யா ! சரிங்கய்யா ! பதில் சொல்ல போன் அணைக்கப்பட்டது. மறு நாள் மாநாட்டில் என்ன செய்ய வேண்டும், எப்படி பேச வேண்டும்? என்றூ சொல்வதற்குத்தான் கூப்பிட்டிருக்கிறார்கள். கட்சித்தலைமியிடத்தில் இவரைப்போல் பலருக்கும் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று விளக்கி சொல்லப்பட்டது. ஆளுங்க்கட்சியை தாக்கி பேசவும் அரசாங்க ஊழியர்களை தாக்கி பேசவும் சொல்லப்பட்டது. குமாரலிங்கத்திற்கு இராணுவத்தை தாக்கி பேசவும் அறிவுறுத்தப் பட்டது.
மாநாட்டில் குமாரலிங்கத்திற்கு பேச வாய்ப்பு வந்தவுடன் அவர் இந்த பேச்சில் தலைமையை எப்படியாவது கவர்ந்து விடவேண்டும் என்று முடிவு செய்து இராணுவத்தை பற்றியும், அவர்களின் செயல்களைப் பற்றியும் தனக்கு தோன்றியபடி எல்லாம் பேச ஆரம்பித்தார். கட்சித்தலைமை அவரின் பேச்சை ஆவலுடன் பார்ப்பதை ஓரக்கண்ணால் கவனித்தவருக்கு மகிழ்ச்சி தாங்காமல் இன்னும் தனது தாக்குதல் பேச்சை அதிகமாக்கினார்.
இரவு வீட்டில் வந்து படுத்த குமாரலிங்கம் அளவு கடந்த சந்தோசத்தில் இருந்தார். கட்சித் தலைமை அவரை நன்றாக பேசியதாக பாராட்டியதில் உச்சி குளிர்ந்திருந்தார். எப்படியும் ஒரு தொகுதியை வாங்கிவிடலாம் என்று முடிவே செய்து விட்டார்.
“காலை” எழுந்து குளித்து தயாராகி, நடந்து முடிந்த மாநாட்டில் தன்னைப்பற்றி ஏதேனும் செய்தி வந்துள்ளதா என்ற ஆவலுடன் செய்தி தொலைக்காட்சியை “ஆன்” செய்தவர் அதிர்ந்து நின்று விட்டார். அவருடைய குடும்பம் கண்ணீர் மல்க “நமது இராணுவத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” எங்கள் குடும்பத்தையே அந்த மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி கரை சேர்த்த்தை உயிர் உள்ளவரை மறக்க மாட்டோம் என்று செய்தி சேகரிப்பவரிடன் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (25-Feb-19, 3:30 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : arasiyal
பார்வை : 173

மேலே