தந்தையின் ஓர் நாள்

காலையில் ஆறு மணிக்குள் எழுந்து
பிள்ளைகளுக்கு பள்ளி உள்ளதோ இல்லையோ
அவர்களையும்
சேர்த்து எழுப்பி
நேற்றின் கலைப்போடு முகமுதிர்ந்து
முடிதிருத்த சவரக்கத்தி எடுத்தால்
அது துறுப்படித்திருக்கும்
அதை மாற்றினால் இன்னொரு செலவு வருமே என் எண்ணி
அந்த கத்தியிலேயே சவரம் செய்து
குளித்துவிட்டு சாப்பிட வந்தால்
நேற்று மிஞ்சிய சாதமும்
இன்றைய தோசையும் இருக்கும்
சுவை வாய் வரைதான் என்று பழையசாதத்தையும் சலிக்காமல் சாப்பிட்டு
வேலைக்கு செல்ல பறப்பட்டால்
வண்டியிலோ எரிபொருள் இருக்காது
பிள்ளைகளை வேறு பள்ளியில் விட வேண்டும்
சரி என சொல்லி
பேருந்தில் ஏறி
பிள்ளைகளையும் பேருந்தில் ஏற்றி
பள்ளியிலே விட்டு விட்டு
அலுலகம் சென்றால் முதலாளி கேட்பார் "ஏன் தாமதம்?" என்று
நடந்ததை முழுதும் அவரிடம் கூறி வேலையில் அமர்ந்தால்
குழுவின் தலைவர் கேட்பார்
"சென்ற வாரம் சொன்ன வேலை எங்கே?" என்று
அவரிடம் சாக்குபோக்கு சொல்லி
வேலைக்கு திரும்பினால் நேரம் போவதே தெரியாது
மதியம் சாப்பிட நினைத்து பையை எடுத்தால்
எடுத்து வைத்த பை வீட்டிலிருக்கும்
வெளியில் வாங்கி சாப்பிட மனமுமில்லாமல்
பிறரிடம் கேட்க துணிவுமில்லாமல்
அன்று முழுதும் பட்டினியே வேலை செய்து
மாலை வரை உழைத்து
இன்னும் சற்று நேரம் உழைத்தால்
இன்னும் கொஞ்சம் வருமானம் வருமே என எண்ணி
ஐந்து மணிக்கு முடிக்க வேண்டிய வேலையை
எட்டு மணி வரை நீட்டித்து உழைத்து
வீடு திரும்ப பேருந்து நிறுத்துமிடம் வந்தால்
பேருந்தே வராது பின்
ஒன்பது மணிக்கு வரும் பேருந்திலேறி
நெரிசலில்,
காலோ மிதிபட
தலையோ இடிபட பயணித்து
வெறும் கையோடு வீட்டுக்கு சென்றால்
பிள்ளைகள் ஏதாவது கேட்பார்களென்று
வீட்டுக்கு முன்னறே இறங்கி அருகில் உள்ள கடையில்
பண்டங்கள் வாங்கி
வீட்டுக்கு தேவையானதையும் வாங்கி
வீடு வரை நடந்தே வந்தால்
காலையில் தேய்த்த சட்டை
வியர்வை வாடையோடு கசங்கியிருக்கும்
அதை தான் நாளையும் போட வேண்டுமென்று பத்திரப்படுத்தி
வாங்கிவந்ததை மனைவியிடம் கொடுக்க
"மதியம் சாப்பிட்டீரா?" என கேட்க
"வெளியில் வாங்கி சாப்பிட்டேன்" என பொய்யுரைத்து
பிள்ளைகளுக்கு பண்டங்களை கொடுத்து விட்டு
இரவு சாப்பாட்டை முடித்து மேஜையில் அமர்ந்தால்
அருகில் அழுகிய நிலையிலோர் ஆப்பிளிருக்கும்
தன் குழந்தைகளுக்கு அப்பழத்தின் அழுகா பக்கத்தை கொடுத்து
அழுகிய பக்கத்தை மட்டும் முகம் சழிக்காமல் உண்டு முடித்தால்
பிள்ளை கேட்கும்
"அப்பா இந்த பாடம் சொல்லி தாப்பா" என்று
இருந்த கலைப்போடு அதையும் சொல்லி கொடுத்து
பிள்ளைகளை தூங்க வைத்துவிட்டு
படுக்க சென்றால் தடீரென மின்சாரம் துண்டிக்கும்
பிள்ளைகளுக்கு வியர்க்குமே என அருகில் அமர்ந்து
விசிறிக்கொண்டே
நாளையும் இந்நாள் மாதிரி அமையக்கூடாது என்று நினைத்தபடியே காலையில் எழ அலாரம் வைத்துவிட்டு
விசிறியபடியே தூங்கி
நாளையின் கனவுகளோடு முடிகிறது

எழுதியவர் : கா.மணிகண்டன் (25-Feb-19, 3:47 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
பார்வை : 2192

மேலே