தலையங்கம்---------தடம் ஆசிரியர் குழு தடம் ஆசிரியர் குழு
கல்வி குறித்த அக்கறையுள்ளவர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் ‘ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு அரசுத்தேர்வு நடத்த வேண்டும்’ என்ற மத்திய அரசின் உத்தரவும் ஆழ்ந்த பரிசீலனைக்கும் விவாதத்துக்கும் உரியவை.
மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், அனிதா எனும் மாணவியின் தற்கொலை, அதைத் தொடர்ந்து நடைபெற்ற அரசியல் கிளர்ச்சிகள், நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிகள், அதை ஈடுகட்ட கருணை மதிப்பெண் வழங்கியும் நீக்கியும் மொழிந்த நீதிமன்றத் தீர்ப்புகள், தேர்வு மையப் பிரச்னைகள் ஆகியவை இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகச் சூழலில் பேசுபொருள்களாக இருந்துவருகின்றன.
இந்தியாவில் அதிகம் மருத்துவக் கல்லூரிகள் உள்ள மிகச் சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. சிறப்பான மருத்துவக் கல்விக்குரிய வசதிகளும் உள்கட்டமைப்புகளும் தமிழகத்தைத் திறன்வாய்ந்த மருத்துவ மாநிலமாக மாற்றியுள்ளது. நுழைவுத்தேர்வுகள் எதையும் எதிர்கொள்ளாமல், மருத்துவக் கல்வியைப் பயிலும் கல்விக்கொள்கை மூலம்தான் இது சாத்தியமானது. நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளும் ஆற்றல் நம் மாணவர்களுக்கு உண்டு. ஆயினும், ப்ளஸ் டூ வரை வெவ்வேறு பாடத்திட்டங்களில் கற்கும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு, அதுவும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு, அதை நடைமுறைப்படுத்துவதிலும் குளறுபடிகள் என்பது ஒரு சமூக அநீதியாகும்.
இதில், அநீதியின் அடுத்தகட்டம், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு. இது மிகச்சாதாரண சமூக-பொருளாதாரப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். சமூகம் சீரற்ற வளர்ச்சியை நோக்கிச் செல்லும். பள்ளி, பாடப்புத்தகம், தேர்வுமுறை ஆகியவற்றின்மீது சிறுவயதிலேயே மிரட்சியை ஏற்படுத்தும். சமூகக் கட்டுமானம் குறித்த புரிந்துணர்வு இல்லாதவர்களால் மட்டுமே இப்படியான ஒரு முடிவை எடுக்க முடியும்.
சத்துணவு, இலவசச் சீருடை, இலவச பஸ்பாஸ் என மக்கள்நலத் திட்டங்களின் மூலம், அடித்தட்டு மக்களிடமும் கல்வியைக் கொண்டுசேர்த்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. ‘இந்தக் கல்வியாண்டில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு கிடையாது’ எனும் உயர்கல்வித் துறை அமைச்சரின் முடிவு ஆறுதலளிக்கிறது. இது, நிரந்தர அறிவிப்பாக வேண்டும். மத்திய அரசின் முடிவும் விமர்சிக்கப்பட வேண்டும். தேர்வுமுறை, மதிப்பெண் வழங்கும் முறை, நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வு ஆகியவை குறித்த உரையாடல்கள், மாற்றுக்கல்வி முன்னுதாரணங்களை அடிப்படையாகக்கொண்டு தொடங்கப்பட வேண்டியது நம் சமகால அவசியம்.
- ஆசிரியர்