ஊடலின் சொற்கள்
கூடலின் சொற்களை மருந்துக்கும்
எடுத்துக் கொள்ளாத நீ
ஊடலின் பொருட்டு நான் வீசி எறியும்
சொற்களை மட்டும் பொறுக்கி எடுத்து
வைத்துக் கொள்வதேனோ
அவை கனம் மிக்கவை
அவை சுடுபவை
அவை கூர்மையானவை
அவை பகடியானவை
அவை நரியைப் போன்றவை
அவை மொத்தத்தில் என்னைப் போன்றவை
ஏதோ சினத்தில் வீசியதை எல்லாம்
பொறுக்காதே
விட்டுவிடு சிறிது நேரத்தில் வந்து அவையே
என் கழுத்தை அறுக்கும்
நான் பார்த்துக் கொள்கிறேன்
புரிகிறதா உனக்கு