மரணம்
உன் பிரிவின் தாக்கம் எனக்குள் சிறிது தான்
இருந்தும் பிரிவை விரும்பா நான்
உன்னை வழியனுப்புகையில் மௌனமாய்
சிறிது கலங்குகிறேன்
வாழ்வின் சூதில் சிக்கித் தவித்து
இறுதியில் இவ்வாழ்வே சூதில் சாகும்
உனக்கான என் துளிக் கண்ணீரை
கீழிமைகளின் மயிர் நுனிகளில்
தேக்கி வைக்கிறேன்
உன் பிரிவின் ஆற்றாமையால்
அத்தனை மௌனமாய்
அத்தனை திடமாய்
அத்தனை பொலிவாய் நின்
முகம் காண்கையில் எங்கோ
குறுகுறுக்கிறது உன்னை இழந்து விட்டதாய்
எப்பொழுதாவது சந்தித்துக் கொண்ட நாம்
இனி எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம்
நின் பெயர் சொல்லப்படுகிறதோ
அங்கெல்லாம் நின் முகம்
மனக்கண் தனில் விரியும் ஓவியமாய்
வாழ்வு ஒரு தேறவியலா கடும் பாடம்
உன்னைக் கொண்டு தான் தேற முற்பட்டேன்
எப்படி முடிப்பேன் இதைச் சொற்களோடு
நிலையற்ற வாழ்வைப் போல்
நிலையற்ற இதுவும் இப்படியே முடிகிறது
நிலையற்ற இதையே கடைசி வரிகளாய் கொண்டு