வீழ்வேனென்று நினைத்தாயோ

அமுதெனச் சித்தரித்த அற்புத மொழியாம் தாய்மொழியை, அருந்திடத் துடிக்க நான் - அகந்தையுடன் வெறுக்கக் கண்டேன், தவிர்க்கக் கண்டேன், தமிழனாய்ப் பிறந்து என் தமிழுக்கே அந்நியரான சிலரால் - அகந்தையுடன் வெறுக்கக் கண்டேன், தவிர்க்கக் கண்டேன்.

கருணைக் கொலையெனும் பெயரில் கருவறுக்கும் நிலை - என் தமிழுக்கு.
கண்டது பொறுக்கவில்லை, காயங்கள் மறக்கவில்லை.
தமிழில்லாத் தமிழினம் செவியனைத்தும் செவிடாக, செங்குருதி பெருக்கெடுக்க, செந்தனலாய் வெந்தனலாய் வேறூன்றினாள் - தமிழ்த்தாய், தன் உன்னத நிலையை.

தொன்மை எனும் அகவை தொடர்ந்து,
தொல்காப்பியம் தனில் உரைக்கக் கண்டு,
தொண்டுகள் பல தொடர்ந்து செய்யலால்,
தொலைந்து போவேன் என நினைத்தாயோ!
தமிழாகிய நான் தொலைந்து போவேனென நினைத்தாயோ!!

பகுத்தறிவு பாடம் புகட்டி, பகலவன் வலம்வரும் வேளையிலும்
பகுக்காபடி ஓருயிர் போதும் வாழ்வதற்கு - எனினும்
பன்னிரெண்டு உயிரையும் பகுத்து, நீ பல்லாங்குழி ஆடிட - நான்
பட்டென சாய்வே னென்று நினைத்தாயோ!

இயற்கையின் பரிணாம விதியாம், ஏற்றுக்கொள்ளவும் ஒன்று
இச்சை கொண்ட உடைமை இசைந்துபோக மறுத்து,
ஒன்றின் அழிவில் மற்றொன்றின் ஆக்கமாம்,
ஒன்றின் அழிவில் மற்றொன்றின் ஆக்கமாம் - அன்னைத்தமிழ்
அழிந்தொழிவேன் என்று நினைத்தாயோ!

செவ்வியல்புகள் சூழ செந்தமிழாய் நின்ற - எம்மொழி
செய்தற்கரிய செயல் பற்பல செய்யினும்,
சின்னஞ்சிறு மொழியின் ஊடே - தமிழ்
சிதைந்து போவேன் என நினைத்தாயோ!

கரையும் மெழுகில் இருளைக் கடக்கலாம்,
காரணமின்றிக் கரங்களைக் கோர்க்கலாம்.
கடந்துவந்த பாதைதனை நீ மறக்க "கன்னித்தமிழ்" - நான்
காணல் நீராவே னென நினைத்தாயோ!

தீதும் நன்றும் பிறர்தர வாரா, என்றுரைத்து
தித்திக்கும் தெள்ளுதமிழ் இனிமை கூட்ட
தீந்தமிழ் நித்தம் பரவிட வழியின்றி - நான்
தீக்கிரையாவேன் என நினைத்தாயோ!

மங்கையெனும் பெயரெடுத்து, தமிழ்தாயாய் வலம் வருகையில்
மருவிவந்த பிற மொழியின்பால் - நான்
மதிமயங்கி மான் தன்னை விட்டு,
மறுகரை அடையுமுன் மாய்வேனென்று நினைத்தாயோ!

பைந்தமிழ் பழகவே நாவினிது என்றிருக்க,
பாகற்காயாய்க் கசந்ததாய் பட்டென வெறுக்கப்
பரிவாரங்கள் பல பகட்டாகச் செய்து - உன்னைப்
பணிந்து போவேன் என்று நனைத்தாயோ!

வீறுகொண்ட நெஞ்சம் விழுந்திடாதருக்க - விந்தைகள் செய்து
வீண்பழி சமந்து, வீரத்தமிழ் மங்கை - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ - உன்னை
வீழ்த்துவேன் என்று பயந்தாயோ!

தமிழின் பேச்சில் தன்னை மறந்தேன்
தன்னிகரில்லாத் தனித்துவம் உணர்ந்தேன்.

வீரமும் மானமும் எங்களின் உடமை
வீழ்த்திட நினைப்பது எதிரியின் மடமை.

எழுதியவர் : கவி (14-Mar-19, 4:49 pm)
சேர்த்தது : Kavibharathi
பார்வை : 1237

மேலே