கறைப்படியாமல் காப்பாற்று

கறை படியாமல் காப்பாற்று
----------------------------------------------
உடுத்தும் உடை உன் உயர்வைக் காட்டும்-உன்
உணவோ நல் உணர்வைக்
கூட்டும். இவை இரண்டும்
கூளமாகாமல் காப்பாற்று!

புறத்தூய்மை போதுமா
அகத்தூய்மை அதனினும்
மேன்மை அன்றோ?
மனத்தைச் சிறிதளவும்
மாசில்லாமல் காப்பாற்று!

இனியன பேணு இன்சொல் பழகு
இன்பமான சுவை என்றும்
உண்ணும் உணவில் மட்டுமல்ல
உணர்ந்து கூறும் சொல்லிலுமாம் கனியிருக்கக் காய் காணாமல்
கண்ணியமாய் நா காத்திருப்பாய்!

உன்னில் இருக்கும் இறைவனை
உன் புன்னகையால் தெரிவிப்பாய்
இறைவன் நமக்களித்த நல் வரமாம்
இன்முகம்! அதில் நகைக்கூட்டி -பிறர்
இன்னல் துடைத்து பேரின்பமடைவாய்!

பிறரை வருத்தும உன்சொல்
பின்பு உன்னை மிகவருத்தும்
இவ்உண்மை மறக்காமல்
இனிய மருந்தாவாய்!
பிறர்மனவலி போக்கும்
பண்புள்ள மருத்துவனாவாய்¡

இனியசொல் பழகு
இவ்உலகம் உனதாகும்
கிட்டும் இன்பமோ எளிதில்
கிடைக்காத நிதியாகும்
இறைவனருள் கிட்டும்
மறைவழி புரியும்!
உன்னில் இருக்கிறது
உன் இன்பம் எனவே
கறைபடியாமல் மனத்தைக்காப்பாற்று!

எழுதியவர் : சாந்தா வெங்கட் (21-Mar-19, 1:07 am)
சேர்த்தது : சாந்தா
பார்வை : 1009

மேலே