ஆணவக் கொலை---பாடல்---

காந்தி தேசமே மெட்டில் :


பல்லவி :

காதல் பூக்களோ?... காயம் பட்டதே...
சாதி கத்தியால் வேரைத் தொட்டதே...

குருதியின் மழையினில் பூமியில் ஓடும் நதி சிவக்குதே
கொடுமைகள் பார்த்துக் கொதித்திடும் உயிர்களின்
விழி சிவக்குதே... விழி சிவக்குதே...

வேத ஓட்டையோ?... பேதம் காட்டுதே... (2)


சரணம் 1 :

காதலின் வேள்வியில் சாதியை எரிப்பதில்
சரித்திரம் பிறப்பதுண்டு சமத்துவம் பிறக்குமன்று...
இருவுள்ளம் இணைகின்ற மாற்றங்கள் தருகின்ற
உறவுக்கு வலிமையுண்டு உலகுக்கு விடியலன்று...

சாதியை மறுப்பதை மதங்களைக் கடப்பதைப்
பகையென நினைப்பதென்ன பலியிட துடிப்பதென்ன
வலியவர் உடலினில் மெலியவர் நிழலது
விழுந்ததும் அடிப்பதென்ன விழும்வரை வதைப்பதென்ன...

காதல் நெஞ்சங்கள் காவல் கேட்டிங்கு மண்ணில் வீழ்கிறதே
கோவில் தெய்வங்கள் கோபம் வீணென்று கல்லில் வாழ்கிறதே...

காதல் பூக்களோ?...


சரணம் 2 :

பள்ளியில் பாடத்தைப் போதிக்கும் சான்றோரும்
கற்றதை மறுப்பதுண்டு கங்கையும் அசுத்தமன்று
ஆணவக் கூட்டங்கள் பிள்ளையின் பிணத்தினை
வீட்டுக்குள் புதைப்பதுண்டு வீதிக்குள் நடிக்குமன்று...

பிறப்பினில் மேலென்றும் கீழென்றும் பார்க்கின்ற
பார்வையில் மாற்றமென்றோ?... பாசமும் பூக்குமன்றே
அன்னையும் தந்தையும் ஏற்றிடும் காதலைப்
பாவிகள் ஏற்பதென்றோ?... பாவமும் தோற்குமன்றே...

பறவைகள் போல மக்கள் வாழ்கின்ற உலகந்தான் வேண்டுமே
யாவரும் ஒன்று என்ற பார்வைக்குள் விடியல்தான் தோன்றுமே...

காதல் பூக்களோ?...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 5:06 pm)
பார்வை : 33

மேலே