வண்ணப் பாடல்

வண்ணப்பாடல்...
சந்தக் குழிப்பு :
**************
தனத்த தானன தானன தானன
தத்தத் தனதன தந்தன தந்தன
தனதன தனதன தனதன தனதன. . . . . . தனதானா

கிழக்கி லேயெழு ஞாயிறு பேரொளி
வட்டத் தினையிரு கண்களு முண்டது
கிடுகிடு கிடுவென இருளது விலகிடு . . . . மதிகாலை !
கிறுக்கி னேனொரு பாடலை யாவலில்
ஒற்றைக் கதிரதை நெஞ்சமும் வென்றது
கிளுகிளு கிளுவென எழுதிய கவிதையு . . . . மிதுதானே !
செழித்த சோலையி லேதிகழ் வாவியில்
மெத்தக் கனிவோடு கெண்டையி ரண்டுடன்
சிறுகயல் மலரொடு குலவிடு மழகினில் . . . . . நனைவேனே
தெறித்து நீரலை மேனியி லேபட
முத்துச் சரமென நெஞ்சில்வ ழிந்ததன்
திகழொளி விழிகளி னிமைகளை வருடிடு . . . . . மிதமாமே !
வழக்க மாயிது தான்நித மேகிடும்
சுற்றிக் குளமதில் வண்டுப றந்திடும்
மழைவரு பொழுதினில் மலரித ழடியினை . . . . . யதுநாடும் !
வருத்த மேயிலை யோவெனும் பார்வையில்
வெட்கப் படுமலர் கண்டுநெ கிழ்ந்திடும்
மதுவுண மொகுமொகு மொகுவென வொலிசெயும் . . . . . வடிவோடே !
உழைக்கு மேருழ வோரது காளைகள்
பட்டிக் கதவுதி றந்திட வந்திடும்
ஒலியது கலகல கலவென விருசெவி . . . . . களில்மோதும்
உளத்தில் லோடிடு மாவலி மாறிட
நத்தத் துடனவர் சென்றுதொ டர்ந்திட
உழவரி னுயர்தொழி லிதுவென மனமது . . . . மகிழாதோ ?

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Mar-19, 10:53 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 56

மேலே