கோளன்வாய்ச் சொல்லின் கொடுமைக்குத் தப்பி மீள முடியுமோ - குறளை, தருமதீபிகை 144
நேரிசை வெண்பா
வில்லுக்கும் வாளுக்கும் வெய்யவடி வேலுக்கும்
கல்லுக்கும் தப்பிக் கடந்திடலாம் - பொல்லாத
கோளன்வாய்ச் சொல்லின் கொடுமைக்குத் தப்பியிறை
மீள முடியுமோ மேல். 144
- குறளை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
வில், வாள், வேல், கல் முதலிய கொலைக் கருவிகளுக்கு எளிதே தப்பி உய்யலாம்; கோள் சொல்பவனின் பொல்லாத சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தப்பி உய்தல் அரிது எனப்படுகிறது.
தொலையிலுள்ளவர்களையும் விரைவில் எய்து கொல்ல வல்ல அதன் வேக நிலை கருதி வில்லை முதலில் குறித்தது. வடி - கூர்மை. கடத்தல் - அபாயத்தினின்று நீங்குதல்.
கொலை பாதகங்களை நிலையாக விளைத்து வரும் கொடுமை நோக்கி பொல்லாத கோளன் என்றது. பாம்பின் பல்லில் உள்ளது போல் அவனுடைய சொல்லில் நஞ்சுள்ளமையால் அவ்வாய்ச் சொல் தீச்சொல்லானது.
வேல் வாள் முதலிய படைக்கலங்கள் வெளிப்படையாகக் கண் எதிரே வருவன ஆதலால், ஆவன ஆற்றி அவற்றின் கேடுகளுக்கு விலகிப் பிழைக்கலாம். கோள் யாரும் அறியாமல் ஊழ் வினை போல் உறவினர் மூலமாக உள்ளே உருத்து வருதலால் அதனை எதிரறிந்து விலக்குவது மிகவும் அரிதாம்.
கோளின் தீமையிலிருந்து தப்பி யாரும் வாழ முடியாது என்பதனால் மேல் மீள முடியுமோ? எனப்பட்டது.
இறை - சிறிது, கொஞ்சம்; எதிரறிந்து பாதுகாக்க முடியாமையால் கோள் எவ்வழியும் குடிகேடு செய்தே விடும். இறை என்னும் குறிப்பால் பெருவலியுடைய அரசனாலும் கோள் வலியைக் கடந்து மீள முடியாது என்பது புலனாம்.
பெரிய போர் வீரனான இராமனும் கூனியின் கோளால் முடி துறந்து படாத பாடுகள் பட்டுப் பதைத்து உழன்றான்.
நெடிய மகுட மன்னரே கொடிய கோளனல் குடி கெடுவர் என்றமையால், நம் போன்ற சாமான்யர்கள் கோளினால் அவதியுறும் படுபாதகமான பழி நிலைமையை அறியலாம்.
கோளன் என்று தெரிந்தபின் அண்ணன் தம்பியாய் இருந்தாலும் அவன் தொடர்பை விலக்கித் தூர இருக்க வேண்டும்.