குணனுடைய மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு – நாலடியார் 91

நேரிசை வெண்பா

இல்லா விடத்தும் இயைந்த அளவினால்
உள்ள விடம்போற் பெரிதுவந்து – மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்(கு)
அடையாவாம் ஆண்டைக் கதவு. 91 ஈகை, நாலடியார்

பொருளுரை:

பொருளில்லாத காலத்திலும் கூடிய அளவினால் பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.

கருத்து:

ஈகைக் குணமுடையவர்கள் மறுமையின்பம் பெறுவர்.

விளக்கம்:

இடம் என்றது இங்கே காலங் குறித்து நின்றது. மெல்ல - மென்மையாக;

அவ்வுலகமென்றது துறக்கம்.

அறிவு, அன்பு முதலிய உயிர்க்குணங்களிலும், உதவுகின்ற இயற்கையோடு கூடிய குணங்களே மாட்சிமையுற்று மறுமைப் பயனுக்கு ஏதுவாகலின், ‘கொடையொடு பட்டகுணன்' என்றார்.

‘அடையாவாம் ஆண்டைக் கதவு' என்னுங் கருத்து, மேலும்1 வரும். குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம். நின்றது வாயில் திறந்து'2என்றார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Apr-19, 9:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே