நீ எனக்கு முடிவற்றவள்
கோயில் சிற்பங்கள் சில சமயம்
திசை மாறி விடுகின்றதாம்
எனக்கு தெரியும் அன்றெல்லாம்
நீ தரிசனம் பார்க்க சென்றிருப்பாய்
உன் அழகைப்பற்றி என்ன கூற
நான் என் வறுமையை உணர்வது
இதை விவரிக்க முடியாத போதுதான்
இந்த தெருவின் மரங்கள் கோடையிலும்
பூக்கள் தருகிறதாம்
நீ வசிக்கும் தெருவில் இதெல்லாம்
ஒரு அதிசயமா..?
உன் கொலுசு ஜதைகளின் ஓசை கேட்டதும்
எல்லா சன்னலிலும் தலை முளைக்கின்றன
நீ போகும் தெருவெல்லாம் கண்கள்
அலட்சியங்களின் வழியாவும் கர்வத்தை உணர்த்த
உன்னிடம்தான் பாடம் கேட்க வேண்டும்
இங்கிருக்கும் ஜவுளி கடைகளில்தான்
உன் ஆடைகள் வாங்கப்படுகிறது
நீ அணிந்த பிறகுதான்
அவைகளுக்கு ஒரு தேவதையை தழுவும்
இறுமாப்பு வந்துவிடுகிறது
நீ தேர்ந்த அரசியல்வாதிதான்
ஏனெனில் உனக்கு வன்முறையும் தெரிகிறது
அதை செலுத்தவும் நன்றாக தெரிகிறது
குளிர்ச்சியான எதை தொடும்போதும்
உன் பார்வை ஞாபகம் வருகிறது
வெப்பமான எதை உணரும் போதும்
உன் அலட்சியம் ஞாபகம் வருகிறது
ஒரு மழைக்காக அனைவரும் வருணபகவானை
வேண்டுகிறார்கள்
நான் நனைகின்ற மழைக்கு உனக்குத்தான்
ஏதாவது நேர்த்திக்கடன் செலுத்துவதாக
வேண்டிக்கொள்ள வேண்டும்
என் பிரத்யேக மழை நீதானே
உன்னை எழுதும் கவிதைகளுக்கு
முற்றுப்புள்ளிகள் கிடையாது
ஏதோ ஒரு இடத்தில் நான்தான் வலுக்கட்டாயமாக
அதை வைக்க வேண்டியுள்ளது
நீ எனக்கு முடிவற்றவள்