கேள்வித்தாலாட்டு

கேள்வித் தாலாட்டு

ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ . . .
தாலாட்டுப்பாடிடுவேன்
என்தங்கமே தன்னிலை
மறந்து நீ தூங்கணுமே
நான் பெற்ற செல்வமே
நல்ல தமிழ் சந்தமே
ஏனழுகின்றாய் என்னுயிரே
என் நிலையறிந்து அழுகின்றாயோ
அல்ல உனக்கேனிந்த நிலை
என்றெண்ணி அழுகின்றாயோ ?
எல்லோருக்கும் துன்பமிருந்தும்
உன்போல் துயர் பெற்றோர்
இல்லையென்றெண்ணி உள்ளங்குமுறி
உயிர் துடித்து அழுகின்றாயோ ?

ஒருவேளை பசிக்கே - குடிக்க
பாலின்றி பதறிப்போய் அழுகின்றாயோ
பாவி நான் என் செய்வேன்
சுரக்கின்ற சக்தி என்னிலில்லை
இறக்கின்ற சக்தியும் எனக்கில்லை
மைந்தனாய் உனை பெற்றதனால்
மண்ணுலகில் வாழ்கின்றேன்
கண்ணயர்ந்து தூங்கடா
என் கண்மணியே. . .
துக்கம் நீ கொண்டு துயில்தனை
இழந்ததால் துடிதுடித்து
அழுகின்றாயோ - அல்ல
இளம்பிஞ்சினிலே இன்னல்கள் கண்டதால்
இதயம் வெடித்து அழுகின்றாயோ ?
பாவியென் வயிற்றில் பிறந்ததால்
பாழாகிப்போவோம் என்றெண்ணி
பிஞ்சு நீ வெம்பி அழுகின்றாயோ ?
செல்வம் கொழித்த வீட்டில்
பிறக்கவில்லை என்றெண்ணி
சிந்தை கொண்டு அழுகின்றாயோ
முழுகாமல் நானெடுத்த நல்முத்தே
நீதானே எனக்கென்றும் சொத்தே
உன்கண்ணில் கண்ணீர் வேண்டா
உயிர் நான் வாழ்வது உனக்காக
உடலை நான் வளர்த்தேன் எதற்காக
இழிசெயல் நான் புரிந்தாலும்
பழியுன்னை அண்டாமல் பாதுகாப்பேன்
வழி நீயறிந்து கொண்டால் - என்
வாழ்வை நான் முடிப்பேன் .

என் வண்ணமயில் கண்ணனே
உன் எண்ணமைல் ஓட்டங்களை
எடுத்தெறிந்துவிட்டு நிம்மதியாய் தூங்கடா
வாழ்வில் நல்மதி கொண்டு
நிலவாய் ஒளிர வேணுமடா
விடியுங்காலை உன் வாழ்வில்
நல்ல விடியலைக்கொடுக்குமடா.

மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (13-Apr-19, 3:21 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 135

மேலே