மலையாளப்பாடல்கள் - ----------------கடிதம் ------------------

ஜெ



இன்று உங்கள் தளத்தில் ஒரு வாசகர் எழுதியிருந்த கடிதத்தை வாசித்தேன். அதில் அவர் நீங்கள் மலையாளத் திரைப்படப் பாடல்களை அறிமுகப்படுத்தி, அவற்றை மொழிபெயர்த்து வெளியிடுவதை தான் வாசிப்பதில்லை என்று கூறி, ஏன் அவற்றை வெளியிடுகிறீர்கள் என்று உங்களைக் கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் பதில் கூறியிருந்தீர்கள்.



அவர் கூறியிருப்பது தவறு. நான் விரும்பி வாசிக்கிறேன். அதேபோல வேறு வாசகர்களும் வாசிப்பார்கள். எனவே நீங்கள் தொடர்ந்து மலையாளத் திரைப்படப் பாடல்களை அறிமுகப்படுத்துங்கள். வயலார், ஓ.என்.வி. ஆகியோரது பாடல்களை நீங்கள் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம்.



Hindilyrics.net என்று ஒரு இணையதளம் இருக்கிறது. அதில் இந்திப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். அது இந்திப் பாடல்களின் அர்த்தம் புரிந்து ரசிக்க எனக்கு உதவுகிறது. அதேபோல மலையாளப் பாடல்களுக்கும் யாராவது இணையதளம் தொடங்கி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் பிற மொழிக்காரர்கள் அப்பாடல்களைப் பொருள் உணர்ந்து ரசிப்பார்கள். தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் நான் வரவேற்பேன். வயலார், ஓ.என்.வி., இன்னும் பிற மலையாளக் கவிஞர்களின் திரைப்படப் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து, நூல்களாகவே வெளியிடலாம். தமிழ் மக்கள் நிச்சயம் வாங்கிப் படிப்பார்கள்.



தமிழ்த் திரைப்படப் பாடல்களிலிருந்து, மலையாளத் திரைப்படப் பாடல்கள் வேறுபட்டவையாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கின்றன. மலையாளப் பாடல்களின் கவித்துவம் எனக்குப் பிடித்திருக்கிறது. வைரமுத்து எனக்கு அலுத்துவிட்டார். இன்னொரு கண்ணதாசனின் உதயத்திற்காகக் காத்திருக்கிறேன்.



அன்புடன்,



ஜி.சுந்தர்



அன்புள்ள ஜெ



உங்கள் தளத்தில் இன்றைய தமிழ் வாசகர்கள் மலையாளப்பாடல்களை விரும்ப மாட்டார்கள், ஆகவே அவற்றை மொழியாக்கம் செய்யவேண்டியதில்லை என ஒருவர் எழுதியிருந்த்தைப் பார்த்தேன்



எனக்கு மலையாள இசையில் ஆர்வம் இல்லை. ஆனால் நான் உங்களைக் கவனமாகப் பின்தொடர்பவன். ஆகவே நீங்கள் செல்லும் ஊர்கள், உங்கள் அன்றாட வாழ்க்கை, உங்கள் மன அலைச்சல்கள் எல்லாமே எனக்கு முக்கியம். உங்கள் மலையாளப்பாடல்களை அவ்வாறுதான் நான் பார்க்கிறேன்



ஆனால் அப்படியே ஆரம்பித்து இன்றைக்கு மலையாளப்பாடல்கள் மேல் எனக்கு பெரிய பித்தே உண்டு. அது கதகளிமேல் ஆர்வமாக ஆகியது. கதகளி வீடியோக்களைப் பார்க்கிறேன். கேரளா சென்று கதகளி பார்த்த்தேன். நீங்கள் அழியாவண்ணங்களில் சினிமாப்பாட்டு பற்றி மட்டும் எழுதவில்லை. அன்றைய இசையுலகு கதகளி உலகு பற்றிய செய்திகளை சினிமாப்பாட்டு எப்படி காட்டுகிறது என எழுதுகிறீர்கள். அந்தச் சினிமாப்பாட்டுகள் வழியாக எவ்வளவு மேதைகள் நினைவுகூர்படுகிறார்கள் என காட்டுகிறீர்கள். மிகப்பெரிய கலாச்சாரப் பதிவு அது



வெண்முரசு விவாதங்கள் தளத்தில் வெளியான கர்ணா தயாலு என்ற பதம் மிகமிக அற்புதமானது. கர்ணனாக நடித்த அந்த நடிகர் ஒரு மேதை. என்ன ஒரு முகபாவனைகள். என்ன ஒரு நுண்ணிய நடிப்பு. கிளாஸிக்



எம்.ராஜேந்திரன்

எழுதியவர் : (23-Apr-19, 9:24 am)
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே