பாரதிதாசன் படைப்புலகம்
பாரதிதாசன்
பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த
பெண்களைத் தன் பா திறத்தால்
சரித்திரம் படைக்க வைத்தவர்
பொருள் வைத்தால்
பாடுவோர் மத்தியில்
இவர் பொருள் வைத்துப்
பாடுபவர்
கபிலன் நாவுக்குள்
வைத்ததை
கமலம் பூவுக்குள்
வைத்ததை
தன் பாவுக்குள்
வைத்தவர் இவர்
பாவேந்தன் படைத்தது
பாண்டியன் பரிசு
அவர் கிடைத்தது
பாண்டிச்சேரிக்குப் பரிசு
இவர்
இருண்ட வீட்டில்
குடும்ப விளக்கை
ஏற்றியவர்
இவர்
சரஸ்வதி பெற்றவர் அல்ல
சரஸ்வதியை மகளாய்ப்
பெற்றவர்
இந்தத் தமிழ்க் ( க )விதை
முத்திரையானதும்
நித்திரையானதும் சித்திரையில்
இவரிடம்
கவிதை கற்றவர்கள்
கவிஞர் ஆகவில்லை
கவிதையாகவே ஆனார்கள்
இவர்
யானையில்
தாலாட்டு பெறவில்லை
கலைவாணியின்
வீணையில் தாலாட்டு
பெற்றவர்
பாரதி
பூ நூலை
விடுத்தவர்
பாரதிதாசன்
பா நூலைத்
தொடுத்தவன்
அவர்
கவியுலகின்
தாதா
இவர்
கவிஞர்களுக்கெல்லாம்
தாத்தா
பாரதி
தமிழன்னைக்குக்
கிடைத்தப் புதையல்
இவர்
அவ்வன்னையின்
கிழிந்த சேலைக்குப்
போட்டார் புது தையல்
அவர்
பெண் அடிமை செய்த
பன்னாடைகளைத்
தன் பண் ஆடைகளால்
துவைத்தவர்
இவர் அப் பண் ஆடைகளைப்
பொன் ஆடைகலாய்த்
தைத்தவர்
பாரதி
புதுவையின் வாசன்
இவர்
அப் புது வைரத்தின்
தாசன்
அவர்
புலவர்களுக்கெல்லாம்
புலவர்
அவன் ஊற்றிய
கவிநீரில்
வளர்ந்தப்
புல் இவர்
அவர்
எட்டையபுரத்தார்
இவர்
கவிதையின் புகழை
யாரும்
எட்டாபுரத்தார்
பாரதி
பாற்கடல் கடையாது
நூற்கடல் கடைந்து
அமுதெடுத்த சீனிவாசன்
பரதிதாசனுக்குப்
பிறகு தமிழ்க்கடலில்
முத்தெடுத்தவர் வாணிதாசன்
அவர்
அணிந்தது கருப்பு ஆடை
இவர்
விரட்டத் துணிந்தது
கருப்பு ஆட்டை
இவர் பேனாவில் மை ஊற்றி எழுதவில்லை
பொய் ஊற்றி எழுதவில்லை
நெய் ஊற்றி எழுதினாரோ?
இன்னும் மணக்க வாழ்கிறது
இவர் எழுத்து
புரட்சிக்கவியே
உன்னை நினைக்கத் தாழ்கிறது
என் கழுத்து ..