இலங்கை
உயிர்ப்பு நாளின் பெருவிழாவில்
கோர நிகழ்வு உயிரைக் குடிக்க
இங்கே வெள்ளைத் துணியில்
செங்குருதி வழிய வழிய மூடப்பட்ட
குழந்தைக்குத் தெரியாது வெடியைப் பற்றி
தேவாலயத்தின் மர பெஞ்சில்
தொண்டை கிழிந்து மார் சதை
பிய்ந்து இறந்து போனவனுக்குத்
தெரியாது என்ன ஆகிப் போனதென
மனைவி மக்களோடு வந்து
அவர்களை இழந்து தனியாய்
நிற்கும் அயல் நாட்டு உடன் பிறப்பிற்குத்
தெரியாது மதத்தின் கோரம் பற்றி
வெடியின் ஒலி கேட்டுச் சிதறி
பின் தொடரும் மனித ஓலங்களைக்
கேட்டுக் கொண்டிருக்கும் பறவைகளுக்குத்
தெரியாது மனிதர்கள் மனிதமற்றவர்களென
இதோ இங்கு முகமெல்லாம் நம்
குருதி தெறிக்க அப்படியே நின்று
கொண்டிருக்கும் தேவனுக்கும்
ஆலயத்தின் வெளியே உலவும்
கௌதம புத்தருக்கும்
ஏன் வெடிகுண்டை வைத்தானே அவன்
வணங்கும் நபிகளுக்கும் கூடத்
தெரியாது என்ன நடக்கிறதென
மனிதத்தை இழந்து மதமென்னும்
போர்வையில் கொன்றொழிக்கும்
அவ்வுயிர்களுக்குத் தெரியாது
குரானைப் பற்றியும் இறைவன்
தன்னை மன்னிக்க மாட்டாரென்றும்