காத்தான்குடி ஜெசீமா

முன்னுரை
அண்மையில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளைக் கருவாக வைத்து எழுதப் பட்ட, சிந்திக்க வேண்டிய கதை


மக்கள் கூடி வாழும் ஊர்ப்பெயர்கள் குடி என்று முடிவடைவதுண்டு
இலங்கையின் கிழக்கே நீர்வளமும், நிலவளமும் பெற்றுச் சிறந்த நெற்களஞ்சியமாகத் திகழ்வது மட்டக்களப்பு மாவட்டம் . மகாவலி கங்கையின் ஒரு கிளையான வெருகல் கங்கைப் பெரியாறு தொடக்கம் தெற்கே குமுக்கன் ஆறு வரையும் பரந்து நீண்டு கிடக்கும் ஏறத்தாள 400 கிலோ மீற்றர் நீளமும், 85 கிலோமீற்றர் அகலமும் கொண்ட, வளர்ந்த செழுமை நிறைந்த நிலப்பரப்பாக இப்பிரதேசம் திகழ்கிறது.

மட்டக்களப்பின் பிரதேசங்கள் ஒரு காலத்தில் கண்டி நாயக்க வம்ச அரசுடன் இணைந்திருந்த போதும், கிராமங்களின் ஊர்ப் பெயர்கள் தனித் தமிழிலேயே அமைந்திருந்தன. ஊர்களுக்குப் பெயர்கள் அமையும் போது பொதுவாகவும், சிறப்பாகவும்,அதோடு காரணப் பெயரும் இணைந்து காணப்படுவதே இயற்கை. அது போலவே மட்டக்களப்பு பிரதேசத்தில் இடப்பெயர்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான இடப்பெயர்கள் ஊர். குடி, கேணி, முனை, குடா, காடு, தீவு, துறை, வெளி ஆகிய விகுதிகளை பெயர்களாகக் கொண்டு காணப்படுகின்றன.
மண்டூர் - மண்டு மரங்கள் நிறைந்த குடியிருப்பாக இருந்து இந்தப் பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும். ஏறாவூர் - இந்த ஊரின் பெயரோடு மட்டக்களப்புப் பகுதியில் வாழ்ந்த திமிலருக்கும், முக்குவருமிடையில் நிகழ்ந்த கலகங்கள் தொடர்பு பட்டிருக்கின்றன. முக்குவர் வெற்றி பெறுவதற்காக பட்டாணியரைக் குடியேற்றித் திமிலரை மீண்டும் ஏற விடாமல் செய்ததனால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கதைகள் வழங்கி வருகின்றன. பட்டாணியர் குடியேறிய பின்னரே அவ்வூருக்கு ஏறாவூர் என்ற பெயர் ஏற்பட்டது. மகிழூர் - என்பது மகிழ மரங்கள் நிறைந்த குடியிருப்பாக இருந்து இந்தப் பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும்.
இனி நாம் கதை நடக்கும் காத்தான்குடி என்ற ஊருக்கு வருவோம்.
மக்கள்தொகை பெருகி, ஊரில் இடநெருக்கடி ஏற்பட்டதனால், ஊருக்கு அண்மித்த பகுதிகளில் இருந்த காடுகளை வெட்டி மக்கள் அங்குக் குடியிருப்புக்களை அமைத்தனர். உறவு முறை கொண்ட பல குடியினர் சேர்ந்து வாழ்ந்த இடங்கள் குடியிருப்புக்களாகத் தோற்றம் பெற்றன. காத்தான் குடியிருப்பு, களுவாஞ்சிக் குடியிருப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு, சேனைக் குடியிருப்பு, கல்முனைக் குடியிருப்பு, சிற்றாண்டிக் குடியிருப்பு, புதுக் குடியிருப்பு போன்றவை மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளன. இவற்றில் காத்தான் குடியிருப்பு, களுவாஞ்சிக் குடியிருப்பு, சேனைக் குடியிருப்பு, கல்முனைக் குடியிருப்பு, சிற்றாண்டிக் குடியிருப்பு ஆகியவை தற்காலத்தில் அப்பெயர்களிலுள்ள ஈறு குறைந்து காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, சேனைக்குடி, கல்முனைக்குடி, சிற்றாண்டிகுடி என வழங்கி வருகின்றன.
பூர்வீக காலத்தில் காத்தான் என்னும் வேடன் தனது குடிமக்களுடன், தற்போது 'சின்னப்பள்ளியடி' என வழங்கிவரும் இடத்தில் குடியேறி வாழ்ந்து வந்தான் எனவும், நாளடைவில் அவனின் பெயர்கூட காத்தான்குடி என்று அழைக்கப்பட்டு வரலாயிற்று என்ற ஒரு பரம்பரைக் கதையையும் காத்தான்குடி என்னும் ஊர்ப்பெயரோடு அறிய முடிகிறது. வேட்டையாடி வாழ்ந்த ஊர் காலப்போக்கில் உயர்களை வேட்டை யாடும் சம்பவங்கள் நிறைந்த காத்தான்குடி, சாத்தான் புகுந்த குடியாக மாறும் என ஒருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி இருந்தும் நல்ல மனிதத்தை மதிக்கும் குணம் படைத்தவர்களும் அவ்வூரில் வாழ்கிறார்கள்
1990 இல் இறைவனை வழிபடும் மசூதியில் நடந்த படுகொலை பலர் மனதை இன்றும் விட்டு. அகலாது.
காத்தான்குடி என்றாலே மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல்யமான ஊர் . ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு பேச்சு வழக்கு இருந்து வந்தது . யாழ்ப்பாணத்து மாப்பிள்ளை உத்தியோக, நிமித்தம் மட்டக்களப்புக்குப் போனால், அவர்களை மயக்கி பெண்களை கொடுக்க மந்திரித்த காத்தான்குடிப் பாயோடு ஒட்ட வைத்து விடுவார்கள் என்ற பேச்சு இருந்தது. அது எவ்வளவுக்கு உண்மை என்பது தெரியாது.

இந்த மட்டக்களப்பு நகரில் இருந்து தேற்கே போகும் A4 பாதையில் மூன்று மைல் தூரத்தில் காத்தான்குடி கிராமம் உள்ளது. காத்தான்குடியை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்களுக்குத் தேவை பட்ட போது வட்டிக்குக் கடன் கொடுத்து பின் அவர்கள் பணம் கட்டமுடியாததால் அவர்களின் பூர்வீக காணிகளை அபகரித்தவர்கள் முஸ்லீம்கள் என்பது பலர் விளக்கம .

மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லீம்களுக்கு உத்தியோகம் பார்க்க முன்னுரிமை வழங்கப் பட்டது என்பது பலர் அறிந்ததே. இந்த சலுகையே காத்தான்குடியில் இருந்து பலர் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்து ஏராளம் பணம் சம்பாதித்து தமிழர் காணிகளை வாங்க ஏதுவாக இருந்தது.

காத்தான் குடியை மத்திய கிழக்கு நாடுகளின் சூழலில் அரேபிய மொழி உள்ள பெயர்ப் பலகைகளும் ஈச்ச மரங்களும் உள்ள ஊராக மாற்றினார்கள் . எங்குத் திரும்பினாலும் பள்ளி வாசல்கள். கிழக்கு மாகாணத்தின் துபாயாக காத்தன் குடி மாறியது. வறுமை என்ற சொல்லுக்கு அங்கு இடம் இருக்கவில்லை .

இலங்கையில் உயிர்களை வேட்டை ஆடும் காலாச்சரம் 1948 க்குப் பின் படிப்படியாக இனக் கலவரங்கள் மூலம் வளரத் தொடங்கியது. பெரும்பான்மையினர் புத்தரை வணங்கும் நாட்டில் இந்த கலாச்சாரம் அரசியல் காரணத்துக்கு வேண்டி விட்டது என்று நினைக்கும் போது நம்பமுடியவில்லை இனி நாம் கதைக்கு வருவோம் .
*****

மட்டக்களப்பில் இருந்து தேற்கே நோக்கிச் செல்லும் A4 பெரும் பாதையில் கல்லடி பெரும் பாலத்தைத்தாண்டி சென்றதும் வருவது நல்ல உச்சரிப்பில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனேகர் வாழும் காத்தான்குடி. கிராமம் என்பதை விடச் செல்வம் கொழித்து விளங்கும் நகரம் என்றே சொல்லலாம். மத்திய கிழக்கு நாடுகளின் பணம் அதன் அபிவிருத்திக்கு உதவியது என்பதை எவராலும் மறுக்க முடியாது . அப்பணத்தோடு பயங்கரவாதமும் இறக்குமதி செய்யப்பட்டது .

படுவான் (மேற்கு) கரை, எழுவான் (கிழக்கு) கரையை இணைக்கும் மண்முனை பாலத்தை நோக்கி A4 பதையில் இருந்து மேற்கே செல்லும் அப்துல் ரஹ்மான் பாதையில் இரண்டு மாடிகள் உள்ள மிகப் பெரிய மாளிகை ரஹ்மான் என்பவரின் வீடு. ஆரம்பத்தில் மீன்வர்த்தகத்தில் இருந்த ரஹ்மான். நாளடைவில் ஹாஜியார் என்ற பட்டம் பெற்று கட்ஜு, பாய்,வாசனை பொருட்கள், மீன் போன்றவற்றை ஏற்றுமதி செய்து செல்வந்தவரானவர். அவருக்கு மூன்று பிள்ளைகள் . மூத்தவன் சகீத் . இரண்டாமவன் அப்துல். மூன்றாவது ரஹ்மானின் அன்புக்குரிய மகள் ஜெசீமா. அவர்கள் வீட்டில் தினமும் ஐந்து நேரமும தொழுவுவது வழக்கம் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் ஊரியது ரஹ்மானின் குடும்பம். அந்த குடும்பத்தில் ஜெசீமா சற்று வித்தியாசமான போக்கு உள்ளவள் பர்தா அணிவதை விரும்பமாட்டாள். படிப்பில் கெட்டிக்காரி . சற்று முற்போக்கு சிந்தனை உள்ளவள். பிறருக்கு உதவ வேண்டும் என்றகொள்கையுள்ளவள் . குரானில் உள்ள உண்மை அர்த்தத்தை நன்கு அறிந்தவள். தன் அண்ணன்மாரோடு அவர்களின் குரானைப் பற்றிய தவறான விளக்கத்தை யிட்டு அடிக்கடி வாக்குவாதம் செய்வாள் தமிழ் மொழி மீது பற்றுள்ளவள். சில சமயம் கவிதையும் எழுதுவாள் தான் படித்து டாக்டராகி சமூகத்துக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் உள்ளவள். ஜெசீமாவின் போக்கினை அவளின் சகோதரர்களும் தாயும் விரும்பவில்லை. அவளின் சகோதரர்கள் இருவரும் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி, மத்திய கிழக்கு நாடுகளில் வேலை கிடைத்துச் சென்றார்கள் . அதில் சகீத் ஈராக்கிலும், அப்துல் சீரியாவிலும் வேலை செய்தார்கள் . அனேக முஸ்லீம்களைப் போல் இருவரும் தாடி மீசை வளர்த்திருந்தனர் .

ஜெசீமாவின் வற்புறுத்தலின் பேரில் அவளை மட்டக்களப்பு வின்சென்ட் உயர் மகளிர் கல்லூரியில் (Vincent Girls High school ) சேர்த்து அவளின் வாப்பா (தந்தை) படிப்பித்தார். அவள் படித்த வகுப்பில் இவள் மட்டுமே ஒரு முஸ்லீம் மாணவி. அதனால் அவளோடு பழகும் மாணவிகள் குறைவு. சிவந்தி மட்டுமே அவளோடு நெருங்கிப் பழகுவாள் ஒரே வகுப்பில் படிக்கும் ஜெசுமாவும் சிவந்தி தேவநேசனும்.படிப்பில் ஏற்படும் . சந்தேகத்தைப் பேசித் தீர்த்துக் கொள்வார்கள். தாங்கள் கொண்டுவரும் பகல் போசனத்தைப் பகிர்ந்து உண்பார்கள். கத்தோலிக்க மாணவியான சிவந்திக்கும் முஸ்லீம் மாணவியான ஜெசீமாவுக்கும் இடையே உள்ள நட்பைப் பார்த்து கல்லூரியே வியந்தது. இருவரினது நோக்கமும் தாங்கள் படித்து டாக்டராக வேண்டும் என்பதே . நத்தார் பண்டிகைக்குச் சிவந்தியின் அழைப்பை ஏற்று அவளின் வீட்டுக்கு ஜெசீமா பகல் போசனத்துக்குப் போனாள் . அதே மாதிரி ரம்லான் பண்டிகைக்கு சிவந்தி ஜெசீமாவின் வீட்டுக்குச் சென்றாள். ஜெசீமாவின் தாயுக்கு ஒரு கத்தோலிக்க பெண் தன் வீட்டுக்கு வந்து போவது பிடிக்கவில்லை. தன் தந்தையின் அனுமதி பெற்றே சிவந்தியை தன் வீட்டுக்கு ஜெசீமா கூட்டிச் சென்றாள்.

ஒரு நாள் சிவந்தி, பழுகாமத்தில் உள்ள விபுலானந்தர் சிறுவர் இல்லத்துக்கு ஜெசிமாவை அழைத்துச் சென்று சிறுவர்கள் தியானம் செய்வதைக் காட்டினாள் . அந்த இலத்தில் சாதி, மத பேதம் இன்றி சிறுவர்கள் ஒன்றாகப் பழகினார்கள் ஜெசீமாவுக்கு சிறுவர்களின் போக்கு மிகவும் பிடித்துக் கொண்டது .
****
அன்று ஈஸ்டர் ஞாயிறு. தான் தேவாலயத்துக்குப் போய் பிரார்த்தனை செய்து அதன் பின் தன் வீட்டுக்குப் பகல் போசனத்துக்கு ஜெசீமாவை கூப்பிடுவதாகச் சிவந்தி சொல்லி இருந்தாள் . சிவந்தியின் தொலைப் பேசி அழைப்பை எதிர்பார்த்த படியே ஜெசீமா காத்திருந்த போது தொலைகாட்சியில் கண்ட செய்தி அறிந்து ஜெசீமா அதிர்ந்து போனாள் .கொழும்பிலும், மட்டக்களப்பு ஜியோன் சுவிசேஷ தேவாலயத்தில் குண்டு வெடிப்புக்கு ஒரே நேரத்தில் நடந்து முன் நூறுக்கு மேல் பலி ஆனார்கள். அனேகர் படு காயம் அடைந்தனர் என்றது செய்தி .
.
“ ஐயோ அல்லா. சிவந்தி போனதும் அந்த ஜியோன் தேவாலயத்துகுக் தான் அவளுக்கு என்ன நடந்ததோ தெரியாது” ஜெசீமா பதறினாள் . உடனே தந்தையின் உதவியோடு . இருவரும் குண்டு வெடித்த தேவாலயத்துக்குச் சென்று இறந்தவர்களின் உடல்களைப் பார்த்தபோது அதில் சிவந்தியின் உடல் இருக்கவில்லை . சில நேரம் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு அவளை எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று ஜெசீமா தன் தந்தைக்குச் சொன்னாள்
இருவரும் ஆஸ்பத்திரிக்குச் சென்று காயப் பட்டவர்களுக்குச் சிகிச்சை நடக்கும் வோர்டுக்கு சென்றனர் குண்டு வெடிப்பில் காயப் பட்டவர்களுக்கு இரத்தம் கொடுக்க பலர் வோர்டில் வரிசையில் நின்றனர் . அதில் காயப்பட்டு மூச்சு விடக் கஷ்டப் பட்டப் படி சிவந்தி கிடந்தாள் . அவளைக் கண்டவுடன் ஓவென்று கதறி அழுதாள் ஜெசீமா,


“படு காயம் அடைந்து உயிருக்குப் போராடும் பெண் ஒருத்திக்கு B நெகடிவ் குரூப் இரத்தம் உடனே தேவைப் படுகிறது யாராவது இருந்தால் அவசர சிகிச்சை செய்யும் வார்டு 2 கட்டில் 3 க்கு வரவும்” என்ற அறிவித்தல் ஒலி பெருக்கியில் வந்தது

ஜெசீமாவுக்கு தான் நிற்பது வார்டு 2 கட்டில் 3 என்று தெரிந்தவுடன் உடனே அந்த B நெகடிவ் இரத்தம் தேவை என்ற அறிவித்தல் சிவந்திக்கு என்று அறிய வெகு நேரம் எடுக்கவில்லை
சிவந்தியின் இரத்தம் B நெகடிவ் அந்த இரத்த குரூப் இரத்தம் உள்ளவர்கள் மிகக் குறைவு. தானும் சிவந்தியும் ஒரு தடவை இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்யப் போயிருந்த போது தங்கள் இருவரினது இரத்தமும் B நெகடிவ் என் ஜெசீமா அறிந்திருந்தாள். ஒரு சமயம் வேடிக்கையாக ”சிவந்தி நீயும் நானும் மதத்தால் வேறுபட்டாலும், ஒரே நிறமான B நெகடிவ் குரூப் ரத்தம் கொண்டவர்கள் . தேவைப் படும் போது ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளலாம் என்றாள் வேடிக்கையாக ஜெசீமா . ஜெசீமாவுக்கு அந்த இரத்தம் சிவந்திக்குத் தேவையாக இருக்கலாம் எனப் புரிய வெகுநேரம் எடுக்கவில்லை . உடனே அவள் உடனே டாக்டரிம் சென்று “:டாக்டர் என் பெயர் ஜெசீமா நான் காத்தான்குடியை சேர்ந்தவள் . இதோ உயிருக்குப் போராடும் சிவந்தி என் அருமை நண்பி . ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படிப்பவர்கள். அவளும் நானும் ஒரே இரத்த B நெகடிவ் குரூப் . நான் அவளுக்கு என் ரத்தம் கொடுக்கத் தயார் “என்றாள்

டாக்டர் ஜெசிமாவின் பெயரையும் ஊரையும் கேட்டவுடன்

“நீர் ஒருமுஸ்லீம் பெண்ணா”?

“ஆம் டாக்டர். என் மதத்துக்கும் ரத்தத்துக்கும் என்ன சம்பந்தம் “?


“ உமது மதம், உமது ரத்தத்தைப் பிற மதத்தினருக்கு க கொடுக்க சம்மதிக்குமா, அதனால் கேட்டேன் ”?

“டாக்டர், அல்லா சொல்லி இருக்கிறார் ஒருவர் உயிரைக் காப்பாற்றினால், அது மனிதகுலத்தின் உயிரைக் காப்பாற்றுவது போல் இருக்கும் என்று “


“ஆனால் குண்டு வைத்தவர்கள் முஸ்லீம் தீவிரவாதிகள் அது உமக்குத் தெரியுமா”?



”தெரியும் டாக்டர். .நான் ஒருபோதும் பிற உயிர்களை எடுக்கும் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களின் மடைத்தனமான செயல்களை ஆதரிப்பதில்லை . அதனால் எங்கள் இனத்துக்கு வீண்பழி வருகிறது தாமதிக்காமல் என் ரத்தத்தைச் சிவந்திக்குக் கொடுங்கள் . அவள் உயிர் பிழைக்க வேண்டும்”

பக்கத்தில் நின்ற ஜெசீமாவின் வாப்பா ரஹ்மானும் சம்மதம் தெரிவித்தார்.

மறு பேச்சு இல்லாமல் டாக்டர் சிவந்திக்கு ஜெசீமாவின் ரத்தத்தைக் கொடுத்தார் . சிவந்தியின் இருதைய துடிப்பு படிப்படியாக இரு மணி நேரத்தில் சீரடைந்தது . ஜெசீமாவும் ரஹ்மானும் சிவந்தியின் பெற்றோரும் சிவந்திக்குப் பக்கத்தில் அமைதியாக இறைவனை வேண்டிய படி நின்றனர் .

அப்போது ஜெசீமாவும் ரஹ்மானும் ஆகிய இருவரும் எதிர்பார்க்கவில்லை தங்களை போலீஸ் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல வருமென்று.

“ ஏன் இவர்களைக் கைது செய்கிறீர்கள் “ போலீசை டாக்டர் கேட்டார்

“ஹாஜியார் ரஹ்மான் குடும்பத்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது .எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கு “ போலீஸ் பதில் சொன்னது

“ என்ன சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்ய வேண்டி இருக்கிறது”? டாக்டர் கேட்டார்

“ரஹ்மானின் இரு மகன்களும் கொழும்பிலும் இங்கும் நடந்த குண்டுவெடிப்புகளை நடத்திய பயங்கரவாதிகள். அது பற்றி குடும்பத்துக்குத் தெரியும் அல்லவா “: என்றது போலீஸ்.

டாக்டர் பதில் சொல்லவில்லை. அவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் .

கண் விழித்த சிவந்தி, கண்களில் கண்ணீர் வடிய தன் பார்வையால் ஜெசீமாவுக்கும் அவளின் வாப்பா ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்தாள் சிவந்தியின் பெற்றோர் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றனர் .

ஜெசீமாவும், ரஹ்மானும் கை விலங்குகளோடு வோர்டில் இருந்து போலீசுடன் சென்றனர்.

(யாவும் புனைவு



*****

எழுதியவர் : Pon Kulendiren (28-Apr-19, 7:54 am)
பார்வை : 144

மேலே