இரவுப் பேருந்து

அந்த பேருந்து இரவு நேரத்தில் நான்கு பேருடன் மெதுவாக அந்த மலைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தது. அந்த பேருந்தின் வெளிச்சத்தினை தவிர வேறு வெளிச்சப் புள்ளிகள் ஏதும் தென்படவில்லை. இன்னும் ஒரு அரை மணி நேரப் பயணம் தான் மிச்சமிருந்தது.. இரண்டு மூன்று கொண்டை ஊசி வளைவுகளை கடந்து விட்டால் ஒரு சில வீடுகள் தென்படும்.

டிரைவருக்கு வேறு தூக்கம் கண்களை தழுவ துடித்துக் கொண்டிருந்தது, அந்த திருப்பத்தில் மெதுவாக திரும்பி, மெதுவாக வேகம் எடுக்க ஆரம்பித்த நேரத்தில் அந்த சாலையின் நடுவே வெள்ளை ஆடை உடுத்திய அவள் மிக மெதுவாக அசைந்தாடிக் கொண்டிருந்தாள். பின்னப்படாத தலைக் கேசங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன... டிரைவருக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது... இந்த நடுநிசியில் ... அய்யய்யோ.. எல்லோரும் சொல்றது போல அந்த மோகினியோ... நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது, அவரை அறியாமலேயே பேருந்து நின்றது... அவள் இப்போது போகிறாளா அல்லது வருகிறாளா என்று அறியமுடியவில்லை மெதுவாக அந்த பேருந்தினுள் நுழைந்தாள்.
டிரைவருக்கு அந்த மலைக் குளிரிலும் வேர்க்க ஆரம்பித்து விட்டது...

என்னப்பா ராமு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுற, ஏதாவது பேய், பிசாசை பார்த்திட்டயா என்ன..? அந்த குரல் கேட்ட குரலாக இருக்க திரும்பிப் பார்த்தான்...

வைதேகி பாட்டி நின்று கொண்டிருந்தாள் வெள்ளை ஆடையில்....

எழுதியவர் : சா.மனுவேந்தன் (26-Apr-19, 10:05 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 2098

மேலே