நல்லாசி வேண்டுகிறேன்

நல்லாசி வேண்டுகிறேன்

அழுகையை நான் அறிந்ததில்லை
அன்னையவள் அருகில் இருந்தவரை
அன்னையவள் மறைந்ததால்
அழுது புலம்புகிறேன் - என்
கண்களில் கண்ணீர் காயும்வரை
எனக்கு ஏனிந்த குறை
நான் பள்ளி கொண்டது - என்
தாயின் பாசக் கருவறை - அதுவே
என் கல்வியறிவின் பள்ளியறை !

முந்நூறு நாட்கள் சுமந்தாள்
முத்தாய் என்னை ஈன்றெடுத்தாள்
முகம்கோணாமல் வளர்த்தாள்
முத்தமிழில் பாட்டெடுத்து
பசிக்கொண்ட இந்த பாலகனுக்கு
பாலூட்டி சீராட்டி வளர்ந்தவள்
தாயவள் உதிரத்தை பாலாக்கி
சேயெனக்கு உணவாக அளித்தவள்
விழித்திருந்து வேலிபோட்டு என்னை காத்திட்டவள்
அவள் விழித்திரையில் என்னை வைத்து
பொத்தி பொத்தி பார்த்திட்டவள் '
என்னை மார்மீது அணைத்து
மனம் மகிழ்ந்த என் தாயை
மண்மீது கிடத்திவிட்டு - நான்
தினம் சாகிறேன் !
மாயமாக சென்ற என் அன்னை
நெஞ்சில் மறைய காயந்தனை கொடுத்திட்டாள்
நேயம்கொண்ட இந்த இளையவனை நித்தமும்
கண்ணீராடி அவள் கலாபிஷேகம் செய்ய
கடவுள் திருவடி சேர்ந்து விட்டாள்

என் அன்னை . ..
மண்ணோடு இருந்தாலும் - என்னை
மனம்கொண்டு வாழ்த்துகிறாள்
மானசீகமாய் என் மனத்திலிருந்து
செம்மாந்த மலராய்
என் அன்புத்தாயே . . .
உன்னாசி ஒன்று போதும்
உலகினை நான் வெல்ல
துயர் கொள்ளும் என் மனதை
அயராது அருகிருந்து தேற்றிடுவாய்
நாள் ஆசிதனை நாளும் அருளிடுவாய் !

எழுதியவர் : மு. ஏழுமலை (30-Apr-19, 10:21 am)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 555

மேலே