சீவ கீதம்

" பசி என்று ஓடி வந்தேன் பக்திமான் நீ ஏதாவது சாப்பிட கொடுப்பாய் என்று நம்பி.
ச்சீ போ அங்கிட்டு என்று விரட்டிவிட்டு செல்கிறாய் நீ. "

" பசித்த வயிற்றிற்கு உணவளிக்க உன் கடவுள் உனக்கு அறிவுறுத்தவில்லையோ?
பாகவதம் ஓதுகிறாய்,
பகவத் கீதையும் போதிக்கிறாய்.
ஆனால் சகல உயிர்களிலும் அந்த இறைவன் இருக்கிறான் என்பதை நீ உணரவில்லை. "

" கடமை உணர்வோடு லொள் என்று குரைத்தால் கல் எடுத்து அடிக்கிறாய்.
திருடன் நீ.
முழுத் திருடன் நீ.
பொதுவாய் இருந்தவற்றையெல்லாம் உனக்காய் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் முழுத் திருடன் நீ. "

" உயிரற்ற சிற்பத்திற்கு உபச்சாரம்.
என்னைப் போன்ற வாயில்லா சீவன்கள் கோயிலுள் நுழைந்தாலே அபச்சாரம்.
நன்னா இருக்கிறது உங்கள் கிரகச்சாரம்.
உங்கள் செயல்களே உங்களை மகிழ்விப்பதற்கும், துன்புறுத்துவதற்குமான அச்சாரம். "

" எங்களை ஐந்தறிவு மிருகங்கள் என்றாய் உனது ஆறாம் அறிவாய் உன் வாய் மட்டும் பெருத்திருப்பதாலே.
பேசத் தெரிந்தால் போதுமே,
பேரறிவாளன் என்று பல்வேறு பட்டங்களைச் சூட்டிக் கொள்கிறாய்.
எங்களின் கோரம் எங்கள் உருவத்தில் தான்.
உனது கோரம் உன் உள்ளத்தில்.
ஆதலால், நீயே எங்களை விட கொடூரன்.
மனிதா! நீயே எங்களை விட கொடூரன். "

( ஒரு நிகழ்வின் தாக்கத்தால், எழுதப்பட்டது, அப்போது அந்த வாயில்லா சீவன் தன் கண்களால் என்னை நோக்கி வீசிய பார்வையின் அர்த்தங்களை எழுத முயன்றுள்ளேன். )

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-May-19, 3:13 am)
பார்வை : 434

மேலே