சாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான் – வாசிப்பனுபவம்

தோப்பில் முஹம்மது மீரான் ஒரு வட்டார மக்களைப்பற்றி எழுதப்பட்ட இவை, உலகின் எல்லா வட்டார மக்களுக்கும் உரியவை

சில புத்தகங்கள் நம்மை அதனோடே கட்டிப்போடும், சில ஏங்கவைக்கும், சில மறுகவைக்கும், சில உருகவைக்கும், சில நாம் தொலைத்த சந்தோஷங்களை, துக்கங்களை அசைபோடவைக்கும்.
ஆனால் ஒரு புத்தகம் வாசக அனுபவத்தை மீறி கதாசிரியன் காட்டிச்சென்ற உலகத்தில் நம்மை வாழ்ந்திடச்செய்தல் சாத்தியமென்று இதுவரை யாரேனும் கூறியிருந்தால் நான் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் தோப்பில் முஹம்மது மீரானின் “சாய்வு நாற்காலி” (கசேர்) என்னை அவ்வாறு வாழ்ச்செய்தது.
சுற்றம் மறந்து, தன் இருப்பு மறந்து, நான் என்பதும் மறந்து தென்பத்தன் கிராமத்தில் ஒருத்தியாய், சவ்தா மன்ஸிலின் ஒரு குடியிருப்பாய் நான்கு நாட்கள் என்னால் வாழ முடிந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
கசேர், மய்யத், பவுரீன் பிள்ளக்கா வம்சம், எக்க வாப்பா, வாப்பும்மா, பரக்கத், அவுலியாக்கள், ஜின்னு, தங்களுமார், சாயா, வலிய அங்கத்தை, செந்தரையம்மா, ராத்திபு, …..
சவ்தா அவருக்கெ உம்மா, மன்ஸில் ஆருக்கெ உம்மா???…….. மன்ஸில் எண்ணு சொன்னா அரபியெலெ ஊடு எண்ணாக்கும் அர்த்தம்”… இப்படியாக புன்னகைக்க வைக்கும் வரிகள்
இப்படி எத்தனையோ வார்த்தைகள் என்னுள் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. பால்யவயதில் கண்டிருந்த ஐஸ்வர்யம் அழிந்த எத்தனையோ மாளிகைகளின் கதைகளை நமக்கு மீட்டுத்தருகிறது சவ்தாமன்ஸில்.
தென்பத்தன் கிராமத்தின் அரபிக்காற்றும், திருவிதாங்கூர் இராஜியத்தின் அரசியல் ஆளுமைகளும் நம்மை கிறுகிறுக்க வைக்கிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் எந்த முன்னறிவிப்பும் இன்றி சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்பிற்கு அது எந்த குந்தகத்தையும் விளைவிக்கவில்லை. முஸ்தாபகண்ணின் மன ஓட்டத்தோடு நாமும் அந்த கேரளக்கரைகளில் மிக எளிதாக பயணம் செய்து மீளமுடிகிறது.
உண்மையின் முகத்தை கண்டுணரமுடியாத ஒரு பழம்பெருமை பேசி அதன் இன்பத்திலேயே இன்றும் வாழ்ந்திருக்கும் முஸ்தபாகண்ணு இன்றைய நிலை தெரிந்தும் அதிலிருந்து மீளுவதற்குண்டான மனத்தைரியம் அற்ற ஆசியா, இவை எல்லாம் கண்டுணர்ந்தும் ஏதும் செய்ய வழியற்று அன்பை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் மரியம்தாத்தா,
இந்த இறந்த காலத்திலிருந்து தப்பித்துச்சென்று விடும் சாகுல் ஹமீது, எரிந்த வீட்டில் பிடிங்கியது ஆதாரம் என்று இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் இஸ்ராயில் ஆனாலும் கடைசி சில பத்திகளில் தன்முக அடையாளத்தை மாற்றிக்காட்டக்கூடிய ஒரு படைப்பு, இதனிடையே கண்ணுக்குத்தெரியாமல் பொங்கிவழியும் காமம், தறவாட்டுப்பெருமை காக்கும் சந்தன அலமாரி, பட்டு உறுமால், பப்புவர்மனின் வாள், வெள்ளித்தட்டு, வீட்டின் ஒவ்வொரு சன்னலின் விஜாவரிகள், இப்படி ஒவ்வொரு சேதன அசேதனப்பொருட்களும் இந்த நாவலில் பாத்திரமாக நம்மோடு வாழ்கிறது.
காமமும் காமம் சார்ந்த விழைவுகளும் ஒரு பழம்பெரும் தறவாட்டின் பெருமையை எங்கணம் புரட்டிப்போடுகிறதென்பதையும், “கிணற்று நீரில் மிதந்து கழியும் எத்தனை கன்னிமாரின்” சாபங்களின் வடிகாலாக சவ்தாமன்ஸில் உருக்குலைகிறதென்பதையும், இத்தனைக்கும் சாட்சியான அந்த கசேரின் கதையும், கதியும் உணர்த்தும் உன்னதமும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை.
இஸ்ராயிலின் நாவிலிருந்து வரும் கடைசி நேர சொற்றொடர்கள் இன்றைய வகுப்பும் வர்க்கமும் சாரா வாழ்வியல் நடைமுறையை சுட்டுக்காட்டுவதில் மட்டுமே படைப்பாளியின் வெளிப்பாடு தெறிகிறது அதுவரை கதைசொல்லி மட்டுமே கதைசொல்லாடல் மட்டுமே நிகழ்கிறது.
எதனால இந்தப்புத்தகம் நம்மை அதோடு வாழ்வைக்கிறது என்று சற்றே தெளிந்த மனதோடு ஆராயமுற்பட்டோமானல் அங்கு ஒங்கியர்ந்து நிற்கிறது வட்டாரவழக்கு। எந்த சமரசங்களுமற்ற நெடுந்தீர்க்கமான வட்டார வழக்கில் தொடர்ந்து ஒலிக்கும் மொழி நடை, பாசாங்குகளற்ற கதைப்பாங்கு இவைகள் மட்டுமா காரணம் அதையும் மீறிய ஏதோ ஒன்று.
எல்லா உள்ளுணர்வுகளுக்கும் காரணமறிய முடியுமானால் நாம் ஏன் இன்னும் எழுத்தோடும் புத்தகங்களோடும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க வேண்டும்। நம் தேடுதல்களுக்கு ஒரு காரணியாய் நம்மை உந்திச்செல்லும் சக்தியாய் நல்ல வாசிப்புகள் மட்டுமே துணையாக முடியுமென்பது உண்மையானால் இப்புத்தகமும் ஒரு காரணிதான்.
எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் வெளிவந்துள்ள புத்தகமானாலும் எனக்கு படிக்ககிடைத்ததென்னவோ இப்போதுதான்.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

எஸ் ஐ சுல்தான்

எழுதியவர் : (10-May-19, 10:44 am)
பார்வை : 74

மேலே