மின்னஞ்சல்

முகுந்தன் எதனையோ உட்கார்ந்து தட்டச்சு செய்து கொண்டிருந்தான் அவனுடைய முகத்தில் குழப்ப ரேகைகள் தாண்டவமாடிக் கொண்டிருந்தன, அவ்வப்போது அந்த மேசையில் இருந்த கண்ணாடி தம்ளரில் இருந்து சிறிது தண்ணீரை வாயிற்றுகுள் சரித்துக் கொண்டு தன்னுடைய பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தான்… அவன் அப்படி எதனை தட்டச்சு செய்கின்றான் வாருங்கள் அவனுடைய குரலிலேயே நாமும் அதனை வாசிப்போம்…

நண்பா ராகேஷ்,

நலம் நலமறிய அவா, என்ற காலத்தினை கடந்து பல கதா துாரம் பயணப்பட்டு விட்டோம் என்று உணர்கின்றேன். ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை எப்படி இருக்கின்றாய்…?. நீயும், நானும் ஏதோ பல மைல்களுக்கு அப்பால் உள்ளது போல் இக்கடிதம் வரைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது எனக்கு.

நேற்று உன் வீட்டிற்கு வந்திருந்தேன், ஆனால் உன்னை காணவில்லை, அம்மா கூட கேட்டார்கள் ”என்னப்பா முகுந்த் எங்களையெல்லாம் மறந்திட்ட போல என்று…?” அந்த வார்த்தைகள் தான் நான் உங்களை விட்டு எவ்வளவு துாரம் விலகி வந்துவிட்டேன் என்று என்னை உணரச்செய்தது.

உன்னிடம் மனம் விட்டு பேசவேண்டும், ஆனால் உன்னுடைய மொபைல் எப்போதும் பிஸியாகவே உள்ளது, அதனால் அதில் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆகவே இக் கடிதத்தினை வரைகின்றேன்.

என்னுடைய கனவுகள், சிந்தனைகளை நீ அறியாதது அல்ல, ஆனால் அதில் தான் நான் என்னை தொலைத்து விட்டேனோ என்று தோன்றுகின்றது…! முகமறியா பாரட்டுக்களுக்காக… முகம் தெரிந்த பலரை இழந்து விட்டேனோ என்று தோன்றுகின்றது…? எதனை தேடி முழ்க ஆரம்பித்தேனோ அதனை கண்டடைய முடியவில்லை… அப்படி என்றால் என்னுடைய தேடல் தவறான தேடலோ என்று எண்ணுகின்றேன்.

புதுக் குளக்கரையில் நானும், நீயும் அமர்ந்து கதையளப்பதில் இருந்த சுகம் இப்போது காணாமல் போய்விட்டது. மதுவுக்கு அடிமைபோல் இதுவும் ஒரு போதையாக எனக்கு இப்போது தோன்றுகின்றது… இதனை விட்டு இப்போதே வெளிவரவேண்டும், முழுவதுமாக முழ்கி காணாமல் போவதற்கு முன் இதிலிருந்து நீந்தி கரையேற முயலுவதை விட அருகில் உள்ள மரத்தினை பிடித்து வெளியேறவே முயலுகின்றேன்.

நம் வார்த்தைகளில் சிக்கி சிதறுண்ட எத்தனையோ விவாதங்கள் நமக்காக காத்துக் கொண்டுள்ளது, நம்முடைய எண்ணங்களும், வண்ணங்களும், பிறரின் செயல்களை கூர்ந்து நோக்கி அவர்களின் உள் மனதினை படிக்கும் திறனும் நமக்கு மீண்டும் வேண்டும், மனித மனங்களை படிப்பதற்காக அல்ல அவர்களின் மூலம் நம் வாழ்வியல் பாடத்தினை படித்துக் கொள்வதற்காக. நமக்குள் இருந்த சின்ன சின்ன கோபங்கள் தற்போது வேறு புகழிடம் தேடிப் போய்விட்டன போலும், நேரடியாகவோ, தொலைபேசியிலோ பேசியிருந்தால் அவை நம்மிடம் இன்னும் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கும், ஆனால் நமக்குள்ளான உறவை நான் என்னுடைய சுய போதையினால் நசுக்கி விட்டேனோ என்று தோன்றுகின்றது… இன்னுமொரு நண்பர் கூட சொன்னார் இந்த மயக்கத்திலிருந்து வெளியேறுங்கள் என்று அதனையும் அசைபோட்டு பார்க்கின்றேன்…

மனதில் பதியக் கூடிய வார்த்தைகளை மறந்து கண்களை கட்டிக்கொண்டு புதிய பாதையில் தான் நடந்து சென்றுள்ளேன்… இங்கு எங்கும் என்னுடைய முழுமையை என்னால் உணரமுடியவில்லை…. இது போல் எத்தனையோ எண்ணங்கள் எனக்குள் அனைத்தையும் இந்த கடிதத்தில் கொட்டிவிட்டால் நாளை உன்னை சந்திக்கும் போது பலவற்றை தேடவேண்டிய சூழல் ஏற்படும் அதனால் இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்…

அந்த புதுக் குளக்கரை நமக்காக காத்திருக்கின்றது… இப்போது தென்றல் கூட அங்கு மௌனமாகிவிட்டதாக கூறுகிறார்கள் வா… நாம் மீண்டும் அதன் மௌனத்தை கலைப்போம்.. நமது நேரடி வார்த்தை போர்களால்…. அந்த புங்கை மரமும் நம்முடைய வரவை கண்டு பூ பூக்க தயராக இருப்பதாக கேள்வி… மறக்காமல் நாளை வந்துவிடு உனக்காக நான் புதுக் குளக்கரையில் தேடலுடன் காத்திருப்பேன்..

என்றும் நட்புடன்

முகுந்தன்.

என்று தட்டச்சு செய்து மீண்டும் சரிபார்த்தான்.. ஆங்காங்கு இருந்த எழுத்துப் பிழைகளை சரிசெய்து அதனை அந்த மின்னஞ்சலில் அனுப்பிவைத்தான், அடுத்த தெருவில் இருக்கும் தன் உயிர் நண்பணுக்கு நாளைய சந்திப்பிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியாயிற்று என்று இப்போது அவன் முகத்தில் ஒரு வெற்றி களிப்பு… அப்படியே அந்த மடிக்கணியை மூடி ஓரம் கட்டிவிட்டு தனக்கு தேவையான தேநீர் தயாரிக்க எழுந்து அந்த அறைக்குள் சென்றான் முகுந்தன்… அவன் எதிர்நோக்கும் அந்த சந்திப்பு நிகழ நீங்களும் உங்கள் இஷ்ட தெய்வத்தினை வேண்டிக் கொள்ளுங்கள்.

எழுதியவர் : சா.மனுவேந்தன் (12-May-19, 10:08 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : minnanjal
பார்வை : 153

மேலே