பாவலரும் பயனறியா மக்களிடை மேவி மறைகின்றார் - புலவர் நிலை, தருமதீபிகை 230
நேரிசை வெண்பா
ஆழ்கடலுள் முத்தும் அடவிதனில் நன்மலரும்
வீழ்நலங்கள் வீணாய் விளிதல்போல் - கேழ்கிளரும்
பாவலரும் அந்தோ பயனறியா மக்களிடை
மேவி மறைகின்றார் மேல். 230
- புலவர் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
ஆழமான கடல் உள்ளே நல்ல முத்துக்களும், பாழான காட்டிலே இனிய மலரும் பயன் இன்றி வீணே கழிந்து ஒழிதல் போல், புன்மையான மக்களிடையே புனிதமான புலவர்கள் வறிதே இழிந்து மறைகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
அரிய கலைகள் பயின்று இனிய கவிகள் இயற்றும் பெரிய கவிஞரேயாயினும் அருமை தெரியாத மனிதரிடையே படின் அவர் பெருமையடையார்; அவரது அறிவொளி வெளியே ஒளிவீசாமல் உள்ளேயே மழுங்கி உலைந்து போகின்றது. -
விலையுயர்ந்த நன்முத்தை அரசர் காணின், அதனை அவர் விழைந்து பெற்றுத் தம் மணிமுடியில் புனைந்து போற்றுவர்; மலை வேடர் அதன் நிலை காணாது போவர். அதுபோல் கலைவாணரும் அறிவுடையார் குழுவில் உயர் மதிப்புடையராய் நலம் மிகப் பெறுகின்றார்; அறிவிலிகளிடையே படின், ஒரு பயனுமின்றி அவமதிப்பாளராய் அவமே மறைகின்றார்.
உயர்ந்த வாசமுடைய நல்ல பூக்கள் புலி, கரடிகள் உள்ள காட்டில் பூத்து வீணே வீதல்போல் சிறந்த மதி நலமுடைய புலவர்கள் நாட்டில் உதித்தும் மாட்டு மதியான மாக்கள் கூட்டத்தில் அகப்பட்டு மாட்சியிழந்து போகின்றார்.
தேசுமிகுந்த முத்தும், வாச மலரும் கடலிலும், காட்டிலும் பயனின்றி மறைந்து படுதலை எடுத்துக் காட்டி நலமறியாத மாக்களிடம் புலவர்கள் பொலிவு குன்றி நிற்றலை இஃது உணர்த்தியருளியது.
அருமையும் இனிமையும் கருதி முத்தையும் மலரையும் புலவருக்கு ஒப்ப வைத்தது. அருவிலை முத்தும் பரிமள மலரும் போல அருமையான இனிய மதிமான்கள் உரிமையான இடத்தை அடைந்த போதுதான் உலகமறியப் பெருமை அடைகின்றனர்.
பூவினது இயல்பே பொருந்தக் கூறின்
மங்கலம் ஆதலும் நாற்றம் உடைமையும்
காலத்தில் மலர்தலும் வண்டிற்கு ஞெகிழ்தலும்
கண்டோர் உவத்தலும் விழையப் படுதலும்
உவமத்(து) இயல்பின் உணரக் காட்டுப. (தொல் - கோள்)
கல்வி நிறைந்த புலவருக்கு வாசம் நிறைந்த மலரை உவமை காட்டி அதன் இயல் நலங்களை இதில் விளக்கியிருக்கிறது.
மென்மையும், நன்மையும், மேன்மையும் உடைய இவர் . பான்மை தெரிந்தவரிடம் பயன் மிகப்பெற்று நயனடைகின்றனர்; தெரியாதவரிடை வறிதே கழிகின்றனர்.
நேரிசை வெண்பா
பாட்டின் சுவையைப் படித்தார் பரிந்துரைத்தும்
கேட்டு மகிழார் கெடுமதியர் - மாட்டுப்
பிறப்பாய்ச் செருக்கிப் பிழையே பெருக்கி
இறப்பார் அவமே இவண்.
என்றபடி இடர் மண்டியுள்ளவரிடம் புலமைச் சுவையைக் கொண்டு போய்ப் புலையாடலாகாது; அப்போக்கை நீக்கி ஆக்கமான வழியை நோக்கி மகிழ வேண்டும். தகுதியில்லார் முன்புகுதல் மிகுதியும் பிழையாம்.
இன்னிசை வெண்பா
வாலிழையார் முன்னர் வனப்பிலான் பாடிலன்:
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்;
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாத
பேதையார் முன்னர்ப் படின். 99 நான்மணிக்கடிகை
பேதைகள் குழுவில் மேதைகள் பீடு பெறாமல் பிழைபடுதலை இப்பாடல் விளக்கியிருக்கிறது. நல்ல அணிகளையுடைய விழுமிய தருண மங்கையரை வால் இழையார் என்றது.
அழகிய இளங்குமரிகள் அவலட்சணமானவரை விழையார்; நல்ல கல்வியாளர் புல்லரை மதியார். தக்க இணைப்புகள் அமைந்த பொழுதுதான் உயர்ந்த பொருள்கள் சிறந்த மதிப்பும் மாட்சியும் பெறுகின்றன. கல்வி நலம் மிக்க புலவரைப் பேணுபவர் உலகில் தக்கவாாய் உயர்ந்து மிக்க புகழை அடைகின்றனர்.
நேரிசை வெண்பா
புலவரைப் பேணும் புலனுடையார் என்றும்
உலவா ஒளியாய் ஒளிர்வர் - புலவரைப்
பேணா(து) ஒழிவார் பிறந்தும் பெறுநலனைக்
காணா(து) இழிவார் கழிந்து.
என்றமையால் கலைஞரின் மதிப்பைப் பெற்றவரது பெருமையும், பெறாதவரது சிறுமையும் ஒருங்கே காணலாகும்.
அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
கலைமதிநா ணுறச்சகல கலைபடைத்துப் பிறர்க்குநல்கும்
..கவிசி ரேட்டர்
தலைமையுறு மவர்மிகுந்த புலமையாம் தனதான
..சம்பத் துள்ளார்
இலைஎனஒன் றிரக்கினந்தக் குறைஅரசர்க்(கு) அல்லதிவர்க்(கு)
..இல்லை; நல்ல
விலைமதியா மணிதெரியா தவர்மதியா விடினுமது
..மேன்மை தானே. - பத்திரகிரி