பிள்ளைகளே பிள்ளைகளே

பிள்ளைகளே பிள்ளைகளே
பெரியோர்சொல் கேளுங்க !
புள்ளினமாய்க் காலையிலே
புத்துணர்வு கொள்ளுங்க !
துள்ளிவரும் மான்களைப்போல்
சுறுசுறுப்பாய் ஒடுங்க !
பள்ளிக்குத் தினம்சென்று
பாடத்தைப் படியுங்க !!

வீட்டுக்குள் முடங்கிடாமல்
விளையாடச் செல்லுங்க !
தோட்டத்தைச் சுற்றிவந்து
தூயகாற்றைச் சுவாசிங்க !
வாட்டமில்லாப் பூக்களுடன்
வாஞ்சையுடன் பேசுங்க !
பாட்டிசொல்லும் கதைகளெல்லாம்
படுத்தபடி கேளுங்க !!

சொற்களிலே இனிமைகூட்டிச்
சுதந்திரமாய்ப் பேசுங்க !
நற்றமிழில் உறவாடி
நாவாரப் போற்றுங்க !
கற்றவித்தை கைகொடுக்கும்
கடவுளென மதியுங்க !
பெற்றோருக் குதவிசெய்து
பிரியத்தைக் காட்டுங்க !

அந்தந்த வேலைகளை
அன்றன்றே முடியுங்க !
சிந்தைக்கு விருந்தளிக்கும்
திருக்குறளைப் படியுங்க !
செந்தமிழே உலகத்தில்
சிறந்ததென்று பாடுங்க !
நந்தமிழர்ப் பண்பாட்டை
நன்றியுடன் பேணுங்க !!

தக்கவழி காட்டும்நற்
சான்றோர்நூல் வாசிங்க !
சிக்கனத்தைக் கடைபிடித்துச்
செம்மையாக வாழுங்க !
அக்கறையாய் உயிர்களிடம்
அன்புகாட்டப் பழகுங்க !
எக்கணமும் மறவாமல்
இயற்கைதனைப் போற்றுங்க !!

விடுமுறையில் உறவினர்கள்
வீட்டுக்குச் செல்லுங்க !
அடுக்கடுக்காய் ஆசையுடன்
அளவளாவி மகிழுங்க !
படுத்திருக்கும் போதினிலே
பழையகதை பேசுங்க !
கடுகளவும் கள்ளமின்றிக்
களிப்புடனே ஆடுங்க !!

அலைபேசி விளையாட்டை
அடியோடு நிறுத்துங்க !
வலைவிரித்தே அடிமையாக்கும்
மயங்கிடாமல் மீளுங்க !
தலைசிறந்த தெய்வமெனத்
தாயைநிதம் வணங்குங்க !
நிலையான மனத்தோடு
நிம்மதியாய் வாழுங்க !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-May-19, 9:04 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 28

மேலே