முருகன் அந்தாதி

உலகம் முழுவதும் உன்னருள் வேண்ட
மலர்ந்த முகத்துடன் வாராய் ! - தலையில்
மதிநதி சூடிய மன்றாடி மைந்த!
துதிப்போர்க்கு நீயே துணை . 1.

துணையாய் மயிலும் சுடர்வடி வேலும்
இணைந்து வருமே எழிலாய் - அணைப்பில்
உருகி விழிநீர் உகுக்க மனத்தின்
இருளும் விலகும் இனி. 2.

இனியொரு துன்பம் எனக்கிலை யென்றே
இனிமையாய்ப் பாடு மிதயம் ! - பனிமலை .
மீதுறை யீசன் விரும்பும் உமைபாலன்
மாதவத் தோனை வணங்கு. 3 .

வணங்கிடும் கைகள் வடிவத்தைக் கண்டே
இணங்கியதை வேலென எண்ணி - கணமும்
பொறுக்கா துடனே புயலென வந்து
மறுக்கா தணைப்பான் மகிழ்ந்து. 4.

மகிழ்ந்தாடும் வள்ளியுடன் வண்ண மயிலில்
குகனவன் சிந்தை குளிர்ந்தே - புகழ்பாடும்
அன்பர்தம் துன்ப மகற்ற விரைந்துவந்து
இன்பம் தருவான் இனிது. 5.

இனிதாம் தமிழை இசையொடு கேட்டுக்
கனிவாய் மலர்ந்திடும் கந்தன் ! - தனத்தொடு
ஞான மருளுவன் நாத வடிவினன்
வானவர் போற்றும் வரம் . 6.

வரங்களை நல்கும் வடிவே லவனின்
திருவடி பற்றவினை தீரும் - உருவில்
அழகன் குமரன் அறுமுகத் தானைத்
தொழுதிடத் தோன்றும் சுகம். 7.

சுகத்தைக் கருதிச் சுயநலத் தோடே
அகத்திலன் பின்றி அலைந்தால் - பகைமைதான்
மிஞ்சிநிற்கும்! வாழ்வினில் வெல்ல குருபரனை
நெஞ்சே நிதமும் நினை . 8.

நினைத்து நினைத்து நெகிழ்ந்து பணிந்து
நனைந்த மனத்துடன் நைந்தேன் !- அனைத்து
மறிந்து மறியான்போ லாட்கொளவா ராயேல்
சிறியேன் பிழைப்பேனோ செப்பு. 9.

செப்பு மொழியாலென் சிந்தை கவர்ந்திடும்
அப்பனே! வாழ்த்தால் அலங்கரிப்பேன்! - முப்போதும்
சூட்டுவேன் பாமாலை! தூயனே! நின்னன்பை
ஊட்டிட வாழும் உலகு. 10.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-May-19, 9:51 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 52

மேலே