எச்சில் நிமிடங்கள்

அடித்து ,உதைத்து, மிதித்து
ஏறிக்கொள்கிறது கால்கள்
பின் ஓரமாய் பட்டாலே
ஓங்கி வலிக்கிறது.
நாலு நாளாய் தான்
குளிக்கவில்லை என்றாலும்
அருகிலிருப்பவர் வியர்வைக்கு
விளக்கம் கேட்கிறது மூக்கு .
சாய்ந்துகொள்ள சௌகர்யம்
கேட்கிறது முதுகு
கிடைக்கவில்லை என்றால்
பிறர் முதுகை அசௌகரியபடுத்துகிறது .
யாரவது எழ மாட்டார்களா ?
எட்டுத்திசையும் சுற்றிப்பாக்கிறது
எழுந்துவிட்டால் வேலி அமைத்து
வழி கொடுக்கிறது கரங்கள்.
இன்னும் தீரவில்லை
இந்தப்போராட்டம் அடுத்ததாக
ஜன்னலோரம் அமர
அருகிலிருப்பவனை அவசரப்படுத்தி
வீட்டுக்கு அனுப்புகிறது மனது
எல்லாம் முடிந்ததா என்றால்
இல்லவே இல்லை
பேருந்தின் ஓர இருக்கையில்
தூங்குவதுபோல் நடிக்கிறது
கம்பியைபிடித்தபடி நிற்கிறாள்
ஒருத்தி கைக்குழந்தையுடன்
முடியப்போகும் பத்தாவது நிமிடத்தில்
பின்னாலே திரும்பிப் பார்க்கிறது
தெரிந்தவர்கள் தெரிகிறார்களா என்று
இறங்கும் போதும் கூட இறங்காத
இரக்கத்தோடு
துப்ப நினைக்கும் போதே
வறண்டுவிடுகிற
இந்த காலத்தின் எச்சில் துளிகள்
வேண்டியவர்க்கு மட்டும்
ததும்பி வழிகிறது
வேண்டாதவர்க்கோ
தாகம் தெளிக்கிறது