அவர்கள் ஓடிக்கொண்டே இருந்திருக்கின்றார்கள்

அவர்கள் ஓடிக்கொண்டே இருந்திருக்கின்றார்கள்..
என் முப்பாட்டனையொத்த முகமொன்றும் அலட்சியமாய் அக்கூட்டத்தில்..

சிக்கு விழுந்த நெடுஞ்சிகை..
சவரம் விழா தாடை..
மஞ்சள் குளித்த பற்வரிசை..

வயிற்றில் உயிர்புடைத்தவர்களும்
மாரில் உயிர்போர்த்தியவர்களும்
கூடவே ஓடியிருந்திருக்கின்றார்கள்..

பசிக்கு ஒரு வேட்டை,
இச்சைக்கு ஒரு கலவி,
அசதிக்கு ஒரு தூக்கம்.

ஞாயிறு திங்கள்
முந்நீர் மண்
மாரி கூதிர்
பிறப்பு இறப்பு
அனைற்றையும் ஓன்றாய் பாவித்து
அவர்கள் ஓடியிருந்திருக்கக்கூடும்..

சக்கரமும் சிக்கிமுக்கி கற்களும்
பரிணாமத்தின் ஆகச்சிறந்த
பாவமூட்டைகளென
உணர்ந்தே ஓடியிருந்திருக்கக்கூடும்..

நிலையாமைப் பெருந்தத்துவம்
அச்சமூக விழுமியங்களின்
உச்சத் தேடல்..

அவர்கள் ஓடிக்கொண்டே இருந்திருக்கின்றார்கள்..

நிற்க..
நீங்கள் கவனித்தீர்களா
ஒரு கருப்பு ஆடு
உள்ளே முளைத்து
சட்டாம்பிள்ளையாவதை?

(செய்தி: இன்றைய ஹோமோசேபியன்ஸின் மூதாதையர்களான நியான்டர்தல்கள் இன்றிலிருந்து எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளனர்)

எழுதியவர் : த.சௌந்தர ராசன் (9-Jun-19, 6:59 pm)
பார்வை : 456

மேலே