ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ அழகுநிலா கண்ணுறங்கு
சீராட்டிக் கொஞ்சிடுவேன் சிரித்தபடி நீயுறங்கு
தீராத ஆசையொடு தேன்தமிழில் நான்பாட
வாராதோ நித்திரையும் வண்ணமயில் நீயுறங்கு !!

புன்னகைக்கும் செங்குருத்தே! பொலிவான பொன்மணியே!
என்னகத்தை நிறைக்கவந்த எழிலான சித்திரமே!
நன்னெறிகள் கற்பித்து நல்லவனாய் வளர்த்திடுவேன்
அன்னையென்றன் குரல்கேட்டே அச்சமின்றி நீயுறங்கு !!

பட்டுவண்ண ரோசாவே! பால்வடியும் பூமுகமே!
தொட்டுன்னைப் பார்க்கையிலே துள்ளுமென்றன் அன்புமனம்
கட்டியுன்னை முத்தமிட்டுக் காதோரம் கதைசொல்லித்
தட்டியுன்னைத் தோள்மீது தாங்கிடுவேன் கண்ணுறங்கு !!

தாய்மாமன் அன்புடனே சந்தையிலே உனக்காகப்
பாய்விரித்தால் வலிக்குமென்று பட்டுமெத்தை வாங்கிவந்தான்
தேய்வில்லாச் சூரியனே! செங்கனியின் நறுஞ்சுவையே
வாய்நிறையப் பாடிடுவேன் மனங்குளிர்ந்து நீயுறங்கு !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Jun-19, 12:35 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 46

மேலே