தண்ணீர் தண்ணீர்

அனைவருக்குமான
தேவையென தெரிந்தும்
அலட்சியத்தால்
ஆடம்பரத்தால்
பேராசையால்
சுயநலத்தால்

நீர்நிலைகளை கொன்றுவிட்ட
நமக்கெல்லாம்
ஈம சடங்கு செய்து கொண்டிருக்கிறது
இயற்கை

ஏரிகளையும்
குளங்களையும்
ஆறுகளையும்
கொன்று புதைத்து
அடுக்குமாடிகளை சமாதிகளாய்
மாற்றி இடுகாட்டில் தானே
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

காலி குடங்களுடன்
தண்ணீர் லாரிக்காய்
காத்திருக்கும் அவலம்
தந்தது இயற்கையா ?
சுயநல மானுடம்தான்

குளித்த நீரையும்
வீணாக்கும் நீரையும்
ஏன்
நம் சிறுநீரையும்
சுத்திகரித்து மறு சுழற்ச்சியாய்
பயன்படுத்தும் பிறவிக்கு
என்ன பெயர் வைக்க

கோடி கோடியாய்
கொள்ளை அடித்தும்
ஒரு அணை கூட கட்ட
துப்பற்ற ஆட்சியாளர்களால்
தூக்கி கொண்டு அலைகிறோம்
தெரு தெருவாய்
குடங்களையும் பக்கெட்டுகளையும்

நிலத்தடி நீரை நாசமாக்கி
சுரங்க பாதையில்
மெட்ரோ ரயில் போட்டு
அனைவரும் வேகமாய்
சென்று கொண்டிருக்கிறோம்
நரகத்தை நோக்கி

நிலத்தடி நீரை வெளியேற்றி
மீத்தேனும் எரிவாயுவும் எடுத்தால்
எடுத்த இடத்தில்
புல் பூண்டும் முளைக்காதென்பதை
உணர்ந்தும்
வேடிக்கை பார்க்கும் நாமும்
வேட்டையாடும் அரசும்
இருக்கும் வரையில்

அனைவரும் பழகி கொள்வோம்
விரைவில்
நம் மாநிலம் பாலைவனமானபின்
ஒட்டகம் மேய்க்க
ஆயினும் ஒட்டகம் மேய்க்க
தமிழ் செல்லாகாசாகவும் ஆகலாம்

தயவு செய்து
தண்ணீர் இல்லையென்று
இயற்கையை சபிக்காதீர்

இயற்கை கொடுத்தாலும்
தேக்கி வைக்க இடமுமில்லை
மழை வெள்ளம் கடந்து செல்ல
வழியும் இல்லை

நாளை வெள்ளம் வந்தாலும்
இயற்கையைதான் சபிப்போம்
என்பது
இயற்கைக்கும் தெரியும்

இனி அதிகாலை முதல்
நடுசாமம் வரையில்
அனைவருக்குமான தாய்மொழி
தண்ணீர் தண்ணீர் தண்ணீர் . . ..


தாகத்துடனும் தவிப்புடனும்

ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (20-Jun-19, 11:29 pm)
Tanglish : thanneer thanneer
பார்வை : 239

மேலே