விழிகளில் ஈரம்;மனதிலே பாரம்.....
துன்பமென்னும் படகிலேறி
துயரக்கடலில் செல்லும்
மலையக மக்கள் வாழ்வில்
வறுமை என்னும் விரிசல் விழ,
கண்ணீரால் நிரம்பி திசையறியாமல்,
கண்ணீர் துடைக்கும் வழியறியாமல்,
திகைத்து நிற்கின்றன
மனித மனங்கள்.
மண்ணெண்ணெய் விளக்கின் புகையில்
விழிகள் கறுத்த காலம் போய்,
மின்சார விளக்கின் ஒளியில்
முகங்கள் மிளிர்ந்தாலும்
அவர்தம் வாழ்வு மாறவில்லை,
ஏற்றம் பெறவில்லை.
மின்சாரம் கூட,
தம் குடியிருப்பை கொழுந்து
விட்டெறியும் கொடுமை தாங்கி,
கொட்டும் மழையின்
கொடுமையில்
உறங்க இடமின்றி,
நீரில் தத்தளித்து,
கூடை சுமந்ததால் தலையில் ஏற்பட்ட
தழும்புகளை விட,
விலைவாசி ஏற்றத்தால்
மனதில் ஏற்பட்ட சோக உணர்வின்
சுமை தாங்கி,
வாழும் மலையக மக்களின்
வாழ்வு மாற,
வருங்காலம் நோக்கிய
எதிர்பார்ப்பில்,
விழிகளின் ஈரம்
உலர்கின்றது.