தனிப்பாடல்கள் – ------------------கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்

அன்றையக் கவிஞர்கள் பெரும்பாலும் வறுமையில் உழன்றவர்கள். இராமச்சந்திரக் கவிராயர் கூறுவது போல கல்லாத ஒருவனைக் கற்றாய் என்றும் பொல்லாதவனை நல்லாய் என்றும் போர்முகத்தை அறியானைப் புலியேறு என்று சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் என்றொரு புலவர். சீதக்காதியைப் பாடியவர். ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகாலத்திலும் ஆதரித்தவர் என்று அவரைப் புகழ்ந்து பாடியவர். சீதக்காதியின் மறைவிற்குப் பிறகு ஊர் ஊராய் அலைந்திருக்க வேண்டும். திருமலை நாயக்கன் இவரைச் சிறையில் போட்டார் என்று இவர் கவிதை ஒன்று சொல்கிறது. இவர் கவிதைகளைக் கேட்டதால் அது நடந்திருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் இல்லை. ‘பாட்டில் சிறந்த படிக்காசன் எனுமோர் பைங்கிளியைக் கூட்டில் அடைத்தாய், இரைதா என்று கூப்பிடுதே’ என்று பாடியவன் மோசமான கவிஞனாக இருக்க முடியாது. ஆனால் இவரது கவிதை பலரைப் பாதித்திருக்க வேண்டும். இவர் கவிதைகள் ஏற்படுத்தும் கலவரத்தை இவரே ஒரு பாட்டில் விளக்குகிறார்:

“கல்லடிக்கும் உளியிரண்டும் காதடிக்குள் அடிப்பதெனக் கவிதை கேட்டு
பல்லடிக்கக் கிடுகிடென்று பறையடிக்கும் நெஞ்சர்” என்று இவர் கவிதை துவங்குகிறது. காதுகளுக்கடியில் கல்லுளி அடிப்பது போல கவிதை இருக்கிறது. பற்கள் கிடுகிடுப்பதும் நெஞ்சு பறைபோல் அடித்துக் கொள்வதும் கவிஞன் கவிதையோடு விட்டு விடாமல் பணமும் கேட்பானே என்ற எண்ணத்தினால். திருமலை நாயக்கனைப் போலச் சிறையில் இடும் அதிகாரம் இல்லாத கஞ்சர்கள் இந்நெஞ்சர்களாக இருக்க வேண்டும்.

பாடல் முழுவதையும் கேளுங்கள்:

“கல்லடிக்கும் உளியிரண்டும் காதடிக்குள் அடிப்பதெனக் கவிதை கேட்டு
பல்லடிக்கக் கிடுகிடென்று பறையடிக்கும் நெஞ்சர்தமைப் பாடுவேனோ
வில்லடிக்கும் பிரம்படிக்கும் கல்லடிக்கும் விரும்பி நின்ற மெய்யன் ஈன்ற
செல்லடிக்கும் தடவரையில் சேறடிக்க அலையடிக்கும் செந்திலானே”

அர்ச்சுனனின் வில்லால் அடிப்பட்ட, பாண்டியனின் பிரம்பால் அடிபட்ட, சாக்கிய நாயனார் கல்லால் அடிபட்ட உடம்பை உடைய சிவன் பெற்ற பிள்ளை. அவன் இருக்கும் இடம், தொலைவில் இருக்கும் மேகங்கள் முழங்கும் குன்றுகளில் மீது கூடச் சேற்றை இரைக்கும் வேகம் கொண்ட அலைகளைப் பெற்ற திருச்செந்தூர். அச்செந்திலானைப் பாடுவேனே தவிர இனி கருமிகளைப் பாட மாட்டேன் என்று சபதம் எடுக்கிறார் தம்பிரான்.

இவரை நிச்சயம் கவிதை எழுதியதற்காக சிறையிலிட்டிருக்க முடியாது

கடிகை முத்துப் புலவர் எட்டயபுரம் ஜமீன்தாரின் புணர்ச்சித் திறனைப் பற்றி பல கவிதைகள் பாடியிருக்கிறார். இன்று ஜமீன்தார் இருந்தால் pedophile என்று உள்ளே தள்ளியிருப்பார்கள். எல்லா ஊர்களிலிருந்தும் அவருக்குப் பெண்கள் வருகிறார்கள் என்பதை கடிகை முத்துப் புலவர் சொல்லாமல் சொல்கிறார்:

கொங்கைகும்ப கோணமா கூந்தலுமோ கூடலா
தங்கும்விழி அம்பா சமுத்திரமா – பைங்கனக
மேருவெங்க டேசுஇரட்டமேந்த்ரா இவள்சசிபுற்
றாருடைய ஊரிடைய தாம்.

எந்த ஊராய் இருந்தால் உனக்கென்ன? மார்பு கும்பம் போலவும் வட்டமாகவும் இருக்கிறது (கும்பகோணம்). கூந்தல் கூடும் அல், (கூடல் -மதுரை)திரண்ட மேகத்தைப் போலக் கருமையானது. கண்கள் அம்புகளின் கடல் (அம்பாசமுத்திரம்). இவள் இந்திராணி போன்ற புற் தார் (வஞ்சி) போன்ற இடையை உடையவள் என்கிறார் கவிஞர்.

இது போன்று எழுதி எழுதி அலுத்திருக்க வேண்டும். உண்மை ஒரு கவிதையில் வெளி வந்து விடுகிறது:

இப்பளப் பாறையிற்படுக்கச் சொல்லுகிறீர் செடிமறைவோ வில்லைச்சூழ
உப்பளப் பாறையுமாச்சுக் கணவனோ வெகுகோபி யும்மைக்கண்டால்
கொப்பளப் பார்க்கினும் பார்ப்பான் பேனைப்பார்க்கினும் பார்ப்பான் குணமில்லாத
தப்பளப் பாவிருக்குதைய கிளுவைமரு தப்பமன்னா தமிழ்க்கோமானே.

ஊர்மேயும் ஜமீன்தார். உடனே சேரத்துடிப்பவர். அவள் கேட்கிறாள்: இப்பள்ளத்தில் இருக்கும் பாறையில் படுக்கச் சொல்கிறீர். மறைவே இல்லை. சுற்றி உப்பளப்பாறைகள்தான். என் கணவன் கோபக்காரன். உன்னைப் பார்த்தால் கொப்பு அளப் பார்ப்பான், அதாவது வேரோடு அழித்து விடுவான். பேனை சுடக்குவது போலச் சுடக்கி விடுவான். நீ செய்வது தவறு. குணமில்லாதது. மன்னா! தமிழ்க் கோமகனே!

இந்தப் பாடலை அவர் நிச்சயம் கிளுவை மருதப்ப மன்னரிடம் படித்துக் காண்பித்திருக்க மாட்டார்.

Share this:
TwitterFacebook

எழுதியவர் : P A Krishnan (24-Jun-19, 4:27 am)
பார்வை : 42

மேலே