இளங்கோவடிகள் சொன்ன முருகன் தலம் எது

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். சேரநாட்டை ஆண்ட மன்னன் நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவன். கண்ணகிக்குச் சிலை அமைத்து பிரதிஷ்டை செய்தவன் அவன். அவனது தம்பி இளங்கோ.

கண்ணகியின் காவியத்தை அற்புதமாக சிலப்பதிகாரமாகத் தந்தவர் இளங்கோ அடிகள். அண்ணனே முடி சூட வேண்டும் என்று துரவறம் பூண்ட பெருந்தகை இளங்கோ. சீத்தலைச் சாத்தனாரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்பர்.

அந்தக் காப்பியத்தில் குன்றக் குரவையில் செங்கோட்டு வேலரைக் குறித்து அவர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

இளங்கோவடிகளின் காலம் சுமார் 1850 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

அப்படிப்பட்ட இளங்கோவடிகள் போற்றிப் புகழ்ந்த திருச்செங்கோட்டுத் தலம் கொங்குமண்டலத்தில் தான் உள்ளது என்று கொங்குமண்டல சதகம் தனது 61ஆம் பாடலில் பெருமையுடன் கூறுகிறது.

பாடல் இது தான்:-

உளங்கோ துறாம லொழுகுசெங் குட்டுவற் கோர்துணையாம்

இளங்கோ வடிக ளியற்றிய காப்பியத் தேவமுதங்

கொளுங்கோன் மதுவெனக் கூறுசெங் கோட்டுவேற் குமரனமர்

வளங்கோ னிடாதசெங்கோடு வளர்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : மனச்சான்றுக்கு வழுவில்லாது நடக்கும் சேரன் செங்குட்டுவனது ஒப்பற்ற தலைவனான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்துள், சொல்லியருளிய செங்கோட்டு வேலன் வீற்றிருந்தருளும் திருச்செங்கோடு என்னும் திருத்தலமும் கொங்குமண்டலம் என்பதாம்.

திருச்செங்கோடு பண்டைக் காலத்திலிருந்தே பெரும் புகழ் பெற்ற தலமாக இருந்து வந்திருப்பதை எண்ணி மகிழ முடிகிறது.

***Share this:
TwitterFacebookLinkedInEmail

எழுதியவர் : ச.நாகராஜன் (24-Jun-19, 4:51 am)
பார்வை : 52

மேலே