காரைக்குடி உளியே
கண்ணதாசரே . . .
திரையில் காலூன்றி
நின்றவர்களுக்கு மத்தியில்
வேரூன்றி நின்றவன் நீ
மெத்தப் படித்தவர்களே
மேதாவிகள் எனும் உலகின்
மொத்த திமிரையும்
உடைத்தவன் நீ
வார்த்தைகளால் வகிடெடுத்து
திரை தமிழுக்கு ஜடை போட்டு
அழகு பார்த்தவன் நீ
மெட்டுக்கு பாட்டு எழுதும்
வித்தையை
மொத்தமாய் குத்தகைக்கு
எடுத்தவன் நீ
எதார்த்தமானவர்களுக்கு
எடுபடாது அரசியல் என்பதை
அரசியலில் தோற்றுப் போய்
உணர்த்தியவன் நீ
தாலாட்டு எழுதினாலும்
தாய்மைக்கு எழுதினாலும்
தத்துவம் எழுதினாலும்
இந்துமதம் எழுதினாலும்
காதலுக்கு எழுதினாலும்
காமத்திற்கு எழுதினாலும்
வாழ்க்கைக்கு எழுதினாலும் வறுமைக்கு எழுதினாலும்
சாமிக்கு எழுதினாலும்
சடங்கிற்கு எழுதினாலும
ஏன்
சவத்திற்கு எழுதினாலும்
பொருத்தமாய் எழுதி
அனைவரின் மனதிலும்
ஆழமாய் நிறுத்தியவன் நீ
ஒரு மனிதன்
எப்படி எல்லாம் வாழ வேண்டும்
அதற்கு உதாரணம் நீ
ஒரு மனிதன்
எப்படி எல்லாம் வாழ கூடாது
அதற்கும் உதாரணம் நீ
வாழ்க்கை முழுவதும்
வாழ்க்கை அனைத்திற்கும் எழுதி
வாழ்க்கை யாவிலும்
இன்றும் இறந்தும் வாழ்ந்திருக்கும்
நடமாடும் நூலகமே
கல்வெட்டில் செதுக்க நேரமில்லா
காரணத்தால்
திரைமெட்டில் காவியங்களை
திறம்பட செதுக்கிய
காரைக்குடி உளியே
உனக்கு பிறந்த நாள்
வாழ்த்து சொல்ல
வயதும் வார்த்தையும்
போதாத காரணத்தால்
வணங்குகிறேன்
உன் படைப்புகளை
ஏற்றுக்கொள் பிழையெனில் மன்னித்து
ந.சத்யா