நண்ணித் திருந்தி வருபண்பே சீரென் பெயரால் பொருந்தி மிளிரும் - சீர்மை, தருமதீபிகை 303

நேரிசை வெண்பா

உண்ணும் உணவின்கண் உப்பென்ன உற்றவாழ்(வு)
எண்ணும் நிலைகள் எவற்றினும் - நண்ணித்
திருந்தி வருபண்பே சீரென் பெயரால்
பொருந்தி மிளிரும் புறம். 303

- சீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உண்ணுகின்ற உணவிலுள்ள உப்பைப் போல எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாவற்றிலும் இனிமை சுரந்து வருவதே சீர் எனப் பேர் அமைந்துள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதனுடைய வாழ்க்கை பலவகை நிலைகளையுடையது. அவை யாவும் திருந்திய பண்பும் சீர்மையும் உடையனவாய்ப் பொருந்தியிருக்க வேண்டும் என இது உணர்த்துகின்றது.

சீர் என்பது செம்மை, திருத்தம், செப்பம் முதலியவற்றைக் குறித்து வரும். காரியங்களைத் திருந்திய நிலையில் செவ்வையாக முடித்தருளும் சீர்மை சீர் என நேர்ந்தது. சீர் திருத்தம் என வழங்கி வரும் வழக்கு மொழியால் இந்தப் பேரின் இயல்பையும் உயர்வையும் அறியலாகும்.

மனிதன் கருதி எழுகின்ற கரும வகைகளை ‘எண்ணும் நிலைகள்’ என்றது. எண்ணமும் செயலும் உரையும் எவ்வழியும் பின்னமுறாமல் திருந்திய வகையில் சிறந்து வர வேண்டும்.

செப்பத்தின் நுட்பம் தெரிய உப்பு உவமையாய் வந்தது. உணவுகளில் உப்பு இல்லையாயின் அவை சுவை கெட்டுச் சப்பென்று இருக்கும். காரியங்களில் சீர் இல்லையாயின் அவை வீரியம் குன்றி விளிந்து படும். எத்தொழிலைச் செய்தாலும் எதைப் பேசினாலும் அவை சீர்மையுடையனவாய் யாண்டும் சீர்மையுடன் நிலவி வரின் நிறைக்க பயன்கள் விளைந்து வரும்.

செய்யும் வினைகளை எவ்வகையும் செவ்வையாக நோக்கித் திருந்தச் செய்; பேசுகின்ற வார்த்தைகளை யாதும் பிழைபடாமல் அளந்து அறிந்து விழுமிய நிலையில் இதமாகவும் இனிமையாகவும் பேசு. அவ்வாறு ஆயின், நீ சீரியனாய்ச் சிறந்து திகழ்வாய்.

உறுதி நலங்களைக் கருதி உணராமல் காரியங்கள் செய்தலும், கண்டபடி பேசலும் அறிவுநலம் குன்றிய சிறியவர் செயல்களாம்; அவை பெரியவர்களால் மதிக்கப்படாது.

பிழைபாடான அப் பழிவழிகளில் பட்டு இழியாமல் விழி தெளிந்து எழுந்து நயனும் பயனும் விளைய எதனையும் வியனாகச் செய்க. செயலின் அளவே உயர்நிலை உளதாம்.

உள்ளம் திருந்தி, உறுவினைகள் திருந்தி, உரைகள் திருந்தி உயர் நிலைகள் வளர்ந்து வருவோரே சீர்மையாளராய்ச் சிறந்து யாரும் புகழப் பாரில் விளங்கி நிற்கின்றார்,

தன்னைக் கைக்கொண்டவனைச் சீராளன் என்னும் பேராளனாக்கிப் பெருமைப் படுத்தி வருதலால் சீர்மையின் அருமை அறியலாகும். சீர் புரிந்தவன் சீர்த்தி பெறுகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-19, 1:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே