கள்ளாமை – கலி விருத்தம் - வளையாபதி 31

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்
வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்
தோட லின்றி யுலையக் குறைக்குமே. 31 வளையாபதி

பொருளுரை:

பிறமாந்தர் களவு போகாதபடி மறைவாகவும், கைவிடுதலில்லாதவாறும் வைத்துள்ள பல்வேறு பொருள்களையும் பெருமையில்லாத கன்னமிடுதல் முதலிய தொழில்களால் நீ களவு செய்ததன் பயன் இதுவேயாகும் என்று சொல்லி, ஆட்சி அதிகாரத்தில் உள்ள செங்கோல் மன்னவன் கள்வரைத் தன் மறவர்களால் பிடிப்பித்து தப்பி ஓடிவிடாதபடி அவர்தம் கால்களையும் கைகளையும் சேர்த்து விலங்கிட்டு அவர் நெஞ்சம் பதறும்படி தண்டிப்பான்.

வள்ளுவனார்,

கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு குறள், 290 கள்ளாமை

பொருளுரை:

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் தவறாது வாய்க்கும் என்றும்,

களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும் குறள், 284 கள்ளாமை

பொருளுரை:

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது (பிடிபடும் பொழுது) தொலையாத துன்பத்தைத் தரும்.

என்றும் களவினால் வரும் தீமையை உணர்த்துகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jul-19, 6:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

மேலே