சீலமென்பது ஒன்றே உண்மையென்று நன்றே கடைப்பிடிமின் - சீலம், தருமதீபிகை 318

நேரிசை வெண்பா

நூலொன்றா னாலும் நுனித்தறிமின்; நுண்ணுணர்வோர்
பாலன்பு கொண்டு பணிந்துறைமின்; - சீலமென்ப(து)
ஒன்றே கலைபலவும் உற்றபயன் உண்மையென்று
நன்றே கடைப்பிடிமின் நன்கு. 318

- சீலம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒரு நூலையாவது கருத்தூன்றி அறிக: நல்ல அறிவுடையாரிடம் அனபுகொண்டு பழகுக: ஒழுக்கம் ஒன்றே கலைகள் பலவும் கற்ற தலையாய பலனாம்; இவ்வுண்மையை உறுதியாக நம்பி உயர் நலம் உறுக என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், பயிற்சி ஒழுக்கங்களை உணர்த்துகின்றது.

மனிதனுடைய உள்ளம் திருந்தி ஒளி பெறுதற்குக் கல்வி பெருந்துணையாய் வழி புரிகின்றது. அந்த அறிவு நலன் நல்ல நூல்களில் நன்கு நிறைந்துள்ளமையால் அந்நிலைகளை ஓர்ந்து உணர்ந்து கூர்ந்து பயின்று தேர்ந்து கொள்ள வேண்டும். .

நூல் ஒன்று ஆனாலும் என்றது சாரமுடைய ஒரு நூலை வழுவறத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் அது பல நூல்களையும் படித்த பலனைக் கொடுத்தருள்கின்றது. ஒன்றின் தெளிவு பலவும் எளிதாக அறிதற்கு வழியாகின்றது. வெள்ளாடு போல் .துனிப்புல் மேய்ந்து ஒழியலாகாது. அன்னம் பாலை நுகர்தல் போல் நூலை ஆய்ந்து தோய்ந்தவன் அறிவின் சுவையை மாந்தி மகிழ்கின்றான்.

கருத்து ஊன்றி உணர்தலை நுனித்து அறிமின் என்றது. .துணுகி உணரும் அளவே அறிவு நலங்கள் பெருகி எழுகின்றன. கூரிய நுழைமதி சீரிய கலைநிதி ஆகின்றது.

நாளும் பயிலுதல், நன்கு சிந்தித்தல், ஆழம் காணல், அமைதியாய் ஓர்தல், பயின்றதை மீளவும்.அயின்று சுவைத்தல் என்னும் இவை கலை பயில் வழிகளின் தலைசிறந்த நிலைகளாம்.

சிலநாள் பழகின் சிலவும் பலியா;
பலநாள் பழகின் பலிக்கும் என்க:
விரைவால் பார்க்கின் தெரியா(து) ஒன்றும்
விரையா(து) ஏற்கின் கருகா(து) என்க:
வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி
வந்ததில் சிந்தையைச் சிந்தா(து) இறக்குக. - இலக்கணக் கொத்து

நூல் பயிலும் முறைகளை இவ்வுரைகளில் காண்க.

An hour a day with a wisely chosen volume will clarify mind and invigorate spirit. - Living Creatively

’நன்கு தேர்ந்தெடுத்த ஒரு நல்ல புத்தகத்தோடு நாளும் அரைமணி நேரம் ஒருவன் பழகிவரின் அவன் உணர்வும் உள்ளமும் உறுதியும் தெளிவும் பெற்று உயர்ந்து விளங்கும்' என பேஜ் என்னும் அமெரிக்க அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார்,

’நுண் உணர்வோர்பால் உறைமின்’ என்றது சேர்க்கையின் சீர்மையை உணர்த்தியது. தனியே இருந்து நல்ல நால்களை ஆழ்ந்து படி. வெளியே எழுந்தால் சிறந்த அறிவாளிகளோடு சேர்த்து பழகு. அகமும் புறமும் அறிவு நலம் வளர மருவி வருக,

அறிவில்லாதவர்களோடு பழகின் மடமையும் தீமையும் விரவி வருமாதலால் அவருடன் பழகலாகாது. உணர்வுடையாரது கூட்டுறவு உணர்ச்சியை வளர்த்தருள்கின்றது; அதனால் மகிழ்ச்சியும் உயர்ச்சியும் மாட்சியும் விளைகின்றன.

நேரிசை வெண்பா

நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் - நுண்ணூல்
உணர்விலர் ஆகிய ஊதியம் இல்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று. 233 கூடா நட்பு, நாலடியார்

உணர்வுடையார் நட்பு துறக்க இன்பம்; உணர்விலிகள் உறவு நரக துன்பம் என இஃது உணர்த்தியுள்ளது.

சீலம் என்பது கலை பலவும் உற்ற பயன். கலைகள் பல வகையான அறிவுகளின் பெருக்காய்ப் பெருகியுள்ளன. அந்தப் பெரிய வெள்ளப் பெருக்கின் இனிய சாரமாய் ஒழுக்கம் உள்ளமைந்துள்ளது.

தண்ணீர்க்கு உள்நீர்மை போல் கலைகளுக்குச் சீலம் என்றதனால் அதன் நிலைமை தெளியலாம். சீலம் தோய்ந்த கலையறிவே இனிய சுவையுடையதாய் இன்பம் தருகின்றது.

அமுத மயமாய் ஆத்தும சாந்தியை அளித்தருளுதலால் சீலத்தை எவற்றினும் மேலாகப் போற்றி ஒழுக வேண்டும். நல்ல நூலை நாடி உணர்க: மேலோருடன் கூடி உறைக; சீலம் உடையனாய்ச் சிறந்து திகழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-19, 2:26 pm)
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே