நீதி நெறியில் நிலைத்துநின்றார் தீதிலராய் ஓங்கித் திகழுவார் - சீர்மை, தருமதீபிகை 308

நேரிசை வெண்பா

நீதி நெறியில் நிலைத்துநின்றார் எஞ்ஞான்றும்
தீதிலராய் ஓங்கித் திகழுவார் - நீதி
தனையகன்றார் சாய்ந்து தளர்வார் தனிவேர்
மனையகன்றால் என்னாம் மரம். 308

- சீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நீதி ஒழுக்கங்களில் நிலைத்து நிற்பவர் என்றும் யாதொரு தீதுமின்றி யாண்டும் உயர்ந்து விளங்குகின்றார்; நீதி முறை தவறினவர் வேரற்ற மரம்போல் நிலை குலைந்து இழிந்துபடுகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர். மனை - இடம், நிலம்.

நல்ல இன்பங்களையே எல்லாரும் விரும்புகின்றனர்; தீய துன்பங்கள் யாதும் தம்பால் சேரலாகாது என்று யாவரும் கருதுகின்றனர். இங்ஙனம் தாம் கருதியபடியே துயர் நீங்கி உயர் நலங்களை அடையும் வழி வகையை இது உணர்த்துகின்றது.

வழி தவறி நடந்தால் முள்ளும் கல்லும் தொல்லைப்படுத்தும்; நெறி தவறி நடந்தால் அல்லலும் அவமானமும் அடர்ந்து வருத்தும். அல்வழி செல்லாதே; நல்வழி நட.

உயிர்கள் உயர்நிலை அடைதற்குரிய ஒழுக்க முறைகளை நீதி நெறி என்றது. வேத விதியாய் வந்துள்ள அவற்றை விழைந்து பேணி வருபவர் உயர்ந்த மேன்மக்களாய் விளங்கி நிற்கின்றனர்.

மனித சமுதாயம் புனிதம் உடையனவாய் இனிது உயரும்படியான வழிகள் முன்னோரால் எந்நாட்டிலும் வகுக்கப்பட்டுள்ளன. அந்நெறி வழுவாமல் ஒழுகி வருபவரை நீதிமான்கள், தருமவான்கள் என உலகம் உவந்து கொண்டாடுகின்றது.

தரும நெறியில் ஒழுகுகின்றவனுக்கு எல்லாப் பெருமைகளும் தாமாகவே வந்து சேருகின்றன. புகழும் புண்ணியமும் பெருகி வருதலால் அவன் என்றும் நிலையான பேரின்ப நலனை அடைந்து கொள்கின்றான்.

நீதியைத் தழுவி ஒழுகிய பொழுதுதான் மனிதன் உண்மையான உயிர் வாழ்க்கையை உடையவன் ஆகின்றான். தழுவாது வழுவின், அது செத்த வாழ்க்கையாய்ச் சீரழிந்து ஒழிகின்றது.

In the way of righteousness is life; and in the pathway thereof there is no death. – Bible

’நீதி நெறியில் உயிர் ஒளி பெறுகின்றது; அவ்வழியில் மரணம் இல்லை’ என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது.

தருமம் தவறின் அவ்வாழ்வு பரிதாபமாய் இழிந்து படுகின்றது.

'அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி, அஃது உறுதி’ – இராமாயணம், என இராமன் சுக்கிரீவனுக்கு போதித்திருக்கிறான்.

வேரற்ற மரம் அடியோடு வீழ்ந்து படுதல் போல், தருமம் அற்றவன் குடியோடு தாழ்ந்து கெடுகின்றான்.

உயிர் வாழ்க்கைக்கு உறுதி பயந்து நிற்கும் அதன் தகுதி கருதி ’நீதியை வேர்’ என்று குறித்தது. தரும வழி ஒழுகி இருமை நலனும் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-19, 2:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே