அன்பு கனிய அருள்புரியின் அவ்வாழ்வு இன்பம் உடையது - நீர்மை, தருமதீபிகை 323

நேரிசை வெண்பா

வாக்கில் இனிமை மனந்தூய்மை யாரிடமும்
நோக்கில் உரிமை நுதலியே - போக்கெங்கும்
அன்பு கனிய அருள்புரியின் அவ்வாழ்வு
இன்பம் உடைய(து) இவண். 323

- நீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வாயில் இனிய சொல்லும், மனத்தில் தூய எண்ணமும், பிறர்பால் குளிர்ந்த பார்வையும், எங்கும் அன்பு கனிய அருள் புரிந்துவரின் அவ்வாழ்வு இன்பம் சுரந்து ஈண்டு இசை மிகுந்து உள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், சொல், செயல் எல்லாம் சுக நீர்மை தோய்க என்கின்றது.

வாயினால் பேசுகின்ற வார்த்தையை வாக்கு என்றது. மனிதனுடைய எண்ணங்களையும் நிலைகளையும் வெளியே தெளியச் செய்வது வாய்மொழியே. வாழ்க்கை யாவும் வாய்ச்சொல்லால் நடந்து வருகின்றன. சீவியத்தின் ஆதரவாயுள்ள அதன் பொறுப்பும் சிறப்பும் தனித்து நோக்கத் தக்கன.

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு. 127 அடக்கமுடைமை

நாவைப் பாதுகாக்து ஒழுக வேண்டிய உறுதி நிலையை இதனால் உணர்ந்து கொள்ளலாம். ஒரு சொல் கொல்லும்; ஒரு சொல் வெல்லும் என்னும் பழமொழி வாக்கின் வரவு செலவுகளை நன்கு உணர்த்தியுள்ளது.

Who so keepth his mouth and his tongue, keepeth his soul from troubles. - Bible

'தன் வாயையும், நாவையும் காக்கின்றவன் தன் உயிரை யாதொரு துயரமும் அடையாமல் பேணுகின்றான்’ என்னும் இது ஈண்டுக் காணத்தக்கது.

நாவைக் காத்தலாவது தீய மொழிகள் பயிலாமல் யாண்டும் அமைதியாய் நல்லன. பேசி வருதல். எவர்க்கும் இன்பம் விளைத்து வருதலால் அன்பு நலம் கனிந்த இனிய மொழியில் தரும நலங்கள் தழைத்து வருகின்றன.

நேரிசை வெண்பா

இனியமொழி பேசும் எழில்நா புகழின்
புனித மனையாய்ப் பொலிந்து - தனியறங்கள்
யாவும் விளையும் அருள்நிலைய மாமதனை
மேவினார் தேவினார் மேல்,

நல்ல நாவினால் இவ்வாறு நலங்கள் பல உளவாகின்றன. நாவின் இனிமை மனத்தின் புனிதத்தை மருவி வரும்பொழுதுதான் அது உண்மையான உயர்சுவையுடையதாய் ஒளி வீசுகின்றது. இனியசொல் புனிதமனத்தின் தனி ஓசையாகின்றது. தூய்மை மணம் வாய்மையில் பரிமளிக்கின்றது.

எவரிடமும் அளிபுரிந்து குளிர்ந்த நோக்கோடு கனிந்து பார்த்தலை ’நோக்கில் உரிமை நுதலி’ என்றது. நுதலுதல் - சொல்லுதல். ஆருயிர்களிடம் அருள் புரிந்துள்ளமையை மேலோர் பார்வையே காட்டி விடுமாதலால் அக்காட்சியின் மாட்சி காண வந்தது.

நேரிசை வெண்பா

கண்ணோக்(கு) அரும்பா நகைமுகமே நாண்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை
பலமா நலங்கனிந்த பண்புடையார் அன்றே
சலியாத கற்ப தரு. 37 - நீதிநெறி விளக்கம்

இனிய நீர்மையுடையவர்களது இயல்பை உருவகித்து அவரைக் கற்பகத்தருவாக இது வருணித்திருக்கிறது.

மனம் மொழி மெய்கள் இனிமை ஆயபோது மனிதன் அமுதமாகவும்.கற்பகமாகவும் மாறி அற்புத நிலையை அடைகின்றான். நீர்மை விளையச் சீர்மைகள் வளர்கின்றன.

ஒருவன் உள்ளத்தில் அன்பும் அருளும் கனியவே அவனுடைய வாழ்க்கையில் இன்பமும் மகிமையும் பெருகி எழுகின்றன.

இன் சொல் இயம்புக, நெஞ்சத்தைத் தூய்மை ஆக்குக; எங்கும் அன்பு செய்க; எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jul-19, 3:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே