பழைய முகங்கள்

கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பின் என் இளமைக்கால நினைவுகளில் ஒன்றான இந்தப்பாடலைக் கண்டடைந்தேன். முன்பெல்லாம் திருவனந்தபுரம் வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பாகும். இணையம் எல்லாவற்றையும் அழிவற்றதாக்குகிறது.



இந்தப்பாடல் நான் பிறந்த ஆண்டு , பிறப்பதற்கு ஒருமாதம் முன் , 1962 மார்ச்சில் வெளியான ஸ்னேகதீபம் என்னும் படத்தில் வெளிவந்தது. இசை எம்.பி.ஸ்ரீனிவாசன். இயற்றியவர் பி.பாஸ்கரன். அக்காலத்தில் வந்த தூய மேலைநாட்டு மெட்டு. ஆகவே அன்று இது ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இசைநிகழ்ச்சிகளில் பாடுவார்கள். அதைவிட பாண்ட் வாத்தியங்களில் வாசிப்பார்கள்.



[எம்.பி.ஸ்ரீனிவாசன்]

எம்.பி.ஸ்ரீனிவாசன் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான படம் ஸ்னேகதீபம். அவர் அமைத்த முதல் பாடல் ‘சந்த்ரன்றே ப்ரஃபயில்’ தான் என்று ஒரு பேட்டியில் சொல்கிறார்.

மானாமதுரை பாலகிருஷ்ணன் ஸ்ரீனிவாசன் 1925ல் பிறந்தவர். கம்யூனிஸ்டு இயக்கத்துடன் நெருக்கமானவர். ஜெயகாந்தனின் நண்பர். ஒளிப்பதிவாளர் நிமாய்கோஷ் அவரை சினிமாவுக்குக்கொண்டுவந்தார். அவர் இசையமைத்த முதல்படம் இடதுசாரிகள் பொதுநிதி திரட்டி எடுத்த பாதை தெரியுது பார். ஆனால் 1962ல் வெளிவந்த ஸ்னேகதீபம் அவருக்குப் புகழ்தேடித்தந்தது. சந்த்ரன்றே பிரபயில் அவரை நட்சத்திர இசையமைப்பாளர் ஆக்கியது

மலையாளத்தில் ஐம்பது படங்களுக்குமேல் இசையமைத்திருக்கிறார்.பல படங்கள் இசைக்காகவே பேசப்படுபவை. மலையாள கலைப்பட -நடுப்போக்குப் பட இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக இருந்தார். சினிமாவுக்கு ஏசுதாஸை அறிமுகம் செய்தவர் எம்.பி.ஸ்ரீனிவாஸ்தான். ஐந்துமுறை கேரள அரசின் இசையமைப்பாளர் விருதைப் பெற்றிருக்கிறார். மலையாளத்தின் பல மறக்கமுடியாத பாடல்களை அமைத்துள்ளார்.

ஆனால் அவருடைய முதன்மை ஆர்வம் தொழிற்சங்க நடவடிக்கைகளில்தான் இருந்தது, திரைப்படத்தொழிலாளர்ச் சங்கத்தின் அமைப்பாளர் அவர்தான். பின்னர் சேர்ந்திசையில் பல சோதனைகளைச் செய்தார். 1988ல் மறைந்தார்.


மெரிலாண்ட் சுப்ரமணியம்

இந்தப்பாடலில் ஒரு தனித்தன்மை உண்டு. இதில் சம்பந்தப்பட்டவர்களில் பலர் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதன் இயக்குநர், தயாரிப்பாளர் ‘மெரிலாண்ட் சுப்ரமணியம்’ என்னும் பி.சுப்ரமண்யம் பூர்வீகமாக குலசேகரத்தைச் சேர்ந்தவர். நாகர்கோயிலில் 1910ல் பிறந்தார். 1979ல் மறைந்தார்.தந்தை பத்மநாப பிள்ளை, தாய் நீலம்மாள். திருவனந்தபுரத்தில் கல்விகற்கச் சென்றார். அங்கே படிப்பை முடிக்காமல் நீர்வினியோகத்துறையில் வேலையில் சேர்ந்தார்.



திருவனந்தபுரம் கவடியார் அரண்மனைக்கு குடிநீர் இணைப்பை வழங்கியபோது அரசகுடும்பத்துடனும் திவான் சி.பி.ராமசுவாமி அய்யருடனும் தொடர்பு ஏற்பட்டது. அது அவரை உயர்த்தியது. முதலில் பேருந்து நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். பிரஹலாதா என்னும் திரைப்படத்தை தயாரித்தார். திருவனந்தபுரத்தில் அவர் நிறுவிய நியூ திரையரங்கம் இன்றும் உள்ளது. திவான் இலவசமாக அளித்த இடம் அது.



மெரிலான்ட் ஸ்டுடியோ, நீலா புரடக்‌ஷன்ஸ் ஆகியவை சுப்ரமணியத்தின் நிறுவனங்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் யானைவளர்த்த வானம்பாடி மகன் போன்றவை தமிழிலும் பிரபலமான படங்கள். அவர் தயாரித்து இயக்கிய படம் ஸ்னேகதீபம் இந்தப்படங்கள் எல்லாம் ஸ்டுடியோத் தயாரிப்புகள். முதலாளி பேரில் வெளிவருபவை.



[திக்குறிச்சி சுகுமாரன் நாயர்]



கதைநாயகனாக நடித்தவர் திக்குறிச்சி சுகுமாரன் நாயர். மார்த்தாண்டம் அருகிலுள்ள திக்குறிச்சி என்னும் ஊரில் 1916 ல் கோவிந்தப்பிள்ளைக்கும் லக்ஷ்மி அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தவர். அவருடைய அக்கா ஓமனக் குஞ்ஞம்மாதான் இந்தியாவின் முதல் பெண் நீதிபதி. கேரளத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்கூட.



திக்குறிச்சி நெடுங்காலம் நடித்தார். 1997ல் மறைந்தார். 700 படங்கள் நடித்திருக்கிறார். மலையாளத்தின் முதல் ஸ்டார் நடிகர் என்பார்கள். பாடலாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்டவர். 1950 ல் அவருடைய புகழ்பெற்ற நாடகமான ஸ்த்ரீ படமானபோது அதில் நாயகனாக நடித்தார். அடுத்த ஆண்டு வெளிவந்த ஜீவிதநௌகா என்னும் படம் மலையாளத்தின் முதல் ’பிளாக்பஸ்டர்’ அது அவரை நட்சத்திரமாக ஆக்கியது



திக்குறிச்சி கதைநாயகனாக திரைக்கு வரும்போதே முப்பத்துநான்கு வயது. இப்படம் நடிக்கையில் நாற்பத்தாறு வயது. பொத்து பொத்தென இருக்கிறார். நடிப்பெல்லாம் வரவில்லை. அக்காலத்தைய கேரளச் சாம்பார் என தெரிகிறது. நாயர் சாம்பார் இன்னும் கொஞ்சம் சப்பென்று இருக்கும். உடைகள் தமாஷாக இருக்கின்றன. நாயகிக்கும் நாற்பதோடு ஒட்டிய அகவை. மூட்டுவலிகள் இருக்கக்கூடும். இருவரும் கொஞ்சம் மெதுவாகவே காதல்வானில் சிறகடிக்கிறார்கள்



[கமுகற புருஷோத்தமன்]



பாடியவர் கமுகற புருஷோத்தமன் நாயர் 1930 ல் என் சொந்த ஊரான திருவரம்பிலிருந்து இரண்டு கிமி தொலைவிலுள்ள கொல்வேல் என்னும் ஊரில் பிறந்தார்.பரமேஸ்வரக் குறுப்புக்கும் லக்ஷ்மியம்மாவுக்கும் மகனாக. இளமையிலேயே திருவட்டார் ஆறுமுகம்பிள்ளையிடம் மரபிசை பயின்றார். அவருடைய தங்கை லீலா ஓம்சேரியும் இசைபயின்றார். மரபிசைக்காக பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் லீலா ஓம்சேரி.



கமுகறை புருஷோத்தமன் நாயர் மெரிலாண்ட் ஸ்டுடியோ தயாரிப்பில் வந்த பொன்கதிர் படத்துக்காக முதன்முதலாக பாடினார். ஏறத்தாழ பத்தாண்டுகள் மலையாளத்தின் முதன்மைச் சினிமாப் பாடகராக இருந்தார். அதன்பின் ஏசுதாசின் எழுச்சி. அவருடைய குரல் ஒவ்வாமலாகியது. அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். திருவட்டாரில் அவருடைய குடும்பத்தின் உயர்நிலைப் பள்ளியை நடத்தினார்.1995ல் மறைந்தார்



திக்குறிச்சி, கமுகறை இருவருமே இளமையில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள். திக்குறிச்சி சுகுமாரன் நாயரின் அண்ணா குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அவருடைய இரண்டாவது மனைவி நாங்கள் முழுக்கோட்டில் தங்கியிருந்தபோது எங்கள் பக்கத்துவீட்டில் இருந்தார். அவர் வாரந்தோறும் அங்கே வருவார். பலமுறை திக்குறிச்சி சுகுமாரன் நாயரும் வந்திருக்கிறார்.



அவர்களுக்கு நிறைய நிலம் இருந்தது. அதில் ஆயிரம் சிக்கல்கள். திக்குறிச்சி சுகுமாரன் நாயர் வந்து நில ஆவணங்களைப்பற்றி என் அப்பாவிடம் பேசிக்கொண்டிருப்பார். ஒரே வெற்றிலையாகப்போட்டு துப்புவார்கள். எனக்கு அப்போது பத்துவயது. அவர் நடிகர் என தெரியும் கம்பியைப்பிடித்தபடி நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கு திருவனந்தபுரத்தில் இருந்து மிட்டாய்கள் கொண்டுவந்து தந்திருக்கிறார். என் அப்பா நண்பர்களுடன் கொண்டாட்டமாக இருப்பார். திக்குறிச்சி பாலியல்கதைகளின் மாபெரும் களஞ்சியம்.



கமுகறை புருஷோத்தமன் நாயரும் அப்பாவுக்குத் தெரிந்தவர். திருமணங்களில் பார்த்திருக்கிறேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் ஒருமுறை வகுப்பை வெட்டிவிட்டு மார்த்தாண்டத்துக்கு சினிமாவுக்குச் சென்றேன். திரும்பிம்போது காரில்வந்த கமுகறை புருஷோத்தமன் நாயர் வழியிலேயே என்னை பிடித்து வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டு அப்பாவிடம் அடிவாங்கி தந்தார். அவரும் காரிலேறும்போது நாலைந்து அறைவிட்டார். அப்பா என்னை விசிறிக்கம்பால் அடித்தபின் இருவரும் அமர்ந்து வெற்றிலைபோட்டு பேசிக்கொண்டார்கள். நான் வழக்கம்போல ஓரமாக நின்று அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.



இந்தப் பாட்டு வித்தியாசமாக இருக்கிறது. அரைநூற்றாண்டு கடந்தபின்னரும் பழைமையாக ஆகவில்லை. அக்காலப் பாட்டுக்கள் பலவும் ஆர்மோனியப்பாட்டுகளாகவே இன்று கேட்கின்றன. இது காலத்தைக் கடந்துவிட்டது. ஆனால் இப்படி ஒரு வெஸ்டர்ன்நோட் எப்படி சினிமாவுக்குள் வந்தது? அவர்கள் இருவரும் மாமா மாமி போல உடைஅணிந்து செட்டுக்குள் பாடுகிறார்கள். ஒருவேளை அதுதான் அக்கால மேலைநாட்டு உடையோ?









சந்த்ரன்றே ப்ரஃபயில் சந்தன மழயில்

சுந்தர ராவின் புஞ்சிரியில்

மறந்நு நம்மள் மறந்நு நம்மள்

மண்ணும் விண்ணும் பிராணசகி



பறந்நு நம்மள் ப்ரணயம் தன்னுடே

பாலொளி வானில் பறவகளாயி



மழவில்லுகளே பிழிஞ்ஞ சாறில்

எழுதுக நம்முடே சுந்தர சித்ரம்



ப்ரஃபயும் வசந்த சந்த்ரனுமாயி

ப்ரணயிச்சீடும் சுந்தர சித்ரம்





[தமிழில்]





சந்திரனின் ஒளியில் சந்தன மழையில்

சுந்தர இரவின் புன்னகையில்

மறந்தோம் நாம் மண்ணையும் விண்ணையும் உயிர்த்தோழி



பறந்தோம் நாம் காதலின்

பாலொளி வானில் பறவைகளாக



வானவிற்களைப் பிழிந்த சாறால்

எழுதுவோம் நமது அழகிய சித்திரம்



ஒளியும் வசந்த சந்திரனும்

காதல்கொள்ளும் அழகிய சித்திரம்

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் மின் (12-Jul-19, 7:36 pm)
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே