மனம் புனிதமாயின் மனிதன் இறைவன் இனம்புகுந்து நிற்பான் எளிது - தூய்மை, தருமதீபிகை 351

நேரிசை வெண்பா

எடுத்த பிறவி இனிதாய் உயர்ந்து
தொடுத்த துறக்கமும் தோன்றும் - மடுத்த
மனம்புனிதம் ஆயின் மனிதன் இறைவன்
இனம்புகுந்து நிற்பன் எளிது. 351

- தூய்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனிதனுடைய மனம் புனிதமானால் அவன் பிறந்த பிறவி உயர்ந்து பேரின்ப நிலையைப் பெற்றுத் தெய்வத்தின் இனமாய்ச் சிறந்து திகழ்வான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயிர் இனங்களுள் மனிதன் உயர் நிலையில் ஒளி பெற்று நிற்கின்றான். அந்த நிலை எண்ணங்களால் இயைந்ததாதலால் அவன் உயர்ந்துள்ளமைக்கு உள்ளமே மூல காரணம் என்பது உணர்ந்து கொளளலாம். அகமே புறம் எனும் தகவுரை உயர் பொருளுடையது. வாழ்வின் நிலையெல்லாம் உள்ளச் சூழ்வில் உறைந்திருக்கின்றன. உண்மை தெளிதல் நன்மையாம்.

சுகத்தை விரும்புவதும், துக்கத்தை வெறுப்பதும் மனித இயல்புகளாய் மருவியுள்ளன. தான் கருதிய இன்பங்களைக் கருதியபடியே ஒருவன் மருவ வேண்டுமாயின் தன் மனத்தை முன்னதாக அவன் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும்.

உயர்வு தாழ்வு, இன்பம் துன்பம், ஆக்கம் கேடு முதலிய எல்லா நிலைகளுக்கும் மனமே ஆதி மூல நிலையமாய் அமைந்திருத்தலால் அதன் ஆதார அமைதிகளை ஆராய்ந்து யாதும் ஏதமுறாவகை யாண்டும் நல்ல சாதனமாக அதனைப் பாதுகாத்துக் கொள்வது உயர்ந்த போதனையாய் வந்தது.

மனத்தைப் புனிதமாகப் பேணிக் கொண்டவன் புண்ணியவானாய்ப் புகழ் மிகப் பெறுகின்றான்; பேணாதவன் பாவியாய் இழிந்து பழிக்கப்படுகின்றான். சுத்தம், தூய்மை, புனிதம் என்னும் மொழிகள் இனிய பொருள்களையுடையன.

மனம் எதனை ஆழ்ந்து நினைக்கின்றதோ அதன் மயமாய்ச் சூழ்ந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்றது. அதனால், அதன் உருவும் உறவும் வெளி மிளிர்கின்றன.

உயர்ந்த நிலைகளை அடைய விரும்புகின்றவன் இழிந்த புலைகளை யாண்டும் எண்ணலாகாது. இளிவான நினைவுகள் மனிதனை ஈனன் ஆக்கி விடுமாதலால் எவ்வழியும் அவை யாதும் புகாமல் பாதுகாப்பது நலம். மாசின்மை தேசுடைமை ஆகின்றது.

தூசி விழாதபடி கண்ணை இமை காப்பது போல், மாசு படியாதபடி மனத்தை உணர்வு காக்க வேண்டும்.

புனித மனமுடையவன் இனிய வாழ்வு கண்டு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் மிகப் பெறுகின்றான். எம்மையும் நன்மையே காண்கின்றான்.

மனம் புனிதமாயின் மனிதன் இறைவன்’ என்ற தொடர் சித்த சுத்தியுடைய உத்தமனது உயர்நிலையை உய்த்துணர வந்தது. பரிசுத்தநிலை கடவுளுக்கு வடிவமாதலால் அந்நிலையினையடைந்தவன் இறைவன் என நின்றான்.

Cleanliness is indeed next to Godliness.

சுத்தம் தெய்வீக நிலையது என மேல்நாட்டாரும் இங்ஙனம் கூறியுள்ளனர். காட்சிக்கு இனியதாய் இன்பம் தோய்ந்திருத்தலால் புனிதத்தை யாரும் போற்றி வருகின்றனர். தேக சுத்தம், மனசு சுத்தம், ஆன்ம சுத்தம் எனத் தூய்மை பலவகை நிலைகளில் பரவியுள்ளன.

நீரால் தேக சுத்தி நேர்கின்றது; சத்தியத்தால் இதய சுத்தி எய்துகின்றது; தத்துவ ஞானத்தால் ஆத்தும சுத்தி அமைகின்றது; ’கூழ் ஆனாலும் குளித்துக் குடி; கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு’ என்னும் பழமொழியால் மனிதன் எத்தகைய வறிய நிலையில் இருந்தாலும் அவன் சுத்தமாக வாழ வேண்டும் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்கின்றோம்.

அழுக்கு, மாசு, அசுத்தம் என்னும் சொற்களைக் கேட்டாலே யாரும் அருவருப்படைகின்றனர்; அம்மலினங்களை மருவலாகாது பகுத்தறிவு நிறைந்த உயர்ந்த மனிதப் பிறவியை அடைந்துள்ள நீ உன் வாழ்க்கையை எவ்வழியும் தூய்மையாக வகுத்து யாண்டும் செவ்வையாய் வாழ வேண்டும்; அதுவே திவ்விய வாழ்வாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jul-19, 6:21 pm)
பார்வை : 98

மேலே