ஒளியின் துருப்புசீட்டு

ஒரு இலையின் ஞாபகத்தில்
என் பெயர் இருக்கலாம்.

ஒரு காடு இதமான
என் மூச்சை பார்த்திருக்கலாம்.

நான் கடக்கும் பாலங்கள்
ஆற்றின் புல்லரிப்பை
காட்டாது போயிருக்கலாம்.

எங்கோ விழும் அவ்விண்மீனை
அவளும் கண்டிருக்கலாம்.

எனது தனிமையில்
இரவெல்லாம் பகலாகிய
இந்த கணமும் அவர்களில்லை.

ஒரு துறவியின்
கடைசி நாள் போன்றுதான்
இந்த பூமி சுழல்கிறது.

இரவில் மரணமடைந்த
ஒரு குருவியின் வாழ்வினை
உண்பதற்கே பரிதி வருகிறது.

அலையில் துயிலும் துரும்பில்
ஒட்டி கிடக்கிறது கடல்.

தூசியில் வழுக்கும் காற்று
தூண்களை முறிக்கிறது.

கனவில் உடைந்து எழுந்தவனை
வாழ்க்கையும் உடைக்கிறது.

நான் கடைசியாக வருபவரிடம்
கேட்பது ஒன்றுதான்.
நதியில் முக்கோணம் எது?

எழுதியவர் : ஸ்பரிசன் (19-Jul-19, 3:04 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 94

மேலே