உள்ளங் கெடினோ எள்ளல் அடைந்தே இழிந்தழிவாய் – நேர்மை, தருமதீபிகை 344

நேரிசை வெண்பா

உள்ளங் கெடினோ உனைக்கடவுள் காத்தாலும்
எள்ளல் அடைந்தே இழிந்தழிவாய் – உள்ளங்
கெடாதேல் உலகமெலாங் கேடுசெய் தாலும்
படாதுன் எதிரே பயம். 344

– நேர்மை, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உன் உள்ளம் கெட்டதாயின் கடவுள் வந்து உன்னைக் காத்து அருளினாலும் நீ இழிவடைந்து அழிந்து ஒழிவாய்; கெடாதாயின் உலகம் எல்லாம் கூடிக் கேடு செய்தாலும் உன் எதிரே யாதொரு துயரும் அணுகாது என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உள்ளத்தின் உண்மை கூறுகின்றது.

உயிர்களின் உயர் நலங்களுக்கும், இழிநிலைகளுக்கும் மனமே தனி நிலையமாயுள்ளது. அதனைப் புனிதமாகப் போற்றி வருகின்ற மனிதன் அரிய பல உறுதி நலங்களை எளிதில் அடைந்து தனி மகிமையாளனாய்த் தழைத்து நிற்கின்றான். அங்ஙனம் போற்றாதவன் ஏற்றம் இழந்து தூற்றப்படுகின்றான்.

உள்ளம் கெடுதலாவது தீய எண்ணங்களால் தீது படுதல். கேடான நினைவு தினை அளவு எழினும் அம்மனம் பாழாகி பழுதடைந்த விதைபோல் நல்ல விளைவு யாதும் பலியாமல் அது வீணே இழிவடைந்து போகிறது.

‘நெஞ்சம் கெடின் அஞ்சும் கெடும்’ என்னும் பழமொழியால் ஐம்பொறிகளுக்கும் அது ஆதாரமாயுள்ளமை அறியலாகும்.

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்தும் உயிர் வாழ்வின் நெறிகளாய் அமைந்திருக்கின்றன. புறத்தில் உள்ள இந்த ஐந்து பொறிகளும் அகத்தில் உள்ள மனத்தின் வழியே இயங்கி வருகின்றன. அது நல்லதாயின் யாவும் நல்லனவாய் நலம் புரிகின்றன; தீயதானால் எல்லாம் தீயனவாய்த் தீங்கு படுகின்றன.

உலகில் காணப்படுகிற நலம் தீங்குகள் யாவும் உள்ளமாகிய மூல வித்திலிருந்தே துள்ளி வந்தனவாதலால் அதன் நிலைமையும் தலைமையும் நீர்மையும் உள்ளி உணரற்பாலன. மனம் சிறிது கோடினும் கேடு பெரிது நீடும்.

கெடுவல்யான் என்ப(து) அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். 116 நடுவு நிலைமை

இந்த அருமைத் திருக்குறளை யாண்டும் நெஞ்சில் வைத்து யாவரும் சிந்தித்து வர வேண்டும் நேர்மை குன்றித் தன் நெஞ்சம் சிறிது மாறுபடின் அது ஒரு பெரிய கேட்டுக்கு அறிகுறியாம் என வள்ளுவப் பெருந்தகை இங்ஙனம் உணர்த்தியுள்ளார். இந்த மானச உண்மையை மானிடன் ஊன்றி உணர்ந்து கொண்டு யாதும் ஊனம் உறாவகை ஒழுகிவரின் அவன் ஞான சீலனாய்ப் பெருகி வருகிறான். புன்மை ஒழியவே நன்மைகள் விளைகின்றன.

மனம் வழுவுறின் மனிதன் இழிவும் துயரும் மருவி அழிவுறுகின்றான்;.உள்ளக்கேடு வெள்ளக்கேடாய் விரிந்து எழுகின்றது.

உடம்புக்குக் கண்கள்போல் உயிர்க்கு உள்ளம் கண்; இந்த அருமை விழி பழுதுபடின் ஆன்ம வாழ்வு இருளடர்ந்து மருள் படர்ந்து அழிதுயாங்கள் அடைகின்றன.

சூரியன் ஒளி எங்கும் பிரகாசமாய் இருந்தாலும் ஒளி இழந்த விழிக்கு யாதும் பயன்படாது. பரஞ்சோதியாகிய இறைவன் அருள் யாண்டும் நிறைந்திருந்தாலும் பழுதுபட்ட உளத்துக்கு ஓர் உதவியும் பயவாது.

கடவுள் காத்தாலும் இழிந்து அழிவாய். என்றது உள்ளம் கெடின் உளவாகும் இழிவையும் அழிவையும் தெளிவாக வலியுறுத்த வந்தது. உறுதியைக் கருதி உணர்ந்து கொள்ள வேண்டும்..

‘மனம் இருந்தபடி குரு இருந்தருளும்’ என்பது பழமொழி. மனத்தின் புனித நிலைக்குத் தக்கபடியே தெய்வங்கள் சகாயம் செய்கின்றன. அது கெடின் யாவும் கைவிட்டு விடுகின்றன.

குருட்டுக் கண்ணுக்குக் கதிரவனும் உதவி செய்ய முடியாது; தீய நெஞ்சுக்குக் கடவுளும் கைதர இசையாது.

தன் நெஞ்சம் புனிதமாக அமையின் அம்மனிதன் அதிசய ஆற்றலுடையனாய்த் தனி மகிமை அடைகின்றான்.

பள்ளத்தில் வெள்ளம் வந்து பெருகுதல் போல் நல்ல உள்ளத்தில் எல்லா நலங்களும் இனிது நிறைகின்றன.

’உலகம் எலாம் கேடு செய்தாலும் உன் எதிரே பயம்படாது’ என்றது செவ்விய நல்ல உள்ளத்தின் திவ்விய நிலைமை தெரிய வந்தது. மனம் நீதியும் நேர்மையும் தோய்த்திருப்பின், அது ஆதி பகவனது நிலையம் ஆகின்றது; ஆகவே யாதொரு தீதும் அதனை அணுகாமல் ஒழிகின்றது.

தன் நெஞ்சம் நல்லதாயின் அம்மனிதன் யாண்டும் அஞ்ச வேண்டியதில்லை. உலகம் எல்லாம் ஒருங்கு திரண்டு இடர் செய்ய நேர்ந்தாலும் அவனுக்கு யாதொரு துயரும் நேராது.

நயமுடைய நெஞ்சம் பயம் அடையாது. எங்கும் அஞ்சாமல் நின்று. அருந்திறல் புரிந்து பெருந்தகைமை காணும். இக்காட்சியைக் கண்டு மனிதன் மாட்சி அடைய வேண்டும். பயம் - அச்சம்.

உன் உள்ளம் பழுதானால் கடவுள் காத்தாலும் எள்ளல் அடைந்தே இழிந்தழிவாய். உள்ளம் நல்லதாயின் யாரும் உன்னை வெல்ல முடியாது; எல்லா நன்மைகளையும் ஒருங்கே பெற்றுப் பெருமகிமையடைந்து பேரின்பம் பெறுவாய். இவ்வுண்மையை உறுதியாக உணர்ந்து செம்மை நெஞ்சனாய்ச் சிறந்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jul-19, 12:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே