நெஞ்சே நற்சான்றாக நேர்ந்து நடப்போரே மேன்மை அடைகுவார் - நேர்மை, தருமதீபிகை 347

நேரிசை வெண்பா

நெஞ்சேநற் சான்றாக நேர்ந்து நடப்போரே
அஞ்சாமை மேன்மை அடைகுவார் - நெஞ்சதனைக்
கொன்று திரிவோர் கொலைஞர்போல் எஞ்ஞான்றும்
நின்று வெருள்வர் நெடிது. 347

– நேர்மை, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனமே சாட்சியாக நேர்மையுடன் நடப்பவர் யாண்டும் ஆண்மையாளராய் மேன்மைகள் பல அடைவர். நெஞ்சத்தைக் கொன்று திரிபவர் கொலையாளிகள் போல் புலையாய் இழிந்து என்றும் நிலை தாழ்ந்து கெடுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், நெஞ்சின் நியதி கூறுகின்றது.

மனித சமுதாயம் நெறிமுறையே ஒழுங்காய் இனிது நடந்து வரும் பொருட்டே வேத விதிகளும் அரச நீதிகளும் அதிகார நிலைகளில் வெளி வந்திருக்கின்றன.

இந்த விதி முறைகளின்படி ஒழுகி வருபவர் பழி துயரங்கள் இலராய்ச் சுகமே வாழ்ந்து வருகின்றனர். மீறி நடப்பவர் இம்மையிலும் மறுமையிலும் தண்டிக்கப் படுகின்றனர்.

தீய காரியங்களைச் செய்தால் நரக துன்பம் நேரும்; அரச தண்டனை உண்டாமென இங்ஙனம் அஞ்சியே பெரும்பாலும் மக்கள் அடங்கி ஒடுங்கி நடக்கின்றனர். அச்சம் அவனியை அவ நிலையில் ஆண்டு வருகின்றது.

அச்சமே கீழ்கள(து) ஆசாரம்; எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது. 1075 கயமை, என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

கீழான குணமுடைய மக்கள் நல்ல ஒழுக்க வழிகளில் இயல்பாக இசைந்து நடவார்; மேலோர் அடிப்பர்; இராச தண்டனை கிடைக்கும் என்னும் அச்சத்தாலேயே அடங்கி நடப்பர். ஏதேனும் பொருள் வருவாய் கிடைக்கும் என்றாலும் ஒப்புக்கு ஆசாரம் காட்டி ஒழுகி வருவர் எனக் கயவர்களைக் குறித்து வள்ளுவர் இவ்வாறு உரைத்திருக்கிறார்.

இந்த இயல்பின்படி இப்பொழுது சீர் தூக்கி நோக்கினால் எவ்வளவு கயவர்களை இவ்வுலகம் சுமந்து கொண்டிருக்கின்றது என்பதை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு அஞ்சியும் ஆசைகொண்டும் ஆசாரம் கொள்ளாமல், தம் நெஞ்சமே சான்றாய் நேர்மையோடு ஒழுகி வருபவர் சிறக்த சான்றோராய் உயர்ந்து விளங்குகின்றனர்.

உத்தமனுக்குத் தன் சித்தமே சட்டமாய்ச் செறிந்திருக்கின்றது. உலக சட்டங்கள் அவன் எதிரே தலைவணங்கி நிற்கின்றன. அரசும், தெய்வமும், பரசிவரும் நெறிமுறைகள் அவனிடம் வரிசை புரிந்தருள்கின்றன.

அரிய பேறுகளுக்கும், பெரிய மகிமைகளுக்கும் உரிய துணையாய் அமைந்துள்ள நெஞ்சத்தைப் புனிதமாகப் போற்றிவரும் அளவே மனிதன் மாட்சி பெற்று வருகின்றான்; அதனைப் பழுது படுத்தி ஒழுகின் அவன் இழிமகனாய் அழிகின்றான்
.
மனத்தை மழுக்கி மதிகேடாய் மதம் மீறித் தீமை புரிந்து திரிவோரை நெஞ்சதனைக் கொன்று நடப்போர் என்றது. அத்தீவினையாளரைக் கொலைஞர் என்றது தமது இனிய உயிர்த்துணையைக் கொன்ற கொடுமையும் மடமையும் அறிய வந்தது.

உள்ளம் உயிர்க்குக் கண்ணாய் ஒளி புரிந்துள்ளது. நல்லது இது, தீயது இது; பழி இது, பாவம் இது; புகழ் இது, புண்ணியம் இது என யாண்டும் எவர்க்கும். என்றும் நெஞ்சம் அறிவுறுத்தி நிற்கின்றது. நின்றும் மனிதன் ஆசையை அடக்க முடியாமல் நீசங்களைப் புரிந்து விடுகின்றான்

தவறான காரியங்களைப் புரிவது மனிதனுக்கு இயல்பன்று; மயலினால் தனது இயல்பினை மீறி அயலான அவங்களைச் செய்ய நேர்கின்றான். பிழை செய்ய எண்ணும் பொழுதே, ’அது பழி, பாவம்; அவ்வழியில் இயங்காதே' என உள்ளம் துடித்து உணர்த்தும்; கள்ளம் புரியத் துணிகின்ற எவனும் இந்த நெஞ்சின் அனுபவத்தை நேரில் கண்டிருப்பான்; அங்ஙனம் கண்டதனாலேதான் தன் தீமையை யாரும் காணாதபடி மறைந்து செய்ய ஒதுங்கிப் பதுங்கி ஒளிந்து போகின்றான்; நெஞ்சம் உணர்த்தியும் கேளாமையால் அவன் வாழ்வு பாழாகின்றது.

தன் நெஞ்சத்தை நிலைகுலைத்துப் புலைவழிகளில் புகுபவனிடம் அஞ்சாமை ஆண்மைகள் அமைந்து நில்லாது, அச்சமும் திகில்களுமே யாண்டும் அடர்ந்து நின்று தொடர்ந்து வருத்தும். உள்ளம் கள்ளமுறவே உயிர் எள்ளலுறுகின்றது.

நெறி கேடராய் நெஞ்சு நிலைதிரிந்தவர் உறுதிநலம் குன்றி என்றும் பஞ்சைகளாய்ப் பரிதபித்து நிற்றல் கருதி கொலைஞர் போல் நின்று வெருள்வர் என்றது.

வெருளல் - அஞ்சி அலமருதல்.

நேரிசை வெண்பா

ஈன நினைவால் இழிவடைந்த நெஞ்சம்பின்
ஊனம் மிகுந்தே உழலுமால் - ஞானவொளி
மேவாது மேன்மை விளையாது வெய்யதுயர்
ஓவாது மூளும் உருத்து.

என்னும் இதன் கருத்தைக் கண்ணுான்றிக் காண வேண்டும். உள்ளம் பழுதபடின் உளவாகும் இழிவுகளையும் அழிவுகளையும் இதனால் அறிந்து கொள்கின்றோம்.

நெஞ்சோடு இணைந்து நெறி நின்று ஒழுகுபவன் நிலையான இன்பத்தைப் பெறுகின்றான்; அல்லாதவன் பொல்லாத துன்பங்களை அடைந்து புலையாடி ஒழிகின்றான்.

மனிதனது உள்ளம் நெறிமுறை தழுவியது; அது வழுவாய் விலகின் இழிவடர்த்து இடர் விளைந்து விடுகின்றது.

கலி விருத்தம்
(புளிமா புளிமா புளிமா புளிமா)

நெறியைப் படைத்தான். நெருஞ்சில் படைத்தான்;
நெறியில் வழுவின், நெருஞ்சில் முட்பாயும்;
நெறியில் வழுவா(து) இயங்க வல்லார்க்கு
நெறியில் நெருஞ்சின் முட்பாய் கிலாவே. - திருமந்திரம்

நெஞ்சம் திறம்பி நெறி வழுவின் நெடுந்துயர் விளையும் என இது உணர்த்தியுள்ளது. உவமக் குறிப்பு ஓர்ந்து சிந்கிக்கத்தக்கது.

மனத்தை மாசு படுத்தாதே; அதனை நேர்மையோடு பேணிச் சீர்மையுடன் ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jul-19, 5:22 pm)
பார்வை : 70

மேலே