பாரம் சுமக்கும் பட்டாம்பூச்சிகள்

கல்விக்கூடங்களே
குழந்தைகள் யாவும்
வண்டிமாடுகளல்ல
வண்ணத்துப்பூச்சிகள்
அவர்கள் மேலுள்ள
சுமைகளை
இறக்கிவிட்டுச்
சிறகுகளை
ஏற்றிவிடுங்கள்
கர்பப்பைகளின்
சுமைகள் கூட
பத்து மாதங்களில்
முடிவுக்கு வந்துவிடும்
ஏனோ தெரியவில்லை
புத்தகப்பைகளின்
சுமைகள் மட்டும்
பத்து வருடங்களுக்கு மேல்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
பிள்ளைகளுக்குப்
பாடச்சுமை
பெற்றோர்களுக்குப்
பணச்சுமை
ஆசிரியர்களுக்குப்
பணிச்சுமை
இப்படியாக
ஒவ்வொருவர் முதுகிலும்
ஒவ்வொரு சுமை
இதன் காரணமாகவே
உறக்கம் வந்தும்கூட
மூட மறுக்குது இமை
அன்புக்குழந்தைகளின்
அவலங்களைக் கண்டு
தாங்கிக்கொள்ளும்
தாய்மார்களுக்கு
இதயம் என்ன கல்லா?
எனக் கேட்டால் - அது
நிச்சயமாய்க் கல்தான்
பிள்ளைகளின் மனச்சுமையை
ஏந்தி நிற்கும்
சுமைதாங்கிக் கல்
சாதிகள் இல்லையென்று
வேள்விகள் செய்தார்
மகாகவி பாரதியார்
ஆனால் - இன்று
சாதிகள் பெயரிலேயே - தேர்வுக்
கேள்விகள் இடம்பெறச்செய்த
மகாபாவி யார்?
தான் கற்ற கல்வியைப்
பிறர் கற்க நேர்ந்தால் - அது
ஆகப்பெரிய அபச்சாரம்
அதனால்தான் - இன்று
கலைமகளை நான் தருகிறேன்
விலைமகளை நீதாவென்று
கல்வியை வைத்தே செய்கிறார்
இழிவான விபச்சாரம்
கடைக்கோடி மனிதனும்
கல்விநீர் பருக - அறிவு
மடைதிறக்கச் செய்திட்டார்
மகத்தான பெருந்தலைவர்
இன்றைய நிலையிலோ
எடைபோட்டுத் தரம் பிரித்து
எளியோர்க்குக் கல்வியை
தடை போட்டுத் தடுக்கின்றார் - பணப்
பேய் பிடித்த பெருந்தலைகள்
பிறமொழி என்பது
பொன் போன்றது - அது
நம் புறத்தேவைக்கு
தாய்மொழி மட்டுமே
கண் போன்றது - அதுவே
ஒளி தரும் வாழ்க்கைக்கு
அடித்தட்டு மக்களின்
வாழ்வைத் தடுத்து
மேல்தட்டு மக்களின்
மேன்மையை உயர்த்துவது
கல்விக்கொள்கையல்ல
கண்மூடித்தனமான
கல்விக்கொள்ளை
அன்றைய காலத்தில்
ஆலயக்கதவுகளை
தட்டவிடாமல்
ஆச்சாரங்கள் தடுத்தன
இன்றைய பொழுதில்
கல்விக்கதவுகளை
எட்டமுடியாமல் - தவறான
தேர்வு முறைகள் தடுக்கின்றன
பாமரனுக்கொரு கல்வி
பணக்காரனுக்கொரு கல்வி - என
அரசுதான் பரிமாறிவிட்டது
ஆனால் - இன்று
உயர்ந்தவனுக்கும்
தாழ்ந்தவனுக்கும்
ஒரே தேர்வுதான் எனக் கூறி
ஏழைக்கு எதிராக - நிறம் மாறும்
பச்சோந்தியாய் உருமாறிவிட்டது
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம் - இது
பேரறிஞரின் பெருவாக்கு
ஏழையின் படிப்பிலும்
இறைவனைத் தேடலாம்
என்ற நிலையை - இளைஞனான
நீயே உருவாக்கு