வறுமையின் வாக்குமூலம்

என்னை வறுமையின் வண்ணத்தில
வரைஞ்சது யாரோ;
நாளுக்குநாள் பசியின்'பற்று' கூடுது,
பிறக்கும்போது உண்டான பசிக்கே
இன்னும் பதில் சொல்லி முடிக்கல...

என் எலும்புக்கும் தோலுக்கும்
உள்ள நெருக்கம் கூடியிருச்சு;
எப்பவோ தின்ன உணவ நெனச்சு
வாய் காற்ற அசபோடுது;
நாக்க தின்னலாமானு பல் யோசிக்குது;
பல்லை கொஞ்சம் தடவி
நாக்கும் தன் பசிய போக்கிக்குது...

பலநாள் கழிச்சு ஒரு ரொட்டிதுண்டு
எங்கிருந்தோ ஆசிர்வதிக்க வந்துச்சு;
பாதி பிரிச்சு கொடுத்தா
அம்மா உசுரு கொஞ்சம் ஓடுமுன்னு
மூளை சொல்றதுகுள்ள
வாய் முழுசா தின்னுருச்சு,
அவ உசுரும் போயிருச்சு...

இன்னிக்காவது உசுர குடுப்பியானு
காற்று வந்து கேட்டுட்டு போகுது;
இந்த உடல் எப்போ படையல் ஆகுமுன்னு
பருந்தும் மெல்ல பாத்துட்டு போகுது;
என்ன செய்ய உசர எடுத்து கொடுக்ககூட என்கிட்ட சக்தி இல்ல...

ஆயுதம்தான் நாட்டின் வீரியம்
என்று நம்புற உலக தலைவர்களே;
அந்த தொகையில ஒரு பருக்கையை
எங்க பசி தீர ஒதுக்குங்க;
முடியலேனா...
ஆயுதத்தை ஒருமுறை எங்க மீது பரிசோதித்து
அதன் தரம் அறிந்து கொள்ளுங்க.

எழுதியவர் : ஆ.முத்துக்குமார் (28-Jul-19, 10:13 pm)
சேர்த்தது : ஆமுத்துக்குமார்
பார்வை : 2466

மேலே