அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

வணக்கம்,

கவிஞர் அபி குறித்து கேள்விப்பட்டதுண்டு அதிகம் படித்ததில்லை. இனி படிக்க வேண்டியவற்றில் குறித்துள்ளேன். விக்கிப்பீடியாவில் இவர் குறித்து கட்டுரை இல்லை என்பதைக் கவனித்தேன்(தற்போது கட்டுரையை உருவாக்கிவிட்டேன்). கவனிக்கப்பட வேண்டிய ஆளுமைகளை அங்கீகரிக்கும் தங்கள் அமைப்பிற்கும் கவிஞர் அபிக்கும் வாழ்த்துக்கள்.

நீச்சல்காரன்
-----------------------------------------------------
படிக்க
அபி விக்கிப்பீடியா


அன்புள்ள ஜெ,



கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி. கவிதைகளை இப்போதுதான் வாசிக்கிறேன். இன்றைய சூழலில் கவிதைகள் இணையத்தில் இருந்தாகவேண்டும். இல்லையேல் வாசிக்க வழியே இல்லை. தொகுப்புகள் கைக்குக் கிடைப்பதில்லை. வாங்கினாலும்கூட எங்காவது இருக்கும். அவசரத்திற்கு கிடைக்காது



அபியின் கவிதைகளை நூலாக வாசிப்பது கொஞ்சம் கஷ்டம். அல்லது அவற்றை மேஜைமேல் ஒரு மாசமாவது வைத்திருக்கவேண்டும். அவ்வப்போது எடுத்து ஒரு சில வரிகள் வாசிக்கவேண்டும். அப்படியே வைத்துவிட்டு மேலே யோசிக்கவேண்டியிருக்கும். அவருடைய கவிதைகளை ஒற்றையடியாக வாசிக்க முடிவதில்லை. ஒரே கவிதையைத் திரும்பத்திரும்ப வாசிக்கிறோமா என்ற சந்தேகம் வரும். இது எனக்கு ஹிந்துஸ்தானி சங்கீதம் கேட்கும்போதும் தோன்றும். மலைகளைப் பார்க்கும்போதெல்லாம் எல்லா மலையும் ஒன்றுபோல இருக்கிறதா என்று தோன்றுகிறதே அதேமாதிரித்தான்.



வெறும் சித்திரங்கள் வழியாகவே கவிதை எவ்வளவு தூரம் கொண்டுசெல்லமுடியும் என்பதை அபியின் கவிதைகள் காட்டுகின்றன



ஆடுகள் மலையிறங்கித்
தலைதாழ்த்தி வருகின்றன

வானம் சுற்றிலும்
வழிந்து இறங்குகின்றது



வானம் சுற்றிலும் வழிந்து இறங்குவது அபாரமான வரி. ஆனால் அதைப்போலவே மேய்ந்து கனத்து திரும்பி வரும் ஆடுகளும் , அவற்றில் குடிகொள்ளும் மலையும், அபாரமான வரிதான்

அபிக்கு என் வாழ்த்துக்கள்



எஸ்.ரவிச்சந்தர்

*

அன்பின் ஜெ!

காலையில் ஐந்து மணிக்குள் ரெடியாகி மெல்ல சிறியதொரு பிரார்த்தனை, லெமன் டீயுடன் என் நாளை தொடங்குவேன். வழக்கமாக சற்று காலாற நடந்துவிட்டு, தினசரிகளை பார்த்த பிறகு உங்கள் தளத்துக்கும், முகநூல் ஸ்டேடஸ், வாட்ஸப் என துருவத் தொடங்குவேன். கொஞ்சம் நாளாகவே “விஷ்ணுபுரம் விருது 2019” எப்பொழுது அறிவிக்கப்படுமென்று ஆவலுடன் காத்திருந்தேன். அதிகாரப்பூர்வமாக இது பொதுவெளியில் வைக்கப்பட்டவுடன் முதல் ஆளாக காலை ஐந்து மணிக்கே அபி சாருக்கு போன் செய்தேன். உள்ளபடியே மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன்.



டேவிட் நார்மென் என்கிற ஐரிஷ்காரரின் செயலராக இருந்தேன். “excel yourself”. “Surpass yourself” “outdo yourself” என்பார். “கொங்குதேர் வாழ்க்கை – 2” உடனடியாக புரட்டத் தொடங்கினேன். அபி எழுதியவை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவே. முந்தைய ஆண்டு அனுபவங்களின் அடிப்படையில் முகநூல் பக்கத்தில் பல்வேறு முகாம்களில் இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் விருது குறித்து நேர்மறையாகவே எழுதியுள்ளதாக அறிகிறேன். சிறிய சலசலப்புகூட காணவில்லை, அதுவே “அபி”க்கு கிடைத்த ஏற்பாக கருதுகிறேன். மகிழ்ச்சி. நன்றி,



கொள்ளு நதீம், ஆம்பூர்.

எழுதியவர் : நீச்சல்காரன்------------எஸ்.ரவிச (3-Aug-19, 4:01 am)
பார்வை : 33

மேலே