வெய்ய வனவிலங்கும் மெய்யன்பு உடையவன்முன் பணியும் - நேயம், தருமதீபிகை 368

நேரிசை வெண்பா

வெய்ய வனவிலங்கும் மெய்யன்(பு) உடையவன்முன்
பைய வணங்கிப் பணியுமே; - தெய்வமே
அன்பின் வடிவம் அதனை யுடையவன்
இன்பின் வடிவம் இவண். 368

- நேயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உண்மையான அன்புடையவன் எதிரே கொடிய காட்டு மிருகங்களும் பணிந்து வணங்கும்; அன்பு தெய்வ வடிவமாதலால் அதனையுடையவன் என்றும் ஆனந்த வடிவமாய் அமர்ந்திருப்பான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஆன்ம உருக்கத்தில் அதிசய மகிமைகள் அமைந்திருக்கின்றன. தண்ணளியும், தயையும் புண்ணிய விளைவுகளாய்ப் பொலிந்து வருதலால் அவை உயிரினங்களுக்கு உயர் நலங்களை அருளுகின்றன. உள்ளம் கனிய உயிர் ஒளி மிகுந்து உயர்கின்றது. பிறவுயிர்களிடம் இரங்கியருளும் அளவு மனிதன் பெரியவனாகின்றான். இறைவன் அருள் அவனுக்குக் தனி உரிமையாய் இனிமை புரிகின்றது.

Blessed are the merciful: for they shall obtain mercy.

’இரக்கமுள்ளவர் பாக்கியசாலிகள்; தெய்வ கிருபையை அவர் எய்துகின்றனர்' என ஏசுநாதர் இவ்வாறு கூறியுள்ளார்.

அன்பு, இரக்கம், அருள் என்பன பரிபக்குவமான ஆன்ம நீர்மைகளாய்க் கனிந்து மிளிர்கின்றன. இரக்கம் என்றொரு பொருளிலாத நெஞ்சினர்’ (இராமாயணம்) என அரக்கரைக் குறித்திருத்தலால் இரக்கம் இல்லாதவரது இழிவும், அஃது உடையவரது உயர்வும் அறியலாகும்.

’தெய்வமே அன்பின் வடிவம்’. என்றது உய்தி உண்மைகளை ஊன்றி உணர வந்தது. கடவுளுக்கு யாதொரு வடிவமும் தனியே இல்லை. அன்பர் கருதிய வடிவமே வடிவாய்க் கருணை புரிகிறான்.

பள்ளம் உள்ள இடத்தில் வெள்ளம் புகுதல் போல் உள்ளம் உருகிய உயிரில் இறைவன் உறைகின்றான், மனம் உருக மனிதன் புனிதன் ஆகின்றான். அன்பு உயிரை இன்ப உருவம் ஆக்குதலால் அது தெய்வம் என நின்றது.

அன்பைப் பெருக்கி எனதா ருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே! 1

என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்து
அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே! 2

எனத் தாயுமானவர் இவ்வாறு கரைந்திருக்கிறார். அன்பே பேரின்ப நிலையம் என இவர் கருதியுள்ளமை அறியலாகும்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அன்பினால் அடியேன் ஆவியோ(டு) ஆக்கை
..ஆனந்த மாய்க்கசிந்(து) உருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
..யானிதற் கிலன்ஓர்கைம் மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
..முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
..சீருடைச் சிவபுரத் தரைசே. 2, 22 கோயில் திருப்பதிகம் திருவாசகம், எட்டாம் திருமுறை

அன்பினால் அடைந்த ஆனந்தப் பேற்றை வியந்து மகிழ்ந்து பரமனை நோக்கி மாணிக்க வாசகர் இங்ஙனம் பாடியுள்ளார். உள்ளம் உருகி உயிர் பரவசமாய் வந்த உரைகளாதலால் இவற்றின் கருத்துக்களைக் கருத்துடன் கரைந்து காண வேண்டும்.

’வன விலங்கும் அன்புடையவன் முன் பணியும்’ என்றது அன்பின் அற்புத மகிமை அறிய வந்தது. அன்புடையவன் எங்கும் இனியனாய் இதம் புரிதலால் எவ்வுயிரும் அவனைத் தெய்வமாக நினைந்து கொண்டாடுகின்றது.

சீவ தயை நிறைந்த மாதவர்கள் இருக்கும் இடத்தில் கொடிய மிருகங்களும் இனியனவாய் அமைந்து விடுகின்றன. அகத்திய முனிவரது ஆசிரமத்தில் இந்த அதிசயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சில அடியில் வருகின்றன.

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

அரிமான் ஏற்றில் கூன்பிறைக்கோட்(டு)
..அண்ணல் வேழம் முதுகுரிஞ்சும்:
வெருவாச் சரபம் தலையணையாய்
..வெங்கண் அரிமான் விழிதுயிலும்:
புரிகோட்(டு) இரலை புனிற்றுமறி
..பொங்கி எழுந்து வால்குழைத்துப்
பரிவால் கடைவாய்ப் பால்ஒழுகப்
..பாய்வெம் புலியின் முலைஉண்ணும்: 1

கேழற் பன்றி மருப்பின்நிலங்
..கிளையா ஞமலி மேல்துயிலும்;
பேழ்வாய்க் கரடி மயிருளர்ந்து
..முதிர்சூல் மந்தி பேன்எடுக்கும்:
ஊழிக் கனல்பாய்ந்(து) ஒழுகுவிழி
..உரகம் கீரி மேலுறங்கும்;
மாழைச் சிறுமான் குழக்கன்றை
..வந்து நரிகள் தைவருமால், 2 காசி காண்டம்

மூர்க்கமான மிருகங்களும் முனிவர் நிலையத்தை அடுத்தமையால் இன்னவாறு இனிய நீர்மை வாய்ந்திருந்தன. சீவ தயையுடையவர் எதிரே யாவும் தலை வணங்கி அடி தொழுகின்றன. அன்பு கடவுளின் வடிவம்; அதனையுடையவன் அளவிடலரிய இன்ப நிலையை அடைகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Aug-19, 11:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே