இறையாகும் நெருப்பு இரையாக்கும் நெருப்பு
🔥பொங்கும் அனலே புனிதப் பொருளே
எங்கும் ஒளிரும் செம்மைக் கனலே
ஆதி மனிதனின் முதன்மைத் தேடலே - வேதம்
ஓதி வளர்க்கும் வேள்விச் சுடரே!
எரிமலையை எதிர்த்து நிற்கப்
புவியில் ஏதும் ஜீவனில்லை
காட்டுத் தீயைக் கடந்து செல்லக்
காற்றும் கூடத் துணிவதில்லை!
தொன்று தொட்ட வழக்கமென்று
உடன் கட்டை ஏற்றினார்கள்
கலங்க மற்ற உந்தனையே
கலக மூட்டக் கொளுத்தினார்கள்!
இரையைப் பாங்காய் சமைத்திடவே
அடுப்பில் அனலைக் கூட்டினார்கள்
இறையைத் தாமும் வணங்கிடவே
அகல் விளக்கில் ஏற்றினார்கள்!
வெம்மை தந்து ஜனிக்க வைப்பாய்
தணிந்து விட்டால் மறிக்க வைப்பாய்
தீண்டி விடச் சுடர் தருவாய் - எல்லை
தாண்டி விட்டால் பொசுக்கிடுவாய்!
இருள் கலைந்து ஒளி தருவாய்
மருள் நீக்கி வலி அருள்வாய்
குளிர் நீங்கத் தனல் ஆவாய்
தளிர் தழைக்க உயிர் ஆனாய்!
கோடி யுருக் கொண்டாலும்
கொண்ட குணம் மாறவில்லை
பெண்மை யந்தன் பெயராலே
பெருமை கொள்ளும் மாற்றமில்லை!!! 🔥