ஆதி முதல்வன் அருள்நிலையை ஆராய்ந்து நலனுணர்ந்து கோடல் நலம் - நியமம், தருமதீபிகை 400

நேரிசை வெண்பா

ஆதி முதல்வன் அருள்நிலையை ஆராய்ந்து
நீதி முறையின் நெறியோர்ந்து - மோதும்
புலனடல் கண்டு புனிதமுடன் நின்று
நலனுணர்ந்து கோடல் நலம். 400

- நியமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இறைவனுடைய கருணை நிலையைக் கருதி உணர்ந்து, நீதி முறைகளைத் தெளிந்து, பொறி புலன்களின் தீதுகளை ஒழிந்து நெறி வழுவாது நின்றால் நிலையான இன்ப நலங்கள் பெருகி விளையும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதப் பிறவி அரியதாயினும், சிறிய அறிவும் சில வாழ்நாளும் பல அலமரல்களும் உடையதாய் மருவியுள்ளது. இந்நிலையிலிருந்து நிலையான இன்ப நிலையை அடைய வேண்டியவனாய் மனிதன் அமைந்து நிற்கின்றான்.

வழி தெரிந்து விழி திறந்து நடப்பவன் கருதிய இடத்தை இனிது அடைகின்றான்; அது போல் விதி முறை தெளிந்து ஒழுகுபவன் கதி நிலையை எளிதே காண்கின்றான். பேரின்ப வீட்டைக் காண வழிகள் பல உள்ளன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன அந்த நெறியின் வகைகள் ஆகும். எத்தனையோ வழிகள் இருந்தாலும் அத்தனையும் சித்த சுத்தியாளன் எதிரே தெளிவாய் நிற்கின்றன.

நியமம் ஆன ஒழுக்க முறையால் நெஞ்சம் தூய்மை ஆகின்றது. தெளிவான நல்ல கண்ணாடியில் உருவங்கள் தோன்றுதல் போல், தூய உள்ளத்தில் உறுதியுண்மைகள் இனிது தெரிகின்றன. தெரியவே அது தெய்வக் காட்சியாய்த் தேசு மிகுந்து உய்வைத் தருகின்றது. உள்ளம் புனிதமுற எல்லாம் இனிமையுறுகின்றன.

கடவுளை ஆதி முதல்வன் என்றது. கால தேச நிகழ்வுகள் யாவும் கடந்து என்றும் தனி முதல் தலைவனாய் நிலவியுள்ள பரம்பொருளின் திருவருளை உரிமையாக அடைந்து கொள்வதே பிறந்த சீவனுடைய உயர்ந்த பேறாம்.

கடவுள் தரும உருவினர்; கருணை நிலையினர்; இந்தக் குண நீர்மைகளை மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு மருவுகின்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவன் தெய்வமாய்ச் சிறந்து திகழ்கின்றான். பண்புகள் படிய இன்பங்கள் படிகின்றன.

தயையுடையவனது செயல் இயல்கள் என்றும் இதமாய் யாண்டும் இனிமை சுரந்து வருதலால் எவ்வுயிர்களும் அவனைத் தாயாகவும் தெய்வமாகவும் கருதி வாயார வாழ்த்தி வருகின்றன.

தன் உள்ளத்தில் அருள் நலம் தோய்ந்தவுடனே உலகத்தில் அவன் பரம்பொருள் இனமாய் மதிக்கப் படுகின்றான். கருணையுடையவனைக் கருணைக் கடலாகிய கடவுள் தனது இன உரிமையாகத் தழுவிக் கொள்ளுதலால் அவனுடைய மகிமை அளவிடலரியதாய் ஒளி மிகப் பெறுகின்றது.

அறுசீர் விருத்தம்
(காய் 4 மா தேமா)

எவ்வுயிரும் பொதுஎனக்கண்(டு) இரங்கியுப கரிக்கின்றார்
..யாவர்? அந்தச்
செவ்வியர்தம் செயலனைத்தும் திருவருளின் செயலெனவே
..தெரிந்தேன் இங்கே
கவ்வையிலாத் திருநெறியத் திருவாளர் தமக்கேவல்
..களிப்பால் செய்ய
ஒவ்வியதென் கருத்தவசீர் ஓதிடஎன் வாய்மிகவும்
..ஊர்வ தாலோ. 5296

கருணைவொன்றே வடிவாகி எவ்வுயிரும் தமமுயிர்போல்
..கண்டு ஞானத்.
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநீதி
..செலுத்தா நின்ற
பொருள்நெறிசற் குணசாந்த புண்ணியர்தம் திருவாயால்
..புகன்ற வார்த்தை
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல் வார்த்தைகள்என்(று)
..அறைவ ராலோ, 5298 தனித்திருவலங்கல், ஆறாம் திருமுறை, திரு அருட்பா

எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணிப் பேணுகின்ற தண்ணளியாளரே புண்ணிய சீலர்; அவர் தெய்வ நீர்மையர்; அவருடைய வார்த்தைகள் வேத வாக்கியங்களாய் விளங்கி வருகின்றன என இவை விளக்கியுள்ளன.

சீவ தயை தேவ கதி ஆகின்றது. எவ்வுயிர்க்கும் எவ்வழியும் இதமே காணலால் கருணையாளன் நித்திய இன்பத்தைக் காண்கின்றான். தண்ணளி விண்ணமுதாய் விளைந்து வருகின்றது.

விடய இச்சைகளின் கொடுமையை உணர்ந்து உறுதி தெளிந்து ஒழுகுதலை ’புலன் அடல் கண்டு’ என்றது.

தேக போகங்களையே நாடி மோகமுடன் திரியின் முடிவில் அதனால் நாசமே உண்டாம்; பொய்யான மையல் வெறியில் இழிந்து உழல்பவர் மெய்யான தெய்வ நெறியை இழந்து போகின்றாராதலால் வெய்ய துயரங்களையே அடைந்து நோகின்றார்,

நியமம் உடையவன் நெறி முறையே சென்று நிலையான இன்ப நிலையை அடைகின்றான்; நியமம் தவறினவன் அவநிலையில் ஓடி அவல நிலையில் வீழ்கின்றான்.

புலன்களை அடக்கி ஒழுகிய அளவு மனிதன் புனிதனாய் நலன்களைக் காண்கின்றான். நியமமின்றி மனம் போனபடியே திரிகின்றவன் மிருகமாய் இழிந்து ஒரு நலனும் காணாமல் பருவரலே கண்டு படுதுயர் அடைந்து பதைத்து ஒழிகின்றான்.

நல்ல அறிவுடைய மனிதனாய் வந்தும் உயர்ந்த குறிக்கோளான நியமம் இல்லாமையால் இழிந்த விலங்காய்க் கழிந்து போக நேர்ந்தான். நிலைமையை நினைந்து நோக்கின் நியமத்தின் நன்மையும் தன்மையும் நன்கு தெளிவாம்.

சீவனுக்கு உரிய துணையாய் அரிய புணையாய் இனிய சஞ்சீவியாய் நியமம் அமைந்துள்ளமையால் அதனைக் கைக்கொண்டவர் நியம சீலராய் உயர்ந்து நிலையான கதியை அடைகின்றனர்.

நியமம் உடையவர் எப்படி இருப்பார்? பொய் பேசார்; புறங் கூறார், யார்க்கும் இடர் செய்யார்; எவ்வுயிர்க்கும் இரங்கி அருளுவார்; எல்லாரையும் தம் உயிர் போல் எண்ணுவார்; பொல்லாதவர்க்கும் நல்லதே போதிப்பார்; பெரியோர்களைப் புகழ்ந்து போற்றுவார்; பகைமை வெறுப்பு முதலிய சிறுமைகளை நெஞ்சில் கொள்ளார்; தெய்வ சிந்தனையுடன் மேலான எண்ணங்களையே யாண்டும் மேவி யிருப்பார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

உறுவர்ப் பேணல், உவர்ப்பின்மை;
..உலையா இன்பம் தலைநிற்றல்;
அறிவர் சிறப்பிற்(கு) எதிர்விரும்பல்;
..அழிந்தோர் நிறுத்தல், அறம்பகர்தல்;
சிறியார் இனத்துச் சேர்வின்மை,
..சினம்கை விடுதல்; செருக்கவித்தல்;
இறைவன் அறத்து ளார்க்கெல்லாம்
..இனியர் ஆதல் இதுதெளிவே. 2816

- நற்காட்சி, முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

தெளிவான நியம நெறிகளைக் குறித்து வந்துள்ள இது இங்கே சிந்திக்கத் தக்கது. உறுவர் - மேலோர். அழிந்தோர் நிறுத்தல் - தளர்ந்து தாழ்ந்தவரை ஆதரித்து உயர்த்துதல். இதில் குறித்துள்ள பத்து குண நலங்களையும் உய்த்துணர்ந்து ஒழுகுபவர் உத்தம நிலையராய் ஒளி பெறுகின்றனர்.

’நலன் உணர்ந்து கோடல் நலம்’ என்றது உயிர்க்குறுதியான நன்மையைத் தெளிந்து தன்மையில் உயர்தல் எம்மையும் இதமாம் என்பது உணர வந்தது.

இந்த மனித உடம்பு அதிசய அமைதிகளை உடையது. இதில் குடிபுகுந்துள்ள ஆன்மா பரமான்மாவின் உறவினம். மனிதன் பாவ வழிகளில் புகுந்தால் உயிர் பழுதாய் ஒளி மழுங்கும், அவ்வாறாயின் எவ்வழியும் வெவ்விய துயாங்களை அனுபவிக்க நேரும்; அங்ஙனம் நேராதபடி புண்ணிய எண்ணங்களைப் பேணிப் புனித நிலையில் ஒழுகி இனிய பேரின்ப நலனை அடைவதே மனித சன்மத்தின் மாண் பயன் ஆகும். பிறந்த பயனை விரைந்து பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Aug-19, 10:15 pm)
பார்வை : 333

மேலே