ஓடி உழலும் உளத்தை நாடி உணர நயமாகப் பழகி வருக - அமைதி, தருமதீபிகை 404

நேரிசை வெண்பா

ஓடி உழலும் உளத்தை ஒருமுகமாய்
நாடி உணர நயமாகக் - கூடிப்
பழகி வருக; பழக்கம் படியின்
விழவு விளையும் விரிந்து. 404

- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

விடயங்களில் ஓடி உழலுகின்ற உள்ளத்தை ஒரு முகமாக்கி வருக; அதனால் அரிய பல நன்மைகள் பெருகி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உள்ளத்தை உரிமையாக்கி ஒழுகுக என்கின்றது.

மன உணர்வு வாய்ந்துள்ளமையால் மனிதன் உயர்ந்து விளங்குகின்றான். மனிதனுடைய பெருமைகள் யாவும் மனத்தினிடமே மருவியுள்ளன. அதனை இனிமையாக உரிமை செய்து கொண்டவன் பெரிய மனிதனாய் அரிய மகிமைகளை அடைகின்றான்.

எதையாவது ஒன்றை நினைந்து சலித்துக் கொண்டே இருப்பது மனத்தின் இயல்பு. அதனால் அதனை ஒரு நிலையில் நிறுத்துவது அரிய செயலாயது. உலக இச்சைகளில் வெறி மிகுந்து அலைவதே இயல்பாக உடைய மனத்தை எவன் நிலையாக அடக்கி அமைதிப்படுத்தி வருகிறானோ, அவன் உயர் நிலையாளனாய் ஒளி மிகப் பெறுகிறான். உள்ளம் பண்பட்டு அடங்கின் அறிவும் ஆற்றலும் வெள்ளமென விரிந்து வருகின்றன. அது பண்படாமல் பல வழிகளிலும் திரிந்து பழுது படுமாயின் ஒரு பலனும் காணாமல் இழிவுடையதாய் மனித வாழ்வு அழிவே அடைகின்றது.

மனத்தை நெறியே செலுத்தி மதியோடு பேணி வருகின்றவன் மலையென உயர்ந்து பல மகிமைகளை அடைகின்றான்; அங்ஙனம் பேணாதவன் பேதையாய் இழிந்து யாதொரு நலனும் காணாமல் அவமே கழிகின்றான்.

மனம், மனிதன் என்னும் பெயர் நிலைகளிலிருந்து இனவுரிமைகளை உணர்ந்து கொள்ளலாம். பறவை மிருகங்கள் முதலிய வேறு பிராணிகளை விட மனிதன் பெரியவன் என வந்தது மனத்தினாலேயாம்.

The main difference between men and the animals is the difference in their power of concentration. – Vivekananda

'உள்ளத்தை ஒருமுகப்படுத்தி உணரும் ஆற்றலினாலேதான் விலங்குகளினும் மக்கள் மேலோராய் விளங்கி நிற்கின்றார்' என விவேகானந்தர் கூறியுள்ளார்.

மனிதனுக்கு அரிய மாட்சியாய் அமைந்துள்ள மனத்தை இனிமையாக வசப்படுத்திய அளவுதான் பெருமையும் இன்பமும் உரிமையாகின்றன. அதன் இயல்பான பாடு தெரிய ‘ஓடி உழலும்’ என்றது.

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

காடும் கரையும் மனக்குரங்கு
..கால்விட்(டு) ஓட அதன்பிறகே
ஓடும் தொழிலால் பயனுளதோ
..ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்சோதி
..அருளைப் பெறுதற்(கு) அன்புநிலை
தேடும் பருவம் இதுகண்டீர்!
..சேர வாரும் செகத்தீரே!

எனத் தாயுமானவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனால் அவரது ஆன்ம பரிபாக நிலையை அறிந்து கொள்கின்றோம். சபலமுடைமை கருதி மனத்தைக் குரங்கு என்றது. அது போன போக்கில் போனால் ஊனமாம். அதனை வசமாக்கி ஞான நோக்குடன் இறைவனை நோக்கின் நிறை பேரின்பம் உண்டாகும்.

‘கூடிப் பழகி வருக’ என்றது உள்ளத்தோடு ஒன்றி வாழும் உளவு காண வந்தது. கண்டபடி ஓடித்திரியும் இயல்பினையுடைய மனத்தை உடனே வசப்படுத்த முடியாது. அதனை நாளும் நயமாக ஒரு முகமாய் உறவு கொண்டு வரின் நீளத்திரியும் நிலை குறைந்து நெறியே நிலை பெறும்.

கள்ளத்தனமாய் மேய்ந்து திரிகின்ற பட்டி மாட்டைக் கட்டி வைத்துத் தட்டிக் கொடுத்து நல்ல தீனி போட்டு இனிது பேணி உழவு முதலிய தொழில்களில் பழக்கி உடையவன் ஊதியம் பெறுதல் போல், புலன்களிலேயே ஓடிக் களித்து உரங்கொண்டுள்ள மனத்தை அறிவோடு அணைத்து வைத்து நல்ல சிந்தனைகளாகிய உணவுகளை ஊட்டி நலமாகப் பாதுகாத்துவரின் அரிய பெரிய பலன்களை உரிமையாக அடைந்து கொள்ளலாம்.

மனம் எவ்வழியும் கட்டுக்கு அடங்காத கடுவேகமுடையது. வாயு வேகத்தினும் சிறந்தது எனக் கதி வேகங்களுள் மனவேகம் அதி வேகமாக மதிக்கப்பட்டுள்ளது

குதிரைகளின் வேகத்தைக் கூறுங்கால் மனத்தை இணைத்துக் காவியக் கவிகள் கூறுவது வழக்கம்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கொட்புற உலாவுந் தோறும்
..குரத்தடை துகளின் குப்பை
நுட்பமார் அணுக்கள் என்னும்
..நுவலரு மனத்தின் கூட்டம்
கட்புலன் கதுவல் செல்லாக்
..கடுப்பினைக் கற்பான் காலைப்
பெட்புறப் பிடித்தல் போலப்
..பிறங்குமாக் கொணர்மின் என்றான். 21 நைடதம், அன்னத்தை

நள மன்னனுடைய குதிரையின் நிலைமையை இது குறித்துள்ளது. அதனிடம் கதி வேகத்தைக் கற்றுக் கொள்ள விரும்பி மனத்தின் கூட்டம் அதன் காலடியில் பல துகள்களாய் ஒட்டிக் கொண்டது போல் இருந்தது எனப் புழுதி படிந்த குளம்பை இங்ஙனம் சுட்டியிருக்கிறார்.

பொறி வழி உள்ளம் போக்காப் புரவலன்' எனப் புகழ் பெற்றிருந்த நளனது பட்டத்துப் புரவி இவ்வாறு பாராட்டப் பட்டது. உள்ளத்தை அடக்கியாள்பவன் உலகத்தை ஆள்கின்றான்
.
மன வேகத்திலும் கதி வேகம் மிகுந்த பரியை மன்னன் அடக்கி ஊர்ந்தான் என அவனது மதிமாண்பு காண வந்தது.

மனம்.அணு நிலையது; அதி வேகமானது; உயிரின் உணர்வாய் உள்ளமைந்துள்ளது எனப் பொறியின் கருவியை இங்கே அறிகின்றோம்.

கலி விருத்தம்

இன்பம் முதலிய பண்பு றத்தரூஉம்
கருவி யாம்பொறி மனம்;அஃ(து) உயிர்தொறும்
இன்றி யமையாது வேண்ட லிற்பலவாய்,
அணுவாய் நிற்கும் என்ம னார்புலவர்.

என்னும் இதனால் மனத்தின் நிலையும் நீர்மையும் உணரலாகும். இத்தகைய மனத்தை ஒருவழிப்படுத்தி ஒழுகுபவர் விழுமிய நிலையினராய் மேலான கதியை அடைகின்றார்,

நேரிசை வெண்பா

உள்ளப் பெருங்குதிரை ஊர்ந்து வயப்படுத்திக்
கள்ளப் புலனைந்துங் காப்பமைத்து - வெள்ளப்
பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத் தாரைத்
துறவித் துணைபெற்றக் கால். 139 அறநெறிச்சாரம்

உள்ளத்தை அடக்கி ஆள்பவர் உயர்கதி அடைதலை இஃது உணர்த்தியுள்ளது. உரியது அமைய அரியது அமைகின்றது.

பழுதான விழைவுகளில் விழாமல் மனதை அமைதியுடன் இனிது பேணி வருக; அதனால் அதிசய மகிமைகள் உளவாம்.

மனம் வெறி கொண்டு பொறி வழிகளில் ஓடி உழலும்போது அறிவு நிலை குலைகின்றது; அதனால் உறுதி நலம் ஒழிந்து போகின்றது. உள்ளம் ஒடுங்கி அமைதியுறின் உயிரை நெருங்கிக் காண்கின்றது; அந்தக் காட்சி அதிசய மாட்சியாய் ஆனந்தம் அருளுகின்றது

சீவனுக்குப் பேரின்ப நிலையமாயிருத்தலால் சித்தசாந்தம் முத்தி விளைவு என முத்தர்கள் மொழிந்தருளினர்.

In quietness lies our salvation. - Kirby page

'நமது கதி மோட்சம் அமைதியில் உளது' என கிர்பை பேஜ் என்னும் மேல் நாட்டுப் பெரியாரும் இங்ஙனம் கூறியிருக்கிறார். ஆன்ம உய்தியும் அதிசய இன்பமும் அமைதியில உள்ளமையால் அது யாண்டும் துதி செய்யப் பெறுகின்றது.

வெளி முகமாய்க் களி மிகுந்து அலைவதை இயன்றவரையும் குறைத்து உன் உள்ளத்தைச் சாந்தம் ஆக்கு; அங்கே எங்கும் காணாத உயர்ந்த இன்ப நிலையைக் கண்டு நீ உவந்து கொள்வாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Aug-19, 3:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே